தமிழில் ஹாரர் சீசன் இன்னும் முடிவுக்கு வரவில்லை என உணர்த்த வருகிறது ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.இ.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘காட்டேரி’.
காமெடி வித் ஹாரர் திரில்லரக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். ‘யாமிருக்க பயமே’என்கிற வெற்றிப்படத்தை இயக்கிய டீகே இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் . படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, ‘யாமிருக்க பயமே’ படத்தில் பின்னணி இசையமைத்த பிரசாத் இசையமைத்திருக்கிறார் .
இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நடிக, நடிகையர் அனைவரும் படத்தில் தாங்கள் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தின் தோற்றம் மற்றும் உடையில் வந்தது வித்தியாசமாக இருந்தது.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பேசியதிலிருந்து…
ரவிமரியா பேசும்போது, “இந்தப்படத்தில் ஐந்து நாட்கள் நடித்திருந்த நிலையில் என் கேரக்டரை மாற்றி கிட்டத்தட்ட என்னை மூன்றாவது ஹீரோயின் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டார்கள். இன்னொருபக்கம் நாயகன் வைபவும், கருணாகரனும் என்னை கதாநாயகி பக்கமே நெருங்க விடாமல் சதிசெய்து பார்த்துக்கொண்டார்கள். இதுவரை, வில்லன், காமெடி கலந்த வில்லன் என நடித்து வந்த என்னை இயக்குனர் டீகே தான், நீங்க காமெடியனாகவே நடிங்க சார் என புதுக் கேரக்டரில் என்னைப் பொருத்தியுள்ளார் .
ஹாரர் படங்களில் சந்திரமுகிக்குப் பின்னர் புதுவிதமான திரைக்கதை அமைப்பில் உருவாகியுள்ள படம் என்றால் அது காட்டேரிதான் என அடித்துச்சொல்வேன். இந்தப் படத்தில் வரும் காட்சிகளை அடுதத்டுத்து யாராவது சரியாக சொல்லிவிட்டால் நான் ஒரு லட்ச ரூபாய் தருகிறேன்..!” என்றார்.
இசையமைப்பாளர் பிரசாத் பேசும்போது, “பொதுவாகவே ஹாரர் படங்கள் என்றால் எனக்கு பயம்.. அதுவும் இந்தப்படத்தின் ஹாரர் காட்சிகளை பார்த்து, இரவில் இசையமைக்க பயந்துகொண்டு பகலில்தான் இசையமைத்தேன்..!” என்றார்
சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும்போது, “ஸ்டுடியோகிரீன் நிறுவனத்திற்கு இது அறுவடைக்காலம். பண்டிகை நாட்களில் புதுப்படத்துக்கு பூஜை போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.. முக்கியமான ரிலீஸ் தேதிகளில் வெளியிட படங்களை தொடர்ந்து தயாராக வைத்திருக்கிறார்கள். இந்த ‘காட்டேரி’யும் மிகப்பெரிய வெற்றி பெறும்..!” எண்றார்.
“ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் ஒரு படம் நடித்துவிடவேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை நான்கு வருடமாக துரத்தி, தூரத்திலிருந்து லவ் பண்ணினேன். அதன் பரிசாகத்தான் இந்த காட்டேரி வாய்ப்பு கிடைத்தது” என்றார் நாயகன் வைபவ்.
“யாமிருக்க பயமே ஹிட்டானாலும் அடுத்ததாக ‘கவலை வேண்டாம்’ படம் சரியாக போகவில்லை. ஆனாலும் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படம் இயக்கும் வாய்ப்பை ஞானவேல்ராஜா தந்தார்.. இந்தப்படத்தின் டைட்டிலையும் அவர்தான் எனக்கு கொடுத்தார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளேன்..!” என்றார் இயக்குநர் டீகே.
நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “நான் பார்த்த வரையில் இயக்குனர் டீகேவின் திறமையை இங்கே பலரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள்.
இது வழக்கமான பேய்ப்படம் இல்லை. ‘காட்டேரி’ ரிலீஸுக்கு பிறகு அவர் மாஸ் இயக்குனராக மிகப்பெரிய இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடிப்பார். டீகேவிடம் சூர்யா, விக்ரம் என மாஸ் ஹீரோக்களுக்கான கதைகள் கைவசம் இருக்கின்றன.. அதேபோல வைபவுக்கும் அவரது திறமைக்கு தீனிபோடும் கதைகள் கிடைக்கவில்லை என்றே சொல்வேன்.. அவரும் கூட, இங்கே குறைத்தே மதிப்பிடப்படுகிறார்..!” என்றார்.