காளிதாஸ் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வந்திருக்கும் இரண்டாவது பாகமான இந்தப் படம் அதைவிட சஸ்பென்ஸ் அதிகமாக வைத்தும், அதிகபட்ச திரில்லுடனும் பயணிக்கிறது.
படத்தொடக்கத்தில் சம்பந்தமில்லாமல் ஒரு ஜோடி கொலையாக, அதைத் தடுக்கப்போன இன்ஸ்பெக்டர் பரத் அது முடியாமல் திரும்புகிறார். அதற்குப்பின் கதையின் திசை மாறுகிறது.
சுமார் 500 வீடுகள் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு ஃபிளாட்டில் அபர்ணதியும் அவரது கணவர் ஆனந்த் நாகும் தங்கள் பெண் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
அதற்கு நேர் எதிரான அடுக்கின் ஃபிளாட்டில் குடியிருக்கும் சந்தேகத்துக்கிடமான சைக்கோவைப் போன்ற இளைஞன் அஜய் கார்த்தி கொலை கருவிகளுடன் வசித்து வருவதுடன் அபர்ணதி வீட்டை நோட்டம் விட்டுக் கொண்டும் இருக்கிறார். அதன்படியே அபர்ணதியின் குழந்தை தனியாக ஓரிடத்தில் அவரிடம் சிக்க… அதிர்ஷ்டவசமாக அப்போதைக்கு அந்தக் குழந்தை தப்பிக்கிறது.
அதற்குப் பின் இன்னொரு நாள் நடக்கும் புதுவருடக் கொண்டாட்டத்தின் போது அஜய் கார்த்தி வளர்த்து வரும் நாயுடன் நட்புக் கொள்வதற்காக அவர் ஃபிளாட்டுக்குள் நுழையும் அந்தக் குழந்தை காணாமல் போகிறது.
புத்தாண்டுக் கொண்டாட்டம் குழந்தையைக் காணாமல் களேபரமாக… பரத் தலைமையிலான போலீஸ் படை அங்கு விரைந்து குழந்தையைத் தேட முயற்சிக்கிறது.
முதலில் இறந்து போன நாயும் அதற்குப் பின்னர் அந்த குழந்தையின் சடலமும் கிடைக்கிறது.
இதிலும் தோற்றுப் போக விரும்பாத பரத் தன் விசாரணையைத் தொடங்க, அசிஸ்டன்ட் கமிஷனர் பவானி ஸ்ரீயும் போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி அதில் இணைகிறார்.
அந்தப் புலனாய்வில் எல்லா சந்தேகங்களும் அஜய் கார்த்தியிடமே வந்து சேர்கிறது.
அவர் ஏற்கனவே ஒரு பாலியல் புகாரில் கைதானதும் தெரியவர, அவரை அதிரடியாகக் கைது செய்கிறார்கள். ஆனால் சாட்சியங்கள் சரியில்லாததால் அவர் உடனே வெளியே வந்து விடுகிறார்.
அதற்குப்பின் என்ன ஆனது என்பது இன்னும் நம் நாடித்துடிப்பை எகிற வைக்கும் பின் பாதிக்கதை.
ஒரு கொலை வழக்கு அத்தனை சீக்கிரமாக முடிந்து விடாது என்பது நமக்கும் தெரியும் தான் என்றாலும் அதில் குற்றவாளி யார் என்பதை ஒரு மியூசிக்கல் சேர் போல ஒவ்வொருவராகக் கழித்து கடைசியில் யாரை அதில் உட்கார வைக்கிறது என்பதை தொய்வில்லாத திரைக்கதை மூலம் தந்து கடைசியில் எதிர்பாராத கிளைமாக்ஸ் வைக்கிறார் இயக்குனர் ஶ்ரீ செந்தில்.
‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்…’ கொண்ட போலீஸ் ஒரு பக்கம்… எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் போலீஸ் இன்னொரு பக்கம் நம் சினிமாவில் ஹீரோவாகிறார்கள். அதில் பரத் இரண்டாம் ரகம். தொட்ட கேசில் எல்லாம் வெற்றி இல்லை என்றாலும், துவண்டு விடாமல் அத்தனை அழுத்தத்தையும் தாங்கி உண்மையை கண்டறியும் போலீசாக உயர்ந்து நிற்கிறார் பரத்.
இயல்பாகவே அவர் முகத்தில் தங்கி இருக்கும் சோகம் அவரது பாத்திரத்திற்கு துணை புரிகிறது.
அஜய் கார்த்திக் ஒரு அறிமுக நடிகர் என்பதே தெரியவில்லை. அவருடைய அப்பாவி முக நடிப்பு நல்லவனாகவும் இருக்கலாம், வில்லனாகவும் இருக்கலாம் என்கிற அளவில் நம்மைக் குழப்புகிறது.
அந்த உயரத்துக்கும், நிறத்துக்கும் சரியான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தால் முன்னணிக் கதாநாயகனாக உயர்வார் அஜய்.
ஆனந்த் நாக் – அபர்ணதி ஜோடியில் அபர்ணதிக்கு அழுத்தமான பாத்திரம். அவரது ஃப்ளாஷ் பேக் நாம் எதிர்பாராதது.
அதேபோல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சினிமாவுக்குள் வந்திருக்கும் பூவே உனக்காக சங்கீதா, ஆன்ட்டியானாலும் ஆக்டிவாகவே இருக்கிறார். அவருக்கும் பவர்ஃபுல்லான பாத்திரம்.
அசிஸ்டன்ட் போலீஸ் கமிஷனராக வரும் பவானி ஸ்ரீ நடிப்பு பாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கிறது. ஆனால் அதற்கேற்ற உருவம்தான் கொஞ்சம் மிஸ்ஸிங்.
அவர் வேடத்தில் அபர்ணதியும், அபர்ணதி வேடத்தில் பவானி ஶ்ரீயும் நடித்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.
இரண்டொரு காட்சிகளில் மட்டும் வரும் பிரகாஷ்ராஜும், கிஷோரும் கூட வலுவான பாத்திரங்களை ஏற்பதோடு நடிப்பிலும் மிஞ்சி இருக்கிறார்கள்.
அதிலும் நிறைய காட்சிகளை டிரோனில் வைத்து டாப்பிலேயே எடுத்திருந்தாலும் சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவு டாப் கிளாஸ்.
சும்மாவே மிரட்டும் சாம் சி.எஸ் இப்படி ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் கிடைத்தால் சும்மா இருப்பாரா..? படத்தின் பதட்டத்தை அவரும் சேர்ந்து கூட்டி இருக்கிறார்.
எழுதி இயக்கி இருக்கும் ஸ்ரீ செந்திலுக்கு அரவிந்தன் ஆனந்தின் திரைக்கதை வலுவாகவே உதவி இருக்கிறது.
கடைசி நிமிடம் வரை கூட அடுத்து இப்படி நடக்கும் என்று தெரியாத அளவில் திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் மூன்றாவது பாகமும் எடுக்கும் சாத்தியம் இருப்பதை நமக்கு உணர்த்துகிறது.
காளிதாஸ் 2 – இரு மடங்கு மிரட்டல்..!
– வேணுஜி