நயன்தாரா கதாநாயகியாக இருக்கும் தைரியத்தில் ரொம்பவும் மெலிதான லைன் ஒன்றை எடுத்துக் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் விஷ்ணு எடவன்.
கொங்கு மண்டலத்து வசதியான குடும்பத்து வாரிசு என்றாலும் காதலிப்பதற்கு ஓர் பெண் கிடைக்காமல் ரொம்பவும் வருத்தத்தில் இருக்கிறார் கவின். சொந்த அத்தை மகளை காதலிப்பதற்கு கூட பெரிதாக பிளான் எல்லாம் போட்டு பல்பு வாங்கியவர், “இனி நாங்கள் பார்க்கும் பெண்ணையே கல்யாணம் செய்து கொள்…” என்று பெற்றோர் கே பாக்யராஜும், ராதிகாவும் கண்டிஷனாக கூறிவிட, ‘வந்தால் காதலியோடுதான்…’ என்று வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்து விடுகிறார்.
அதே கொங்கு மண்டலத்தில இன்னொரு மூலையிலிருந்து ஒரு கோபக்கார முரடனைத் திருமணம் செய்து கொள்ள பயந்து நயன்தாராவும் சென்னைக்கு ஓடி வந்து விடுகிறார்.
அப்புறம் என்ன நடந்திருக்கும் என்பதை கிண்டர் கார்டன் படிக்கும் குழந்தை கூட கண்டுபிடித்து விடும். ஆனால் அது எப்படி நடந்தது என்பதில்தான் இயக்குனர் சுவாரஸ்யம் காட்டியிருக்கிறார்.
கோவை இளைஞராக நடித்திருக்கும் கவினுக்கு கோயம்புத்தூர் பாஷை எப்படி எளிதாகக் கை கொடுக்கிறதோ அப்படியே அந்த வேடமும் ‘நச்’சென்று பொருந்தி இருக்கிறது.
காதல் கைவிட்டு விடும் நேரங்களில் எல்லாம் பொசுக் எனறு அழுது தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தி விடுபவர், ஒரு கட்டத்தில் நயன்தாராவை சிக்கலில் இருந்து காப்பாற்ற, பொறுத்தது போதும் என்று பொங்கி எழுவது சபாஷ் போட வைக்கிறது.
அதேபோல் எந்த விதமான பாத்திரத்தையும் எளிதாக நடித்து விடும் நயன்தாராவுக்கு இதில் வாய்த்திருக்கும் வேடம் மிகச் சுலபமானதுதான். பாப்கார்னை கொரிப்பது போல் எளிதாக நொறுக்கி தள்ளி விட்டு போயிருக்கிறார்.
ஆனால் என்ன ஒன்று, தன்னைவிட வயதில் இளையவராகத் தெரியும் கவினுக்கு ஏற்ற ஜோடியாக இன்னும் உடல் மொழியிலும், உருவத்திலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
நடிப்பைப் போலவே தோற்றத்திலும் முதிர்ச்சி இருப்பதால் கவினுடன் வரும் காட்சிகளில் எல்லாம் அவரது அக்கா போலவே தோன்றுகிறார் நயன்.
கவினின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகாவுக்கு இது எத்தனையாவது அம்மா வேடம் என்று தெரியவில்லை. ஆனால் இலகுவான அம்மாவாக வந்து போயிருக்கிறார்.
கவினின் அப்பாவாக நடித்திருக்கும் கே.பாக்யராஜ் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு சீறு சீறி பெரிய மனிதர் வீட்டு பிள்ளையை நாலு சாத்து சாத்தும் போது “வாவ்..!” சொல்ல வைக்கிறார்.
நயன்தாராவின் தந்தையாக நடித்திருக்கும் பிரபுவின் நடிப்புத் திறமையை காட்டுவதற்கு இந்த படத்தில் பெரிய வாய்ப்பு இல்லை. சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சுஹாசினி மணிரத்னம் கதைக்குள்ளே வரும் காட்சி ரொம்பவும் சீரியஸானது. ஆனால் நமக்கு அவரைப் பார்த்ததும் சிரிப்பு வருகிறது.
இவர்களுடன் சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி ஆகியோரது காட்சிகள் வாய்விட்டு சிரிக்க முடிவது மிகப்பெரிய ஆறுதல். ரொம்ப காலம் கழித்து காமெடியன் சத்யன் இதில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
விடிவி கணேஷ், ஃபெப்சி விஜயன், காவியா அறிவுமணி, மிர்ச்சி கெமி, அம்ருதா சீனிவாசன் ஆகியோரும் கூட அங்கங்கே பளிச்சிட்டிருக்கிறார்கள்.
நயன்தாராவின் சொந்த கம்பெனி படம் என்பதாலோ என்னவோ ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா, நயன்தாராவை அழகாக காட்டுவதற்கு ரொம்பவே மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.
ஜென் மார்ட்டின் இசையில் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி காதலுக்கு கட்டியம் கூறுவதாகவே அமைந்திருக்கிறது.
இந்த எளிதான கதையை எழுதி இயக்கியிருக்கும் விஷ்ணு எடவன், படத்தின் ட்ரீட்மெண்டிலும் வசனங்களிலும் ‘வேற லெவல்’ காட்டியிருக்கிறார்.
ஆனாலும் இன்றைய ஜென் z இளசுகளை கவனத்திலேயே வைத்துக் கொள்ளாமல் இன்னும் கமல் ரஜினி காலத்திலிருந்து வெளியே வராமல் காட்சிகளை அமைத்திருப்பது அவரது அனுபவ (!) முதிர்ச்சியை காட்டிவிடுகிறது.
அதேபோல் எப்போதோ முடிந்து இருக்க வேண்டிய கதையை டியூரேஷனுக்காக இழுத்து இருப்பது நன்றாகவே தெரிகிறது.
ஆனாலும் காசு கொடுத்து தியேட்டருக்கு போகும் எவரையும் இந்தப் படம் ஏமாற்றாது.
ஹய் – ஜாய்..!
– வேணுஜி