September 10, 2026
  • September 10, 2026
Breaking News
August 30, 2026

ஒன்ஸ்மோர் திரைப்பட விமர்சனம்

By 0 53 Views

இறுக்கமான வில்லனாகவே இதுவரை நமக்கு அடையாளம் தெரிந்த அர்ஜுன் தாஸுக்கு காத்து வாக்குல ரெண்டு காதல்களை ஏற்படுத்திக் கொடுக்க எப்படித்தான் இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்துக்கு பொறி தட்டியதோ தெரியவில்லை. 

கல்லூரிக் காதல் முடிவுக்கு வந்த கையோடு தற்கொலைக்கெல்லாம் முயன்று சதா சோகமாக தெரிந்து கொண்டிருப்பவரை அதிதி சங்கர் விரட்டி விரட்டிக் காதலிக்கிறார். ஆரம்பத்தில் விலகி விலகிப் போனாலும் ஒரு கட்டத்தில் அதிதியின் அதிதீவிர காதல் புரிந்து அவரை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார் அர்ஜுன் தாஸ். 

ஒரு வழியாக இரண்டு வீட்டிலும் சம்மதம் வாங்கி திருமணத்திறகு நாள் குறித்து நிச்சயதார்த்தம் நடக்கும் நாளில் பழைய காதலி மீண்டும் லைனில் வருகிறார். பலவித கேள்விகளோடு அரைகுறையாக முடிந்து போன அந்த காதலின் மீது தெளிவை ஏற்படுத்திக் கொள்ள மீண்டும் அவரை சந்திக்கிறார் அர்ஜுன் தாஸ். 

இதன் முடிவு என்ன என்பதுதான் மீதிக் கதை 

நன்றாக நடிக்கத் தெரிந்திருக்கும் அர்ஜுன் தாஸ், இது இரண்டு காதல்களை சுமக்கும் கதை என்றாலும் இரண்டிலுமே சற்று நடிப்பின் முதிர்ச்சியைக் காட்ட வேண்டி இறுக்கமாகவே வர நேர்ந்திருக்கிறது.

ஆனால் முதல் காதலில் ரொமான்ஸ் கொப்பளிக்க ஆட்டமும் பாட்டுமாய் தூள் கிளப்பி இருக்கிறார்.

நாயகி அதிதி சங்கர் குறும்புத்தனமான கதாபாத்திரத்தை ஏற்று அதில் தனது முழுமையான பங்களிப்பைத் தந்திருக்கிறார். அர்ஜுன் தாஸிடம் தனது பழைய காதலனை அறிமுகப்படுத்துவதோடு, இன்னொரு பக்கம் ஓரினப் பால் ஈர்ப்பில் தோல்வியுற்று வாழும் நண்பனுக்கும் நண்பியாக இருப்பது புதிய அனுபவமாக இருக்கிறது. 

இந்த இரண்டாவது காதலையும் இழந்தாலும் அதை பக்குவத்துடன் ஏற்றுக் கொள்வார் என்று பார்த்தால் அர்ஜுன் தாஸ் தனது சம்மதத்தை சொல்லும்போது பொசுக்கென்று பொங்கி வரும் கண்ணீரில் தனது காதலின் ஆழத்தை வெளிப்படுத்துவது சிறப்பு.

அறிமுக நாயகியாக நடித்திருக்கும் சோனா ஒலிக்கல் படத்தின் அறிமுகக் காட்சியிலேயே அழகில் கவர்கிறார். அப்படி ஒரு பெண் கிடைத்தால் எந்த ஆண்தான் வேண்டாம் என்று சொல்வான்? ஆனாலும் திடுக்கென்று அர்ஜுன் தாசை அவர் விட்டு பிரிவது அவருக்கு மட்டுமல்ல நமக்கும் ஷாக்காகதான் இருக்கிறது.

இவர்களுடன் டிராவிட் செல்வம், அனுஷா பிரபு, ஜகபர், மோனிஷ் எலமாரன், வர்ணிகா வரத், அருண்குமார் மணி, செளந்தர்யா மனோகரன் உள்ளிட்ட பிற பாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையை தள்ளிக் கொண்டு போக உதவி இருக்கிறார்கள்.

அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு காதல்களுக்கேற்ற அழகியலுடன் பயணத்திருக்கிறது. 

ஒவ்வொரு பாடல் வரும்போதும் “யார் இந்த படத்தின் மியூசிக் டைரக்டர்..?” என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது. அப்படி அருமையான பாடல்களை இசைத்திருப்பவர் ஹேஷாம் அப்துல் வஹாப்.

மெதுவாக நகரும் திரைக்கதையில் நாம் சோர்ந்து போகும் போதெல்லாம் இவரது பாடல்கள் வந்து நம்மை உற்சாகப்படுத்தி விடுகின்றன.

கதையை எழுதி இயக்கி இருக்கும் விக்னேஷ் ஸ்ரீகாந்த், இளமையான இரண்டு காதல்களை தந்திருந்தாலும் அவற்றில் ஆழத்தை கொடுக்க தவறி இருப்பது பலவீனமாக இருக்கிறது. 

தன் முதல் காதலை நினைத்து அர்ஜுன் தாஸ் அத்தனை உருக்கத்துடன் நடித்திருக்கும் போது அந்தக் காதல் எத்தகைய அழுத்தத்தை தந்திருக்க வேண்டும்..? ஆனால் காட்சிகளில் அந்த நம்பகத்தன்மை தவறுகிறது.

ஆனால் ஒவ்வொருவரிடமும் நடிப்பை வாங்கி இருப்பதில் விக்னேஷ் ஸ்ரீகாந்த் வென்று இருக்கிறார். காதல்களில் அழுத்தத்தை கொடுக்க தவறியது மட்டும்தான் குறை. 

ஒன்ஸ் மோர் – வாட்ச்சபில் ஒன்ஸ்..!

– வேணுஜி