August 28, 2026
  • August 28, 2026
Breaking News
August 28, 2026

அமரம் திரைப்பட விமர்சனம்

By 0 5 Views

மேற்கு மலைத் தொடர்ச்சிப் பகுதியில் வாழும் மக்களைப் பற்றிய பதிவுகள் தமிழ் சினிமாவில் வந்திருக்கின்றன. ஆனால் கிழக்கு மலை தொடர்ச்சியை ஆதாரமாகக் கொண்டு வாழும் மக்களைப் பற்றிய பட பதிவுகள் குறைவுதான். 

அந்தக் குறையை நிறைவு செய்ய வந்திருக்கிறது இந்தப் படம். இயல்பாகவும் இயற்கைக்கு மனிதன் செய்த கொடுமையின் விளைவாகவும் அந்த பகுதிகளில் மழை பொய்த்து போய் விவசாயமும் விழுந்து கிடக்க, வேறு வழி தெரியாதவர்கள் வாழ்வாதாரமாக வன்முறையை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். 

அந்தக் குழுவுக்கு என்று ஒரு தாதா… அவரிடம் வேலை பார்க்கும் கைக்கூலிகள்… பணம் கொடுத்தால் எந்த விதமான கொடூர செயலையும் செய்ய தயாராக இருக்கும் கூட்டம்… இதுதான் படத்தின் முக்கிய களம். 

அப்படி இருக்கும் சாய் தீனாவிடம் ஏஜெண்டாக இருக்கும் ஜார்ஜ் மரியான் அறிமுகத்தில் வந்து சேர்கிறார் நாயகன் ராஜன் தேஜஸ்வர். சொந்த வாழ்வின் சோகம் காரணமாக மனதில் ஈவு இரக்கம் என்பது எதுவும் இல்லாமல் காசு கொடுத்தால் எந்த வேலையும் செய்ய தயாராக இருக்கும் அவர் அதன்படி கொடூரமான கொலைகளை செய்து கொண்டிருக்கிறார். 

அப்படி ஒரு கம்யூனிஸ்ட் புள்ளியாக இருக்கும் சுரேஷ் மேனனை கொல்லும்போது அவரது மகள் ஐரா அகர்வால் அந்த கொடூரத்தை பார்த்து அதைச் செய்த ராஜன் தேஜஸ் வரை கொல்வதற்கு சபதம் எடுக்கிறார்.

ஆனால் அவரை நெருங்கும் போது ஒரு கட்டத்தில் ராஜனே ஐராவின் உயிரை காப்பாற்ற நேர, அதன் பின்பு அவரை புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்.

இந்த கொடூர பின்னணிக்கெல்லாம் காரணமாக இருக்கும் அரசியல்வாதி நாகி நீடுவின் மகனும் ராஜனார் இறந்து போக நாகி நீடு வின் கடும் கோபத்துக்கு ஆளாகும் ராஜன் என்ன ஆனார்..? அவரை புரிந்து கொண்ட ஐராவின் நிலை என்ன..? என்பதெல்லாம் மீதி கதை.

ஒரு கூலிப்படை கொலையாளியாக ராஜன் தேஜஸ்வர் பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ஆனால் அவரது முகம் எப்படி இருக்கும் என்பதையே நாம் பாதி படத்துக்கு மேல் தான் பார்க்க முடிகிறது. அவ்வளவு அடர்த்தியான முடியும் தாடியும் தேவை இல்லை. 

அத்துடன் அவருக்கு படம் முழுவதும் பெரிதும் வசனங்களே இல்லை எல்லாம் உடல் மொழியில் தெரிவிக்க வேண்டிய செய்திகளாகவே இருக்க, கடைசியில் ஐராவிடம் தன் கதை சொல்லும் போது மட்டும்தான் வாயிலேயே திறக்கிறார். 

ஆக படம் முடியும்போதுதான் அவரது முகமும் குரலும் நமக்கு பரிச்சயம் ஆகிறது. எனவே அடுத்த படத்தில் தான் அவரைப் பற்றி முழுமையாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆரம்பத்தில் வாழ்க்கையை அனுபவிக்க துடிக்கும் பணக்கார யுவதியாக வரும் ஐரா அகர்வால் அழகாக இருக்கிறார். ஆனால் தந்தையை இழந்தபின் அவரது வாழ்க்கை பாதை மாறிப் போய் ராஜனின் பின்னால் அலையும்போது பாவமாக இருக்கிறது. 

ஆனால் அழகிலும் நடிப்பிலும் பாஸ்மார்க்குக்கு மேலேயே எடுத்திருக்கும் ஐராவுக்கு இனி படங்கள் நிறைய கிடைக்கலாம்.

வழக்கம்போல் தன்னுடைய குணச்சித்திர நடிப்பால் கவர்கிறார் ஜார்ஜ் மரியான். 

இந்த கூட்டத்துக்கு தலைமை ஏற்கும் சாய் தீனா, மற்றும் கடைசியில் திடீர் வில்லனாகும் ஹரிஷ் பெராடி மற்றும் வாசுதேவன் முரளி உள்ளிட்டோர் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.

வில்லன் நாகிநீடு மற்றவர்களுக்கு பல துன்பங்களை கொடுத்தாலும் கடைசியில் அவரும் பரிதாபத்துக்கு ஆளாகிறார்.

வறட்சியும் கொடூரமும் மிக்க இந்த திரைக்கதையில் கூட தன்னுடைய வளமான ஒளிப்பதிவால் அழகியல் சேர்க்கிறார் பரத் குமார்.

இசையமைப்பாளர் மிக்கி ஜெ. மேயர், படத்தின் பதட்டத்திற்கு மேலும் பரபரப்பை கூட்டி கவனிக்க வைக்கிறார்.

படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் திரு அருள் கிருஷ்ணா தன் வாழ்க்கையில் நிறைய அனுபவங்களை பெற்றவர் என்பது இந்த படத்தின் மூலம் தெளிவாகிறது. பூகோள ரீதியாக ஒரு படைப்பை தந்திருக்கும் அவர், திரைக்கதையை இன்னும் தெளிவாக இருந்தால் கூடுதலாக படத்தை ரசித்து இருக்க முடியும். 

ஆனால் வசனங்களில் அனல் பறக்கிறது. ஒவ்வொரு வசனமும் கற்பனையில் இருந்து எடுக்காமல் வாழ்க்கையில் இருந்து எடுத்து எழுதி இருக்கிறார். 

அமரம் – முள் மரம்..!

– வேணுஜி