April 19, 2024
  • April 19, 2024
Breaking News
February 10, 2022

கடைசி விவசாயி திரைப்பட விமர்சனம்

By 0 860 Views

விவசாயத்தைக் காக்கவென்று அநேக படங்கள் சமீபத்தில் தமிழில் வரிசைக் கட்டியிருக்கின்றன. ஆனால் துருத்தலும், மிகையும் இன்றி அது குறித்த சரியான புரிதலுடன் எழுதப்பட்டு வந்திருக்கும் முதல் படம் இதுதான் எனலாம். விவசாயத்தின் மற்றும் விவசாயியின் வாழ்க்கை குறித்தும் சினிமாத்தனம் கலக்காமல், பிரசார நெடி இல்லாமல் உள்ளது உள்ளபடி சொல்லப்பட்ட கடைசிப்படமாகவும் இது இருக்கக் கூடும்.

படத்தை எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருப்பவரும், தயாரிப்பாளருமான மணிகண்டன் ‘கடைசி விவசாயி’ என்று படத்தில் சுட்டிக் காட்டுவது கிட்டத்தட்ட வழிக்கொழியும் நிலையில் இருக்கும் தமிழ்ப் பாரம்பரிய விவசாயம் செய்து வரும் கடைசி விவசாயி ஒருவரைப் பற்றிய பதிவு இது என்பதால்தான்.
 
அப்படியான ‘மாயாண்டி’ என்ற விவசாயியாக படத்தில் வாழ்ந்திருக்கிறார் பெரியவர் நல்லாண்டி. அவரது நடிப்பைப் படம் பார்த்த எல்லோரும் அதிகபட்சமாக புகழக் கூடும். ஆனால், அவர் படத்தில் நடிக்கவே இல்லை என்பதுதான் அவருக்கான புகழாரம். அவர் தினமும் என்ன செய்து கொண்டிருந்தாரோ அதையே படத்திலும் செய்திருக்கிறார்.
 
வயல், மாடுகள், கோழிகள், நாய், மயில், முருகப் பெருமானைத் தெரிந்து வைத்திருக்கும் அவர் எப்படி போலீஸையும், நீதி மன்றத்தையும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறாரோ, அப்படியேதான் சினிமாவையும் புரிந்து கொள்ளாமல் வந்து சொன்னதைச் செய்திருக்கிறார். புரிந்திருந்தால் எங்கேனும் நடித்து புகழைக் கெடுத்துக் கொண்டிருப்பார்.
 

அந்த வகையில் அவர் மூலம் உண்மையான நேர்மையான தன் எண்ணங்களை நம்மிடையே கடத்துகிறார் மணிகண்டன் என்பதுதான் உண்மை. மின்சாரத்தைக் கடத்தும் ஒரு வயர் போலத்தான் நல்லாண்டி பயன்பட்டிருக்கிறார் என்றாலும் அவர் இல்லையென்றால் இப்படி ஒரு செய்தி மின்சாரமாக நம் நெஞ்சில் பாய்ந்திருக்காது.

பயிர்களே விதையையும் உற்பத்தி செய்யும் இயற்கை விந்தையை மாற்றி விதைகள் இல்லாத ஹைப்ரிட் ரக தக்காளி விதைகளைப் பற்றிக் கேள்விப்படும் நல்லாண்டி, “இதைக் கண்டு பிடிச்சவனுக்கு விரைக் கொட்டை இல்லாத ஆம்பிளப் புள்ள பொறந்தாதான் தெரியும்..!” என்று சொல்லி விட்டு நகர்கையில் அனைவரும் சிரிக்கிறோம். ஆனால், ஆழமாக சிந்தித்தால் மனிதனும் எதிர்காலத்தில் தனக்கான விந்தணுவைக் காசு கொடுத்து வாங்கக் கூடிய நிலை ஏற்படலாம் என்பதைச் சொல்லாமல் சொல்கிற செய்தி அது – இப்போது குடிக்கும் தண்ணீரைக் காசு கொடுத்து வாங்குதல் போல… 
 
அதற்காக யாரும் தெருவில் போராட மாட்டோம் என்பதுவும் கூட தற்கால விவசாயிகளின் பொது ஜன ஆதரவில்லாத போராட்டங்களும், கொரோனா தொற்று தொட்டு மருந்து மாபியாக்கள் நடத்தும் வேட்டையை நாம் கண்டும் காணாமலும் கடந்து போய்க் கொண்டிருப்பதுமே உணர்த்துகின்றன.
 
