September 4, 2026
  • September 4, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • டோரதி படத்தில் இளையராஜாவுடன் இணைந்ததை பாக்கியமாக கருதுகிறேன்..! – கார்த்திக் சுப்புராஜ்
September 4, 2026

டோரதி படத்தில் இளையராஜாவுடன் இணைந்ததை பாக்கியமாக கருதுகிறேன்..! – கார்த்திக் சுப்புராஜ்

By 0 8 Views

தமிழ் சினிமாவில் முதல் முயற்சியாக, ‘டோரதி’ படத்தின் பின்னணி இசைத் தொகுப்பை படம் வெளியாவதற்கு முன்பாகவே கார்த்திக் சுப்புராஜ் வெளியிட உள்ளார்.

அதற்குக் காரணம் இசைஞானி இளையராஜா.

ஆமாம். இந்தப்படம் மூலம்தான் கார்த்திக் சுப்புராஜ் இளையராஜாவுடன் முதல் முறையாக இணைந்துள்ளார். இந்த செய்தியால் ‘டோரதி’ படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட, தற்போது வெளியாகியிருக்கும் ‘கல்யாண விருந்து’ மற்றும் ‘முத்துமணி ‘ இரண்டு பாடல்களும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. 

இந்நிலையில் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடக்கும் இசை நிகழ்ச்சியில் படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை (OST) வெளியிடவிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

இந்தத் தகவலை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதிலிருந்து…

“டோரதி’ என்னுடைய பத்தாவது படம். இந்த திரைக்கதை எனக்கு ரொம்ப பர்சனல். இந்த கதையை படமாக பண்ண வேண்டும் என்று கொரோனா காலக்கட்டத்திலேயே முடிவு செய்து விட்டேன். பிறகு நானே பல வடிவங்களில் இதன் திரைக்கதையை எழுதினேன். அதேபோல், இதில் புது முகங்களைதான் ஹீரோக்களாக நடிக்க வைக்க வேண்டும், என்றும் முடிவு செய்தேன்.

“படத்தின் கதைக்களம் எப்படிப்பட்டது..?”

“மதுரையில் நான் வாழ்ந்த வாழ்வியல், நான் பார்த்த மனிதர்களை மையமாக கொண்டு எழுதப்பட்ட கற்பனை கதை இது. சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருக்கும் கார்த்திக், சுப்பு என்ற இரண்டு இளைஞர்கள், அவர்கள் வாழ்க்கையில் வரும் ஒரு பெண், அதன் பிறகு அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது?, என்ற ரீதியில் தான் கதை இருக்கும்..!

இந்த படத்தைத் தொடங்கும் நேரத்தில், ’மகான்’ பண்ண வேண்டி இருந்தது, அதற்காக இதைத் தள்ளி வைத்தேன். அந்த படம் முடிந்த பிறகு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ அதன் பிறகு சூர்யா சாரை சந்தித்து ‘ரெட்ரோ’ தொடங்க வேண்டி இருந்தது. இப்படியே இந்த படம் பண்ண முடியாமல் போன நிலையில்தான் உடனே தொடங்கி விட வேண்டும் என்று படத்தை ஆரம்பித்து முடித்து விட்டேன்..!”

ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியிடுவது குறித்து மேலும் கூறிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “இளையராஜா சார் படம் பார்த்து முடித்த உடனே, “பாடல்கள் வெளியீட்டை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செய்துக் கொள்ளுங்கள், ஆனால் சவுண்ட் ட்ராக்கை நேரடியாக வெளியிடலாம், என்று கூறினார்..!”

“இசைஞானி படத்துக்குள் வந்தது எப்படி..?”

“இந்த கதைக்கு அவர்தான் இசையமைக்க வேண்டும் என்று நான் முன்பே முடிவு செய்தேன். என்னுடைய முந்தைய படங்களுக்கும் அவருடன் பணியாற்ற விரும்பினேன், ஆனால் ஏதோ ஒரு தயக்கத்தால் அவரை சந்திக்கவில்லை.

இந்த கதையை தயாரிப்பாளர்களுக்கு அனுப்பும் போதே இசை இளையராஜா என்றுதான் போட்டு அனுப்புவேன். இருந்தாலும், படப்பிடிப்பை விரைவாக முடிக்க வேண்டும் என்பதால், இசையமைப்பாளர் பற்றி யோசிக்காமல் படப்பிடிப்புக்கு சென்று விட்டேன். படத்தை முடித்துப் பார்த்த பிறகு  அவரை சந்தித்து படத்தை காட்டினேன்.

அவர் மறுநாளே பணியை தொடங்கி விடலாம், என்றார். அப்படிதான் ராஜா சாருடன் என் பயணம் தொடங்கியது. அவருடன் இணைந்து பணியாற்றியது பெரும் பாக்கியமாக கருதுகிறேன். கலையை அவரைப் போல் யாராலும் நேசிக்க முடியாது..!”

“படம் டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவுக்கு போனது எப்படி..?”

“இந்த படத்தை சர்வதேச ரசிகர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் முன்பே முடிவு செய்தேன், அதனால்தான் டொரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவுக்கு அனுப்பினோம், அங்கு உலக பிரீமியர் திரையிடலுக்கு படம் தேர்வாகியுள்ளது.

திரைப்பட விழாவில் பங்கேற்பதால் இது திரைப்பட விழாவுக்கான படம் என்று நினைக்க வேண்டாம். மக்களுக்கு ஏற்ற, அனைத்து அம்சங்களும், திரையரங்க கொண்டாட்டங்கள், பாடல்கள் நிறைந்த படமாக இருக்கும். அதே சமயம், நம் கலாச்சாரம், நம் வாழ்வியலை உலகளவில் எடுத்துச் செல்லும் ஒரு படமாக இருக்கும். அதற்காக தான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட முடிவு செய்தோம். செப்டம்பர் 11 ஆம் தேதி டொரொண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது..!”

“படத்தின் பாத்திரங்கள் பற்றி..?”

“இந்த படத்தில் புதுமுகங்கள் அல்லது வளர்ந்து வரும் நடிகர்களை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இரண்டு கதாபாத்திரங்களில் ஒன்றில் சனத் நடிப்பது, நான் கதை எழுதி முடித்த உடனே முடிவாகி விட்டது. இன்னொரு பாத்திரத்துக்காக பலரை ஆடிசன் செய்த போது ரிஷிகாந்த் ஆடிசனுக்கு வந்தார், அவரது ஆடிசனை பார்த்து அனைவரும் நன்றாக இருப்பதாக சொன்னார்கள், அப்படி தான் அவர் மற்றொரு கதாபாத்திரத்திற்கு தேர்வானர். இந்த கதாபாத்திரங்களுக்கு இவர்களை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள், என்று தோன்றுகிறது.

நாயகி பாத்திரத்துக்காக கீர்த்தி சுரேஷை அணுகியபோது கதையைக் கேட்டுவிட்டு அவரும் ஒத்துக்கொண்டார். படத்தில் கேரளத்தை சேர்ந்த பெண்ணாக வருகிறார் அவர்..!”

செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘டோரதி..!’