September 7, 2026
  • September 7, 2026
Breaking News
September 7, 2026

இம்மார்ட்டல் திரைப்பட விமர்சனம்

By 0 5 Views

பெரும்பாலும் தலைப்பை உற்று கவனித்தாலே அந்த படம் என்ன சொல்ல வருகிறது என்று புரிந்துவிடும். இந்த படமும் அப்படித்தான். 

‘அழிவில்லாத’ ஏதோ ஒன்று படத்துக்குள் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். அப்படி ஆயிரம் வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் காட்டி படத்தை தொடங்குகிறார்கள். 

அங்கே கட் செய்தால் இப்போது தன்னுடைய மாமா லொள்ளு சபா மாறன் நடத்தும் அச்சகத்தில் வேலை பார்த்து வரும் ஜிவி பிரகாஷ், குறைந்த வாடகைக்கு ஒரு வீடு தேடிக் கொண்டிருக்கிறார். 

அப்போது படு நேர்த்தியான பிளாட் ஒன்றில் வசிக்கும் கயாடு லோஹரிடமிருந்து வரும் செய்தி அவருக்கு பாலில் விழுந்த பழம் போல் இனிக்கிறது. 

கயாடு லோஹர் குடியிருக்கும் அதே வீட்டுக்குள் ஷேரிங் முறையில் அவர் இருந்து கொள்ளலாம் என்பதுதான் அந்த பழம் நழுவிய செய்தி. 

வேண்டாம் என்று சொல்ல ஜிவி பிரகாஷுக்கு கசக்குமா என்ன? மாடியில் லோஹரும், கீழே இவரும் தங்கிக்கொள்ள இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமாகிறார்கள். ஒரு கட்டத்தில் ‘கிஸ்’ஸே அடிக்கும் வேளையில் அந்த வீட்டுக்குள் இன்னொரு நபரும் இருப்பதை பார்க்கிறார் ஜிவி.

வயதான தோற்றத்தில் இருக்கும் அவரை தனது தாத்தா என்கிறார் கயாடு லோஹர். அங்கிருந்து ஆரம்பிக்கிறது பீதி. அதைத்தொடர்ந்து நடப்பவை எல்லாம் சந்தேகத்துக்கு இடமாகவே இருக்க, அந்த வீட்டிலிருந்து வெளியேற முயற்சிக்கிறார். ஜிவி. 

ஆனால் அது முடியவே முடியாது என்பது ஒரு கட்டத்தில் தெரிகிறது. அங்கிருந்து ஜிவியால் மீள முடிந்ததா..? அந்த வீட்டுக்குள் இருக்கும் மர்மம் என்ன..? உண்மையில் கயாடு லோஹர் யார். என்ற கேள்விகளுக்கெல்லாம் பின்பாதி விடை அளிக்கிறது.

ஜி.வி. பிரகாஷின் படக்கணக்கில் ஒன்று கூடியிருக்கிறது என்பதை தவிர, அவரது பங்களிப்பு படத்தில் பெரிதாக ஏதுமில்லை. கிளைமாக்ஸ் பயங்கர சூழ்நிலையில் அவர் நடித்துக் கொட்டினாலும் அந்த காட்சிகள் நம்மை பெரிதாக ஈர்க்கவில்லை என்பதால் ஜிவியின் நடிப்பும் வீணாகிறது.

எப்படி பார்த்தாலும் இந்த படத்தில் நம் கவனம் ஈர்க்கும் ஒரே ஒரு விஷயம் கவர்ச்சிக்கன்னி கயாடு லோஹர்தான். எப்படி பார்த்தாலும் எந்த மனநிலையில் பார்த்தாலும் அவர் அழகாகவே இருக்கிறார். அந்த கவர்ச்சிக்கும் அழகுக்கும் அவரெல்லாம் நடிக்கவே வேண்டியதில்லை திரையில் வந்து போனாலே போதும் என்கிற அளவில் படத்தின் யுஎஸ்பியாக இருக்கிறார் கயாடு

அவரது தாத்தாவாக நம்பப்படும் டி.எம்.கார்த்திக், வித்தியாசமான வேடத்தில் கவனம் ஈர்த்திருக்கிறார்.

லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் வரும் காட்சிகளில் தியேட்டரில் சிரிப்பலையைப் பார்க்க முடிகிறது.

பிற வேடங்களில் வரும் அர்ஷு மஹாராஜ், பேமா சாம்சோ, சுனிதா ஷ்ரேஷ்டா ஆகியோர் கதையோட்டத்திற்கு பயன்பாட்டு இருக்கிறார்கள்.

ரசிகன் கொடுக்கும் காசு அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவில், கயாடு லோஹரை காட்சிப்படுத்தி இருப்பதிலேயே சரியாகப் போகிறது.

மற்றபடி மற்ற காட்சிகளின் உணர்வுகளுக்கும் அவர் எந்த பங்கமும் வைக்காமல் அற்புதமாக பணியாற்றியிருக்கிறார்.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை என்றாலும் பின்னணி இசையில் பேயடி அடித்திருக்கிறார். வழக்கமாகவே அவர் இசை அப்படித்தான் இருக்கும் என்றாலும் படத்துக்குள் வரும் அமானுஷ்ய பின்னணிக்கு அவரது இசை மிரட்டலாக பொருந்துகிறது.

எழுதி இயக்கியிருக்கும் மாரியப்பன் சின்னா, படத்தை தொடங்கிய விதமும் அதை கொண்டு போன விதமும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் கொஞ்சமும் நம்ப முடியாத ஒரு விஷயத்தை பிளாஷ்பேக்காக பார்க்கும்போது நம்மால் படத்துடன் ஒன்ற முடியவில்லை.

நேர்த்தியில் படம் நம்பர் ஒன்றாக இருக்கிறது.

மற்றபடி கயாடு லோஹரின் கவர்ச்சி படத்தை எந்த அளவுக்கு மக்களிடம் கொண்டு சேர்க்க முடியுமோ அந்த அளவுக்கு கொண்டு சேர்த்து விடும்.

இம்மார்ட்டல் – நம்பினால் நம்புங்கள்..!

– வேணுஜி