September 8, 2026
  • September 8, 2026
Breaking News
September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்பட விமர்சனம்

By 0 5 Views

மலையாளத்தில் உருவாகி தமிழ் பேசி வந்திருக்கும் இனிய காதல் படம். 

நடிப்புக்குப் பேர் போன நிவின் பாலியும், நளினத்துக்கு பெயர் போன மமிதா பைஜுவும் இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தை ஏற்கனவே ஒரு சூப்பர் ஹிட் காதல் படமான ‘பிரேமலு’வைக் கொடுத்த அதே இயக்குனர் கிரிஷ் ஏ.டி இயக்கியிருப்பது சிறப்பு. 

முதல் காதலி இறந்து போன நிலையில் முதிர் கண்ணனாக வளைய வரும் நிவின்பாலியுடன் பக்கத்து வீட்டுக்கு குடிவரும் கல்லூரி மாணவியான மமிதா பைஜூ நட்புடன் பழக ஆரம்பித்து அதன் பின்னால் காதலிக்க ஆரம்பிக்கிறார். 

ஆரம்பத்தில் ஒரு மாதிரி மமிதாவை சைட் அடித்துக் கொண்டு தெரியும் நிவின் பாலி, ஒரு கட்டத்தில் மமிதா தன்னை காதலிக்கிறார் என்று அறிந்ததும் சுதாரித்து தன் வயதை காரணம் காட்டி அதை நிராகரிக்க முயற்சிக்கிறார். ஆனால் மமிதா தன் காதலில் உறுதியாக இருக்க… இந்த விஷயம் மமிதா வீட்டுக்கு தெரிந்து பெரிய பிரச்சினையாகிறது. 

அந்தப் பிரச்சினைகளின் காரணமாக இந்தக் காதலிலிருந்து விலக நிவின் பாலி முடிவெடுக்க அதன் பிறகு என்ன ஆனது என்பதுதான் கிளைமாக்ஸ்.

பருவ வயது கடந்த நிலையில் இருக்கும் ஒரு நடுத்தர வயது வாலிப வேடத்துக்கு தனியாக எந்த மெனக்கெடலும் இல்லாமல் அப்படியே பொருத்தமாக வந்து நிற்கிறார் நிவின் பாலி. இப்படி ஒரு ஹீரோவைத் தமிழில் தேடினால் கிடைப்பார்களா என்று தெரியவில்லை. 

நிவின் நடிப்பு பற்றியும் சொல்லத் தேவையில்லை. வெளியில் மறுத்தாலும் உள்ளுக்குள் மமிதாவைக் காதலிக்கும் வேளைகளில் பளிச்சிடுகிறார் நிவின்.

அது என்னவோ சமீப காலமாக மமிதா பைஜுவின் நாயகர்கள் எல்லாம் அவரை விட  வயதில் மூத்தவர்களாகவே வந்து குற்ற உணர்ச்சியுடனும் இருக்கிறார்கள். எனவே அவர் அடுத்து கமல் ரஜினி கூட எல்லாம் ஜோடி போட வாய்ப்பு இருக்கிறது. 

சுட்டித் தனமான வேடத்தில் வந்தாலும் பாதிக்கு மேல் சீரியஸ் ஆகவும் நடித்து உள்ளம் கவர்கிறார் மமிதா.

இவர்கள் இருவரை தவிர மற்ற எல்லா பாத்திரங்களிலும் வரும் நடிகர்களும் அதே அளவு நம்மை கவர்வது மலையாள படங்களில் மட்டும்தான்.

குறிப்பாக நிவின் பாலியின் தம்பியாக நடித்திருக்கும் சங்கீத் பிரதாப் உள்ளிட்டு உடன் நடித்திருக்கும் பிந்து பணிக்கர், சுரேஷ் கிருஷ்ணா, வினய் ஃபோர்ட், ஸ்ரிந்தா, ஷமீர் கான், மீனாட்சி ரவீந்திரன், அயசங்கர் கரிமுட்டம், தங்கம் மோகன், வெட்டுக்கிளி பிரகாஷ் என்று அனைவருமே ஒரு சிறு குறை கூட வைக்காமல் நடிப்பில் கவர்ந்திருக்கிறார்கள்.

விஷ்ணு விஜய் இசையமைப்பில் பாடல்கள் மணி மணியாக இருக்கின்றன. பின்னணி இசையும் காதலுக்குக் கட்டியம் கூறுகிறது.

இயல்பான கதை ஓட்டத்துக்கு எப்படியெல்லாம் காட்சிப்படுத்த வேண்டுமோ அப்படி எல்லாம் பயணித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஜ்மல் சாபு.

இயக்குனர் கிரிஷ்.ஏ.டி தனித்து செயல்படாமல் கிரண் ஜோசியுடன் இணைந்து கதை, திரைக்கதை எழுதி இருப்பது ஸ்கிரிப்டின் மேல் அவருக்குள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

அசாதாரணமான ஒரு காதல் கதையை நம்பகத் தன்மையுடன் மட்டுமல்லாது படம் முழுவதும் நகைச்சுவையாகவும் சொல்லி இருப்பது படத்தின் வெற்றியை உறுதி செய்கிறது. 

பெத்லகேம் குடும்ப யூனிட் – பிரேமலு பார்ட் டூ..!

– வேணுஜி