அதேபோல் அந்த கிராமத்தில் விவசாயம் ஒழிந்து போய் நல்லாண்டியின் நிலத்தில் மட்டும் ஊர் அதிசயமாக அது நிகழ்ந்து கொண்டிருக்க, இருபது வருடங்களாக நின்று போய்விட்ட குலதெய்வக் கடனை அடைக்க திருவிழாவுக்கு விதைநெல் தேவைப்பட்டு அதைப் பயிரிட இருக்கும் கடைசி விவசாயி அவர்தான் என்கிற செய்தி இதயத்தைக் கீறுகிறது என்றால், அதை நடவு செய்வதற்கு யாருமே அந்த ஊரில் முன்வராமல் அந்த ஒற்றைக் கிழவனே அந்த வேலையையும் ஏற்பது கண்ணீரை வரவழைக்கிறது.
 
நடவு வேலைக்குக் கூட வராமல் மக்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள்..? அங்கே இன்னொரு உண்மை சுடுகிறது. அனைவரும் நூறு நாள் வேலைத் திட்டமென்று வெட்டி வேலை செய்து கொண்டிருக்க, நடவு வேலைக்குப் போனால் அந்த வெட்டி வேலைக்கான கூலி கிடைக்காது என்று கண்காணிப்பாளர் தடுக்க… இப்படியாக காட்சிப்படுத்தப் படுகிறது.
 
நிலத்தைத் தனியாருக்கு விற்காததால் திட்டமிட்டு மயில்களைக் கொன்று அவர் நிலத்தில் போட்டு மயில்களை அடக்கம் செய்யப்போகும் அவரை குற்றவாளியாக்குவது கார்ப்பரேட் மூளையெல்லாம் இல்லை – சலவை செய்யப்பட்ட உள்ளூர் மூளைகள்தான் என்று அடையாளப்படுத்தி இருப்பதும் அப்பட்டமான உண்மை.
 
போலீஸ் வந்து அழைத்ததும் என்ன ஏது என்று கேட்காமல் ‘காலுக்கொரு செருப்பாக’ மாட்டிக்கொண்டு (ஐயோ என்று அந்தக் காட்சியிலும் உள் மனது அழுகிறது) கிளம்பும் நல்லாண்டி, எப்ஐஆர் காப்பியில் எதிர்க்கேள்வி இல்லாமல் கைநாட்டு வைப்பதும், 15 நாள் ரிமாண்ட் செய்யும் மாஜிஸ்ட்ரேட்டிடம் “அப்ப நான் கிளம்பலாமா..?” என்று வெள்ளந்தியாகக் கேட்பதும் அப்படி ஒரு அநியாய இயல்பு.
 
சிறைக்குள் சென்றும் விவசாயம் பற்றி விசாரிக்கும் கைதியிடம் செய்முறை விளக்கம் சொல்லி மண்ணின் மகத்துவத்தை அவர் புரிய வைப்பது எளிய முறை இயற்கை விவசாயம். 
 
இப்படிப்பட்ட படங்களில் எல்லாம் இப்படியான மனிதர்கள் கடைசிக் காட்சியில் என்ன ஆவார்கள் என்று நம் ரத்தத்தில் சிங்கம், புலி, சிறுத்தை இயக்குநர்கள் எல்லாம் ஏற்றி விட்டிருக்க, அந்தக் காட்சியை நம் அரிப்பு மூளை எதிர்பார்க்க அப்படி ஒரு காட்சியும் வந்தே விடுகிறது. இந்தப் படத்திலும் இதே நிலையா என்று நினைக்க, நம் மூளைக்கு உறைக்கிற மாதிரி ‘நறுக்’கென்று ஒரு குட்டு வைத்து அந்தக் காட்சியை முடிக்கிறார் மணி. 
 
இப்படியான கனமான விஷயங்களை எல்லாம் நம் நெஞ்சம் தாங்குமா என்று நினைத்து படத்தைத் தவிர்த்து விடாதீர்கள். இங்கே குறிப்பிட்டவை எல்லாமே நாம் புரிந்து கொள்ள வேண்டிய உள்ளடிகள். ஆனால், படம் முழுதும் கிராமத்து நையாண்டியும், நக்கலுமாக கலகலப்பாகவே கடக்கிறது.
 
மாடு ஓட்டத் தெரியாத போலீஸ்காரரை கிராமத்துப் பெண்மணி ‘ஓட்டுவது’ எல்லாம் தென் மாவட்டத்து வழக்கொழியாத பாரம்பரிய ரகங்கள்.
 
