தலைப்பைப் பார்த்தாலே இது ஒரு காமெடிப்படம் என்று புரிந்து போகும். அப்படி இயக்குனர் சஜோ சுந்தர் முருகேசன் நம்மைச் சிரிக்க.வைப்பதில் வெற்றி அடைந்தாரா என்பதுதான் சவால்.
புகழ், கும்கி அஷ்வின், திடியன், இந்திரன் ஆகிய நான்கு பேரும் திருடர்கள். அவர்கள் நால்வரும் டாக்டர் வின்சென்ட் அசோகனின் கடற்கரை பங்களாவில் பலகோடி ரூபாய் பணம் இருப்பதாக அறிந்து அங்கு திருடப் போய் காவலாளி ரவி மரியாவிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.
ஆனால் அவர்களை ரவி மரியா தண்டிக்காமல் ஒரு உடன்பாட்டுக்கு வர, நால்வரும் சம்மதிக்கிறார்கள்.
ஆனால், டாக்டரைப் பற்றியும் ரவி மரியா பற்றியும் அவர்கள் அறியும் தகவல் அவர்களை உறைய வைக்கிறது. ஆனால், இயல்பாக இருப்பது போல் நடந்து அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். அப்படி அவர்களால் தப்பிக்க முடிந்ததா, டாக்டர் வின்சென்ட் அசோகன் மற்றும் ரவி மரியாவின் உண்மை சொரூபம் என்ன என்பதுதான் இந்தப்படத்தின் கதை.
காமெடியன்கள் நால்வரில் புகழ் வெளிச்சம் பட்டவர் என்பதால் புகழே நாயகனாக நடித்து இருக்கிறார். அவரது பாணியில் சிரிக்க வைக்க அவர் முயற்சி செய்திருப்பதால் பழுது ஏதும் இல்லை. ஆனால், தொலைக்காட்சியில் சிரிக்க வைப்பவர்கள் பெரிய திரையில் அந்த அளவுக்கு திறமையைக் காட்ட முடிவதில்லை. அதற்கு புகழும் விதி விலக்கல்ல.
அவருடன் உற்ற திருடர்களாக நடித்திருக்கும் கும்கி அஷ்வின், திடியன், இந்திரன் ஆகியோரும் தங்களால் இயன்றதை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
நடிக்க வந்து விட்டால் எந்த நிலைக்கும் இறங்கும் ரவி மரியா இந்தப்படத்திலும் தன் பணியை அப்படியே செய்திருக்கிறார்.
சிரிக்க வைப்பவர்களை விட சீரியஸாக வரும் வின்சென்ட் அசோகன்தான் நடிப்பில் முன்னணி வகிக்கிறார்.
பிரக்யா நயனின் கிளாமர் பாடல் படத்தின் ஹைலைட்டாகி இருக்கிறது. தியேட்டர் கலகலப்பது அப்போதுதான்.
அனுபவ ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமாரின் திறமை இந்த பட்ஜெட் படத்தையும் வண்ணமயமாக குளிரூட்டி இருக்கிறது.
சுபாஷ் முனிரத்னம் இசையில் அமைந்த பாடல்களும், பின்னணி இசையும் இந்தப்படத்துக்கு பெரும்பலம்.
எழுதி இயக்கியிருக்கும் சஜோ சுந்தர் முருகேசன், அளவான பட்ஜெட்டில் படமெடுப்பது எப்படி என்ற உத்தியைக் கற்றவராக இருப்பதால் விரலுக்குத் தக்கபடி ஒரு கதையையும், கதைக் களத்தையும், நடிகர்களையும் வைத்துக் கொண்டு தன் பணியைச் செம்மையாக செய்திருக்கிறார்.
ஸ்கிரிப்டில் மட்டும் இன்னும் சிரிப்பு சிரப் ஏற்றியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
‘4 இடியட்ஸ்’ – சிரிக்க முடிந்தவர்களுக்கு சமர்ப்பணம்..!
– வேணுஜி