April 2, 2025
  • April 2, 2025
Breaking News
  • Home
  • Uncategorized
  • எனக்குள் இருந்த இயக்குனரை தயாரிப்பாளரான நான் எளிதில் ஒத்துக் கொள்ளவில்லை – சஷி காந்த்
March 16, 2025

எனக்குள் இருந்த இயக்குனரை தயாரிப்பாளரான நான் எளிதில் ஒத்துக் கொள்ளவில்லை – சஷி காந்த்

By 0 21 Views

தயாரிக்கும் படங்களில் மட்டுமல்ல தயாரிப்பு நிறுவனத்தின் பெயரிலும் வித்தியாசமாக இருப்பது ‘ஒய் நாட்’ (YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனம்.

அதன் தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த், ‘டெஸ்ட்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

“ஒய் நாட் என்று என் நிறுவனத்துக்குப் பெயர் வைத்ததே “ஏன் முயற்சிக்கக் கூடாது..?” என்கிற அடிப்படையில் சினிமாவில் சகல துறைகளிலும் புதிய முயற்சிகளை செய்து பார்ப்பதற்காகத்தான். அந்த வகையில் திரைப்பட இயக்கம் என்பது நான் ஆரம்பத்திலேயே முடிவு செய்த ஒன்றுதான். அதை முறையாகக் கற்றுக் கொள்வதற்காக தான் தயாரிப்பு நிறுவனத்தையே தொடங்கினேன். 

தயாரிப்பாளர் என்ற முறையில் இயக்கத்தின் நுணுக்கங்கள் முழுமை பெறாத நிலையில் இன்னும் நீ தயாராகவில்லை என்று எனக்குள் இருந்த இயக்குனரிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன் அது இப்போதுதான் கைவந்திருக்கிறது…” என்று சிரிக்கிறார் சஷிகாந்த்.

இவர் தயாரித்து இயங்கி இருக்கும் டெஸ்ட் படம், மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடிப்பில் வரும் எப்ரல் மாதம் 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

2025 – ல் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகும் முதல் நேரடி தமிழ்ப் படம் என்ற அடையாளத்துடன் வருகிறது ‘டெஸ்ட்’.

இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் படம் பற்றி பேசினார் படத்தை தயாரித்து இயக்கியிருக்கும் சஷி காந்த்.

“பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பே டெஸ்ட் படத்தின் கதையை எழுதத் தொடங்கி விட்டேன். ஆனால், முழுமையாக தயாராகாததால் அது தொடர்ந்து கொண்டே இருந்தது. கொரோனா நேரத்தில் கிடைத்த நேரத்தில் தான், இந்த முறை நிச்சயம் படம் இயக்க வேண்டும் என்ற முடிவு எடுத்து, மீண்டும் இந்த கதையை எழுதத் தொடங்கினேன்.

‘ஒவ்வொரு மனிதருக்கும் அவர்கள் யார்? என்பதை உணரக்கூடிய ஒரு தருணம் வாழ்க்கையில் வரும், அப்படிப்பட்ட தருணத்தை எதிர்கொள்ளும் மூன்று கதாபாத்திரங்களின் கதைதான் இந்த படம். நம்மால் இது முடியுமா? என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கும், அதைத் துணிந்து செய்வதில் தயக்கம் காட்டுவோம்.

ஆனால், நம் வாழ்க்கையில் ஒரு சோதனைக்காலம் வந்துவிட்டால் அதில் இருந்து விடுபடுவதற்காக நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் மூலம் நாம் யார்? என்பதை நமக்கே புரிய வைக்கும். அப்படிப்பட்ட மூன்று நபர்கள் பற்றிதான் பேசியிருக்கிறோம். 

இந்தப் படத்துக்குள் மாதவன், சித்தார்த், நயன்தாரா எப்படி வந்தார்கள்..?

சித்தார்த், மாதவன், நயன்தாரா மூன்று பேருக்குமே ஒரு சோதனை வருகிறது, அதில் இருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பது தான் கதை.

