August 24, 2026
  • August 24, 2026
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • சென்னையில் சிறப்பாக நடைபெற்ற ‘தமிழ்நாடு கார்டியாக் எலக்ட்ரோபிசியாலஜி மாநாடு (TNEPIC)..!’
August 24, 2026

சென்னையில் சிறப்பாக நடைபெற்ற ‘தமிழ்நாடு கார்டியாக் எலக்ட்ரோபிசியாலஜி மாநாடு (TNEPIC)..!’

By 0 9 Views

சென்னை, ஆகஸ்ட் 24, 2026:* இதயத் துடிப்பு கோளாறுகள் குறித்த நவீன மருத்துவத்தில் உலகளாவிய கவனத்தை ஈர்த்த ‘தமிழ்நாடு இதய மின் உடலியங்கியல் மாநாடு (TNEPIC 2026)’ சென்னையில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

வேகமாக மாற்றம் கண்டு வரும் இதய இலய கோளாறுகள் துறையில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த விவாதங்கள், அறிவியல் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் நேரடி கற்றல் பயிற்சிகள், இரண்டு நாட்கள் மாநாட்டில் இடம்பெற்றன.

இதய இலய சிகிச்சையில் முன்னணி நிபுணர்கள், பல வெளிநாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், இதயவியல் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட, இந்தியா முழுவதும் இருந்தும், இலங்கை, மொரிஷீயஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் இதில் பங்கேற்றனர்.

“இதயத் துடிப்பு கோளாறுகளின் உலகம் – மின் உடலியங்கியலும், புத்தாக்கமும் இணையும் இடம்” (The World of Heart Rhythm Disorders – Where Electrophysiology Meets Innovation) என்ற கருப்பொருளின் கீழ் இம்மாநாடு நடைபெற்றது. இதய மேலறை மிகைத்துடிப்பு , ஏட்ரியக் குறு நடுக்கம், இதயக் கீழறை மிகைத்துடிப்பு மற்றும் ஆக்சிஜன் குறைபாடு சாராத இதயத்தசை நோய்கள், இதய சாதனங்கள், இரத்தஓட்டக் குறைபாட்டால் ஏற்படும் மயக்கம், திடீர் இதய உயிரிழப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்களான துடிப்பு-புல நீக்கம், கம்பியற்ற பேஸ்மேக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன சிகிச்சைகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

மாநாட்டை துவக்கி வைத்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர் மாண்புமிகு திரு. ஜெ. சி. டி. பிரபாகரன், சட்டமன்றப் பேரவைத் தலைவர் தனது உரையில், “மேம்பட்ட இதயத் துடிப்பு மருத்துவத்தில் சென்னை ஒரு முக்கிய மையமாக உருவெடுத்து வருவது பெருமிதமளிக்கிறது.

புதிய கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்துகொள்ளவும், இதய சிகிச்சையை வலுப்படுத்தவும், ஒரு சிறந்த தளத்தை இம்மாநாடு வழங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள நிபுணர்களை ஒரே ஒரே தளத்தில் ஒருங்கிணைத்து பயனுள்ள விவாதங்களை சாத்தியாக்கியிருக்கும் மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு எனது பாராட்டுக்கள்” என்று கூறினார்.

TNEPIC 2026 நிகழ்வானது ‘கார்டியாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா’வின் (சென்னை) ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், ‘இந்தியன் ஹார்ட் ரிதம் சொசைட்டி’யின் அங்கீகாரத்தையும் பெற்றது. இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத் தலைவராக டாக்டர் கே. ஜெய்சங்கரும், அறிவியல் குழுவின் தலைவராக டாக்டர் பி. வி. சஞ்சய்யும் செயல்பட்டனர்.

மாநாட்டின் அமைப்புச் செயலாளர் டாக்டர் தீப் சந்த் ராஜா எஸ். பேசுகையில், “ஏட்ரிய குறுநடுக்கம் (ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன்) போன்ற இதயத் துடிப்பு பிரச்சினைகளுக்கு இப்போது கிடைக்கக்கூடிய அதிநவீன சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அறிவுப்பரிமாற்றத்தை ஏதுவாக்குவதே TNEPIC 2026 மாநாட்டின் நோக்கமாகும்.

துடிப்பு-புல நீக்கம், கம்பியற்ற பேஸ்மேக்கர்கள் போன்ற புதிய கண்டுபிடிப்புகளையும் இம்மாநாட்டில் நாங்கள் காட்சிப்படுத்தினோம். அனுபவம் மிக்க நிபுணர்களுடன் கலந்துரையாடவும், செய்முறைப் பயிற்சியைப் பெறுவதற்கும் மருத்துவக் கல்வி மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது” என்றார்.

நவீன அறிவியல் அமர்வுகள், அறிகுறி மற்றும் சிகிச்சை அடிப்படையிலான கற்றல் (case-based learning), விவாதங்கள் மற்றும் செய்முறைப் பயிற்சிகள் ஆகியவற்றின் கலவையாகத் திகழ்ந்த TNEPIC 2026 மாநாடு, தனிச்சிறப்பு பிரிவான இதயத் துடிப்பு கோளாறுகளுக்கான சிகிச்சையை வழங்குவதில் இதய மின் உடலியங்கியல் (எலக்ட்ரோபிசியாலஜி) நிபுணர்களின் வளர்ந்துவரும் பங்கை முன்னிலைப்படுத்தியது.

மேலும், மருத்துவர்களும், பயிற்சி பெறுநர்களும் தங்களின் நடைமுறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், புதிய தொழில்நுட்பங்களை மருத்துவ நடைமுறையில் எவ்வாறு சிறப்பாக ஒருங்கிணைக்கலாம் என்பதை ஆராயவும் இந்த மாநாடு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியது.

இதயப்படபடப்பு, தலைசுற்றல் மற்றும் இதயச் செயலிழப்பு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கும், பேஸ்மேக்கர் பொருத்துதல் தேவைப்படுபவர்களுக்கும், இதய நலனை மேம்படுத்துவதில் அதிநவீன சிகிச்சைகளின் முக்கியத்துவத்தையும் இம்மாநாடு வலியுறுத்தியது.