இந்தப்படத்துக்கு விஜய் சேதுபதியும், யோகிபாபுவும் தேவை இல்லைதான். ஆனால், சினிமாவுக்கு அவர்கள் தேவை என்பதைப் புரிந்து கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது.
 
ஆனாலும், முருக பக்தர் விஜய் சேதுபதி தனிப்பெரும் நடிப்பின் மூலம் நம் மனத்தில் சம்மணமிட்டு அமர்ந்து திருநீறு பூசுகிறார். பில் கேட்ஸை அவர் சந்தித்து வந்ததைச் சொல்கையில் எள்ளி நகையாடும் கூட்டம் வானொலிச் செய்தி கேட்டு வாயடைப்பது ‘ஆஹா…’ அவர் தன்னுடன் இருப்பதாகக் கருதும் காதலியை சித்தர் ஒருவர் அடையாளம் கண்டுவிட அந்தப் பழ முகத்தில் பரவசத்தைப் பார்க்க வேண்டுமே..?
 
விவசாயமே செத்துப்போன ஊரில் யானைக்கு என்ன வேலையும், சம்பாத்தியமும் இருக்கும் என்பதை யோகி பாபுவை கேட்டுதான் சொல்ல வேண்டும். யோகி பாபுவின் வழக்கமான இடக்கரடக்கல் காமெடி இல்லாவிட்டாலும் பெரிய யானையுடன் குட்டி யானையாக அவர் நடந்து வருவது இயல்பான நகைச்சுவை.
 
இப்படத்தில் வரும் போலீஸ் கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர், சிறைத்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், கோர்ட், நீதிபதி எல்லோருமே இதுவரை தமிழ் சினிமா காணாத ‘கேண்டிட் கேமரா’ ரகப் படைப்புகள். அதிலும் நீதிபதியாக வரும் ‘ரெய்ச்சல் ரெபக்கா’ இயல்பான நடிப்பிலும், இரக்க குணத்திலும் நீதியரசியாகவே நிலைக்கிறார். இதைப் பார்க்கும் நம் வழக்கமான சினிமாக்காரர்கள் அவருக்கு தங்கள் படங்களில் வேறு ஒரு நீதி செய்யக்கூடும்.  
 
கடந்த தலைமுறை இயக்குநர்கள் தங்கள் படங்களில் தாங்களே தங்கள் கிரியேட்டிவிட்டி குறித்து அதிசயித்துப் போகும் இடத்தில் தங்கள் டைட்டில் கார்டைப் போட்டு புளகாங்கிதப்படுவார்கள். அப்படி இந்தப்படத்தில் மணிகண்டன் பெயரைப் போட வேண்டுமென்றால் படம் நெடுக வாட்டர் மார்க்காகப் போட வேண்டி வரும்.
 
ஆனாலும் அவரிடம் ஒரு முக்கியக் கேள்வியைக் கேட்காவிட்டால் இந்தப்பதிவு முழுமை பெறாது. இயற்கை விவசாயம் குறித்து விவாதிக்கும் இந்த சுத்தமான படத்தில் இசைக்கு மட்டும் ‘ஹைப்ரிட்’ ரகத்தை ஏன் பயன்படுத்தினீர்கள் மணி..? (இசை சந்தோஷ் நாராயணன் மற்றும் ரிச்சர்ட் ஹார்வி)
 
அதை மறந்து…
 
விவசாயம் குறித்த தெளிவும், பயிர்களின் மீது அன்பு கொண்ட அப்பாவித்தனமும், நேர்மையான அணுகுமுறையும் கொண்ட இந்தக் ‘கடைசி விவசாயி’யை நாம் பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் கொண்டாடவும் வேண்டும். 
 
தவறினால் நேர்மையான நல்ல படமெடுத்த ‘கடைசி இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும்’ மணிகண்டன் ஆகக் கூடும்.
 
ஜப்பானிய, கொரிய, ஈரானியப் படங்களைப் பார்த்துப் படமெடுத்து உலகப்பட முயற்சி என்பவர்கள் மத்தியில் இந்திய குறிப்பாகத் தமிழ்க் கலாச்சார பண்பாட்டு வாழ்க்கை முறையின் அடிப்படையில் அமைந்த இந்தப்படமே சுத்தமான உலக முயற்சி எனலாம். அந்த வகையில் இந்தப்படம் உலகின் உயரிய விருதுகளைத் தட்டி வரும் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்ல முடியும்.
 
கடைசி விவசாயி – பசுமை வணக்கம்..! 
 
– வேணுஜி