August 20, 2026
  • August 20, 2026
Breaking News
August 20, 2026

ஒன் மேன் திரைப்பட விமர்சனம்

By 0 8 Views

ஒரு புதுமுக இயக்குனராக, தயாரிப்பாளராக வெங்காயம் படத்தில் அறிமுகமாகி தமிழ்த் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த சங்ககிரி ராஜ்குமார் அந்தப் படம் எடுத்த அனுபவங்களையே இன்னொரு படமாக்கி பயாஸ்கோப் என்ற பெயரில் கொடுத்தார். 

இப்போது இந்தப் புதுமைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல இன்னொரு புதுமையை இந்த ஒன் மேன் படத்தில் செய்து சாதனை படைத்திருக்கிறார். 

ஒரு படம் உருவாக எத்தனை தொழில்நுட்ப, மற்றும் படைப்பு, நடிப்புக் கலைஞர்கள் தேவையோ அவை எல்லாவற்றையும் தனி ஒரு மனிதனாக நின்று அந்தந்த விஷயங்களை கற்றுக் கொண்டு பல வருடங்கள் முயன்று இந்தப் படத்தை தனி ஒரு மனிதனாக உருவாக்கி இருக்கிறார். 

கதை இப்படி போகிறது…

நான்கு சாதனை மனிதர்கள் தங்களுக்கான விருதுகளை பெற ஒரு காரில் பயணம் செய்கிறார்கள். அந்த நான்கு பேர் மட்டுமல்லாது அந்த காரை ஓட்டி வருபவரும் சங்ககிரி ராஜ்குமார்தான். வழியில் ஒரு காட்டுக்குள் செல்ல நேரிட, அங்கே சந்திக்கும் ஒரு விஞ்ஞானி மூலம் இந்த உலகத்தை 10 நாட்களுக்கு தங்களுடைய சொந்த உலகமாக மாற்றும் முயற்சியில் நால்வரும் ஈடுபடுகிறார்கள். அதன் முடிவு என்ன ஆனது என்பதுதான் கதை. 

கொஞ்சம் நம்ப முடியாத கதைதான். அதேபோல் ஒரு திரைப்படத்தின் அத்தனை பொறுப்புகளையும் ஒருவரே ஏற்று செய்திருப்பது என்பதும் நம்புகிற விஷயமாக இல்லை. ஆனால், நம்பித்தான் ஆக வேண்டும்.

வெவ்வேறு விதமான பாத்திரங்களுக்கு வெவ்வேறு ஒப்பனைகள் போட்டுக் கொள்வதுடன் அதற்கான காட்சிகளையும் தானே கேமராவை இயக்கி, அந்த கேமராவின் முன்னே தானே சென்று நடித்து, பிறகு அதை எடிட் செய்து, டப்பிங் பேசி, கிராஃபிக் வேலைகள் செய்து, பின்னணி இசை கோர்த்து… என்று ஏகப்பட்ட வேலைகளை அவர் பார்த்திருப்பது பிரமிக்க வைக்கிறது. 

அதிலும் ஹைலைட்டாக ஒரு காட்சியில் ஒரு மன்னர் பதவியேற்பு விழாவுக்கு வந்திருக்கும் நூற்றுக்கணக்கானவர்கள், மற்றும் ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்க்கும் அத்தனை பார்வையாளர்கள், இந்த பிரச்சனையை துப்பறிய போலீஸ் வரும்போது கூடும் ஊர் மக்கள் என்று மூன்று காட்சிகளில் அத்தனை பாத்திரங்களிலும் அவரே தோன்றி இருப்பது பிரமிக்க வைக்கிறது.

அதற்கு அவருக்கு கிராபிக்ஸ் பெருமளவில் உதவியிருக்கிறது என்றாலும் அந்த கிராபிக்ஸையும் தானே பயின்று அந்த முயற்சி யைப் படத்துக்கு கொண்டு வந்திருப்பதும் ஆகச் சிறப்பு. 

அத்தனை கேரக்டர்களிலும் ஒருவரே வந்தால் எவ்வளவு நேரம் படத்தை பார்க்க முடியும் என்கிற அங்கலய்ப்பு தேவையில்லாதது. அதற்காகத்தான் கார் சேஸிங், விமானத்தில் சண்டை, ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகள் என்று ஏகப்பட்ட ஆக்சன் ஐட்டங்களையும் உள்ளே வைத்திருக்கிறார் ராஜ்குமார்.

உலகத்திலேயே யாரும் செய்திராத முயற்சி இது என்ற அளவில் ராஜ்குமாரின் முயற்சியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடலாம்.

ஆனால் முயற்சி செய்த அளவுக்கு அவருக்கு பயிற்சி இருக்கிறதா என்பதுதான் இந்த படத்தில் நமக்கு எழுந்த கேள்வி. 

ஐந்து முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் போது அவற்றுக்கு ஈடான உடல் அமைப்பு மற்றும் உருவ அமைப்பை மாற்றுவதற்கு இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம்.

அதேபோல் கிராபிக்ஸ் காட்சிகளிலும் இன்னும் சில படிகள் மேலே சென்று நேர்த்தியுடன் அவற்றை உருவாக்கி இருந்தால் ஹாலிவுட் க்கு நாம் சவால் விட்டு இருக்க முடியும். 

குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் ஏஐ தொழில்நுட்பம் உள்ளே வந்து எது வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று ஆன நிலையில், இந்தப் படத்தின் ப்ரமோஷன்களுக்கு எல்லாம் அதை ராஜ்குமார் பயன்படுத்தி இருப்பது அற்புதமான உத்தியாக இருக்கிறது.

அதே நேர்த்தியுடன் படத்துக்குள்ளும் அவற்றை பயன்படுத்தி இருந்தால் ஒப்பற்ற படமாக இது இருந்திருக்கும். 

படத்துக்குள் அங்கங்கே படப்பிடிப்பு குறித்து நமக்கு எழும் சந்தேகங்களை தீர்க்கும் விதமாக படத்தின் இறுதியில் அவற்றையெல்லாம் எப்படி படம் ஆக்கினார் என்பதை காட்டும் போது ஆச்சரியமாக இருக்கிறது.

ஆனாலும் சங்ககிரி ராஜ்குமாரின் இந்த சாதனை உலக அரங்கில் வேறு எவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

ஒன் மேன் – வொண்டர் மேன்..!

– வேணுஜி