March 29, 2024
  • March 29, 2024
Breaking News
May 6, 2022

அக்கா குருவி திரைப்பட விமர்சனம்

By 0 553 Views

உயிர், மிருகம், சிந்து சமவெளி என சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் ‘ ஒரு மாதிரி ‘ பேரெடுத்த இயக்குனர் சாமிதான் இந்தப்படத்தை எடுத்தார் என்று கோயில் சாமி முன் சத்தியம் செய்தாலும் நம்ப முடியாது. 

உலக புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் ‘Children of heaven’ படத்தின் அனுமதி பெற்று தமிழுக்காக பட்டி டிங்கரிிங் பார்க்கப்பட்டு உருவாகியிருக்கும் படம் இது.

மஜித் மஜிதியின் படத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் அண்ணன் – தங்கைக்கு இடையே உள்ள பாசப்பிணைப்பு அழகுற சொல்லப்பட்டிருக்கும். பள்ளி செல்லும் பருவத்தை உடைய அவர்கள் ஒற்றை ஷூவை வைத்துக்கொண்டு மாற்றி மாற்றிப் போட்டுக்கொண்டு பள்ளி செல்வார்கள். அந்த விஷயத்தை அப்பாவுக்கு தெரியாமல் மறைக்க அவர்கள் படும் பாடும், அப்பாவின் ஏழ்மையும் கூட நெகிழ்வுடன் சொல்லப்பட்டிருக்கும்.

அதை அந்தப் படத்தின் உணர்வுகள் குறையாமல், அதேசமயம் தமிழ் ரசிகர்களுக்காக சில மாற்றங்களை செய்து அக்கா குருவியை இயக்கியிருக்கிறார் சாமி.

இந்த இடத்தில் நமக்கு ஒரு சந்தேகம். உலகின் பாராட்டைப் பெற்ற ஒரு படம் உலகின் எந்த மூலைக்கும் சரியாக இருக்கும் என்ற நிலையில் தமிழுக்கு என்று அல்லது தெலுங்குக்கு என்று அல்லது கேரளத்துக்கு என்று மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமா என்பதுதான். இப்படி கதை இருந்தால்தான் இந்தப் படத்தை நாங்கள் பார்ப்போம் என்று தமிழ் ரசிகர்கள் ஏதும் சத்தியம் செய்து கொடுத்து இருக்கிறார்களா என்ன..?

அப்படி இந்தப் படத்தில் சாமி தமிழ் ரசிகர்களுக்காக செய்திருக்கும் மாற்றம் என்னவென்றால் இந்த அக்கா தம்பி கதை பிளாஷ்பேக்கில் நடந்ததாக இன்றைக்கு வளர்ந்து பெரியவர்களாக இருக்கும் அண்ணனும் தங்கையும் நினைத்துப் பார்த்து கொள்ளுமாறு இருப்பதும், ஊடாடும் ஒரு காதல் கதையையும் உள்ளே வைத்து சாண்ட்விச் செய்து இருக்கிறார் சாமி.

ஒரு விதத்தில் சாமியின் முயற்சியை பாராட்டலாம் ஏனென்றால் மஜித் மஜிதி, தான் சார்ந்த நிலத்தின் பொருளாதார பூகோள சூழ்நிலைக்கு ஏற்றார்போல் லாஜிக் வைத்து சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தை எடுத்திருப்பார் ஆனால் சாமி இதில் எடுத்துக்கொண்டிருக்கும் கதைக் களம் நம் கொடைக்கானல் பூம்பாறை என்ற கிராமம்.

இந்த கிராமத்து வாழ்க்கை முறையையும் ஒரு ஷூ கூட வாங்க காசு இல்லாதவர்களாக அவர்கள் இருக்க முடியுமா என்ற கேள்விக்கான லாஜிக் இத்யாதிக்காகவும் இப்படி மாற்றங்களை செய்திருக்கிறார் சாமி. ஆனால் காதல் இல்லாத படங்களை நாங்கள் பார்க்கவே மாட்டோம் என்று தமிழ் ரசிகர்கள் பிடிவாதமாக இருப்பதாக அவர் நினைப்பதுதான் வியப்பாக இருக்கிறது.

அந்த காதல் கதைக்குள்ளும் இசைஞானி இளையராஜாவின் பங்கு அதிகமாக இருக்கிறது. இளையராஜாவின் இசை வெறியர்களுக்கு இந்த எபிசோட் மிகுந்த உற்சாகத்தை தரும்.

அதே போல் முந்தைய படத்தின் கிளைமாக்சையும் சற்றே மாற்றி பிளாஷ் பேக்கில் இருந்து நிகழ்காலத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் சாமி 

சாமியின் படத்தில் கதாபாத்திரங்களுக்கான நடிக நடிகையர் அற்புதமாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். அண்ணன் தங்கை ஆக வரும் மாஹினும், டாவியாவும் மனதை கொள்ளை கொள்கிறார்கள். அவர்களின் அப்பாவும் சரியான தேர்வு.

இளையராஜாவின் பின்னணி இசை படத்துக்கு உயிர் கொடுத்துள்ள நிலையில் காலத்தால் அழிக்க முடியாத அவரது பழைய பாடல்கள் முன்னிலை பெறுகின்றன.

பூம்பாறை மலைப் பிரதேசத்தின் இயற்கை எழில் மிகு காட்சிகளை உப்பல் வி நாயனாரின் ஒளிப்பதிவு செறிவூட்டி காட்டி இருக்கிறது. 

காதல் காட்சிகளைப் போலவே காமெடி காட்சிகள் இல்லாத தமிழ் படமும் சாமி குத்தம் ஆகிவிடும் என்று நினைத்த சாமி சில காமெடி காட்சிகளிலும் கொஞ்சம் தடுமாறி இருக்கிறார்.

ஆனாலும், இதே மாதிரி நல்ல படங்களை எடுத்தால் ஊர் உலகம் உங்களைக் கொண்டாடும் என்பது சாமி சத்தியம்..!

அக்கா குருவி – அன்பின் அருவி..!