’பியார் பிரேமா காதல்’ மூலம் இயக்குநராக ரசிகர்களை கவர்ந்த இளன், இந்த ‘பியார் பிரேமா கல்யாணம்’ மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கிறார் – இயக்கமும் அவர்தான்.
இளனுக்கும் சான்வி மேக்னாவுக்கும் திருமணம் நடக்கவிருக்க, திருமண மேடையில் இருந்து சான்வி மேக்னா தெரித்து ஓடுவதில் இருந்து படம் தொடங்குகிறது. என்ன நடந்ததாம்?
ஒரு எக்குத்தப்பான சந்திப்பின் மூலம் சான்வி மேக்னாவை காதலிக்க ஆரம்பிக்கும் இளன், அந்தக் காதலும் கைகூட, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் நடைபெறுகிறது.
ஆனால் அங்கிருந்து சான்வி ஓடும் காரணம் தன்னுடைய பெற்றோரை திருமணத்திற்காக பிரிந்து செல்ல முடியாது என்பதால்தான். யார் சொல்லியும் கேட்காமல் தன் வாதத்தில் பிடிவாதமாக இருக்கும் சான்விக்காக மணப்பெண் வீட்டுக்கு வீட்டோடு மாப்பிள்ளையாகப் போகிறார் இளன்.
அப்படிச் சென்றதால் அவருக்கு ஏற்பட்ட சாதக பாதகங்கள் என்ன… இறுதியில் என்ன ஆனது..? என்பதுதான் கதை.
நாயகனாக அறிமுகமாகியிருக்கும் இளன், அறிமுக நடிகர் என்ற பதட்டம் இல்லாமல் படு இயல்பாக நடித்திருக்கிறார். தன் பெற்றோரிடம் பொறுப்பில்லாதவராக நடந்து கொண்டாலும் புகுந்த வீட்டில் அவர் பொறுப்பான மாப்பிள்ளையாக நடந்து கொள்வது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
ஆணாதிக்க மனநிலையில் இல்லாமல் பார்த்தாலும் அவர் சான்வி வீட்டில் ஹவுஸ் ஹஸ்பண்ட் ஆக படும் துன்பங்கள் பரிதாபகரமானவை.
நாயகியாக நடித்திருக்கும் சான்வி மேக்னா, படத் தொடக்கத்தில் சுமாரானவராக தெரிந்தாலும் போகப்போக தனது கவர்ச்சியின் மூலமும், இயல்பான நடிப்பின் மூலமும் நம்மை கவர்ந்து விடுகிறார். இப்படி ஒரு காதலி கிடைத்தால் எந்த ஆண்மகனும் வீட்டோடு மாப்பிள்ளையாகப் போய்விடுவார்.
சான்வியின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, படத்துக்கு படம் வெவ்வேறு அம்மாக்களை தனது நடிப்பால் காட்டி வருகிறார். இதில் அவர் ஏற்று இருக்கும் படு இயல்பான இளனின் மாமியார் வேடம் ரசிக்க வைக்கிறது.
அதேபோல் இளனின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசத்தின் நடிப்பையும் சொல்லியாக வேண்டும். கடைசி கடைசியாக மகன் படும் அவஸ்தைகளை பார்த்து அவர் எதுக்கும் முடிவுகள் சீரியஸாக இருப்பதுடன் நம்மை சிரிக்கவும் வைக்கின்றன.
இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், செந்தில், இளங்கோ குமரவேல் உள்ளிட்ட கலைஞர்களின் பாத்திரங்கள் திரைக்கதைக்கும் படத்தின் நோக்கத்துக்கும் உதவுகின்றன.
யோகி பாபு வரும் காட்சிகள் ஆச்சரியமாக சிரிக்க வைக்கின்றன. மாறன் வரும் காட்சிகளும் அப்படியே.
ஒரு இளமையான கலர்ஃபுல் படத்துக்கு ஒளிப்பதிவு எப்படி இருக்க வேண்டுமோ அதை புரிந்து கொண்டு பக்காவாகப் படமாக்கி இருக்கிறார் தினேஷ் கே.பாபு. முக்கியமாக இளன், சான்வி முகங்கள் அழகாகத் தோன்றுவதற்கு ஒளிப்பதிவு முக்கிய காரணியாக இருக்கிறது.
பியார் பிரேமா காதல் அளவுக்கு இல்லாவிட்டாலும் யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்துக்கு பெரிதும் துணை புரிந்திருக்கிறது.
முன்பாதிக்கதையில் ரசனைக்கான இடங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் பின் பாதிக்கதை ஒரு சீரியல் போலவே சென்று கொண்டிருக்கிறது.
ஒரு குறும்படத்துக்கான சாத்தியம் மட்டுமே உள்ள கதையில் திரைக்கதை இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். இதில் கூடுதல் திரைக் கதையை எழுதி இருக்கிறார் இயக்கனருமான இளன்.
காதலர்களும் ரசிக்கலாம்… குடும்பங்களும் ரசிக்கலாம்… என்கிற அளவில் எல்லா சாராரையும் திருப்தி படித்த முயன்றிருக்கும் இளன் அதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்லலாம்.
எப்படி இருந்தாலும் பொதுவாகவே கல்யாண வாழ்க்கையை விட காதல் வாழ்க்கைதான் ரசிக்கத்தக்கதாக இருக்கும்.
அந்த வகையில் பியார் பிரேமா காதலுக்கு அடுத்த இடத்தில்தான் நிற்கிறது இந்த பியார் பிரேமா கல்யாணம்.
– வேணுஜி