சித்தார்த் மற்றும் நயன்தாராவிடம் இந்த படம் பற்றிய யோசனையை சொன்ன உடனே நடிக்க சம்மதித்து விட்டார்கள். மாதவன் மட்டுமே பல சந்தேகங்களை எழுப்பினார், அவரது சந்தேகங்களுக்கு ஏற்ப திரைக்கதையை பல முறை மாற்றியமைத்து, இறுதியாக அளித்த திரைக்கதையை படித்துவிட்டு சம்மதம் தெரிவித்தார்.

சித்தார்த் கிரிக்கெட் வீரராக நடித்திருக்கிறார், அவரது துறையில் அவருக்கு வரும் சோதனையை அவர் எப்படி வெல்கிறார், என்பது போல் மாதவன் மற்றும் நயன்தாரா ஆகியோருக்கும் சில சோதனைகள் வருகிறது. அதில் இருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள், என்பதை தான் படம் பேசும்.

ஆனால் இந்த மூன்று கதாபாத்திரங்களுக்கும்ஒரு தொடர்பு இருக்கும்.

ஏன் இந்தப்படத்தை தியேட்டரில் திரையிடாமல் ஒடிடி-யில் நேரடியாக வெளியிடுகிறீர்கள்..?

ஒடிடி-யில் நேரடியாக படத்தை வெளியிடுவதற்கு காரணம், உலக அளவில் படம் சென்றடைய வேண்டும் என்பதற்கு தான். படம் வெளியான உடன், நெட்பிளிக்ஸ் வைத்திருப்பவர்கள் அனைவரும் பார்ப்பார்கள், இந்தியாவில் மட்டும் இன்றி உலகில் பல்வேறு நாடுகளில் இருப்பவர்களும் பார்ப்பார்கள், அப்போது படத்திற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்கும், என்பதால் தான் ஒடிடியில் வெளியிடுகிறோம்.

படத்தில் கிரிக்கெட் விளையாட்டு இருந்தாலும், அதன் மூலம் ஒரு விசயத்தை சொல்லியிருக்கிறோமே தவிர, கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து கதை சொல்லவில்லை. அதே சமயம், கிரிக்கெட் போட்டியை காட்சிப்படுத்தும் போது சினிமாத்தனமாக அல்லாமல், வழக்கமாக கிரிக்கெட் போட்டியை ஒளிப்பதிவு செய்யும் பிராட்கேஸ்டிங் கேமரா மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறோம்.

அதனால், அந்த காட்சிகளை பார்க்கும் போது கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கும் உணர்வு ஏற்படும். அதற்காக பிரத்யேக குழு ஒன்றை வைத்து தான் படமாக்கியிருக்கிறோம்.

சித்தார்த்துக்கும் எனக்கும் கிரிக்கெட் ரொம்பவே பிடிக்கும். இந்த படத்திற்காக சித்தார்த் கிரிக்கெட் பயற்சி மேற்கொண்டார். நயன்தாரா இந்த படத்திற்காக முதல் முறையாக சொந்த குரலில் பேசியிருக்கிறார். லைவ் ரெக்கார்டிங் மூலம் வசனங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருப்பதால், நடிகர்கள் அனைவருமே ஒரு காட்சியில் நடிப்பதற்கு முன்பு அதில் எப்படி செய்ய வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதில் முழுமையான தயார் நிலையில் இருப்பார்கள். மூன்று பேருமே இந்த படத்திற்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்கள்.

அதேபோல், மீரா ஜாஸ்மீன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படத்தில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரமும் பேசப்படும். அவரது கதாபாத்திரம் விளம்பரத்தில் இடம்பெறாது, ஆனால், படத்தில் மிக முக்கியமான பங்கு உண்டு, அது படம் பார்க்கும் போது தெரிய வரும். 

கதை சொல்லல் மற்றும் இயக்குநரை தாண்டி இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களும் அவர் அவர் பணியின் மூலம் படத்திற்கு மெருகேற்றியிருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஏதோ இசையமைத்தேன் என்று இல்லாமல், தன் இசையின் மூலம் இந்த கதையை ரசிகர்களிடத்தில் எப்படி கொண்டு சேர்க்க முடியும், என்ற ரீதியில் தான் பணியாற்றியிருக்கிறார். அவரைப் போல் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றியிருப்பதால் தொழில்நுட்ப ரீதியாகவும் படம் சிறப்பாக வந்திருக்கிறது.”