January 19, 2026
  • January 19, 2026
Breaking News
April 27, 2025

அன்டில் டான் (Until Dawn) திரைப்பட விமர்சனம்

By 0 251 Views

‘அன்டில் டான்’ (Until Dawn) என்கிற இந்த திகில் படம் உலகமெங்கும் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

‘லைட்ஸ் அவுட்’, ‘அன்னாபெல் கிரியேஷன்’ போன்ற படங்களைத் தயாரித்த டேவிட் எஃப். சாண்ட்பெர்க் (David F.Sandberg) இந்த திகில் படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டு வெளியான அன்டில் டான் என்ற வீடியோ கேமை அடிப்படையாகக் கொண்டு, திரைக்கதை அமைக்கப்பட்டது இப்படம்.

கதை இதுதான்…

நாயகி எல்லா ரூபின் மற்றும் அவரது தோழர்கள், தோழிகளும், எல்லாவின் சகோதரி மெலானி மையா மிட்செல் காணாமல் போன தொலைதூர பள்ளத்தாக்குக்குச் செல்கிறார்கள். அங்குள்ள வீட்டில் அவர்கள் ஒரு நேர சுழற்சியில் (Time loop) சிக்கிக் கொண்டிருப்பதை உணர்கிறார்கள்.

அவர்கள் மீண்டும் மீண்டும் ஓரே கனவைக் கண்டு அதில் சாகிறார்கள். மீண்டும் இயல்புக்கு வரும் நேர சுழற்சியில் ஒவ்வொரு முறையும் வேறொரு புதுக் கொலைக்காரனை நேரிடுகிறார்கள். இச்சுழற்சியில் இருந்து தப்பிக்க அவர்கள் விடியும் வரை உயிர் பிழைத்தாக வேண்டும்.

இதுவரை நாம் பார்த்த ‘டைம் லூப்’ படங்களில் இருந்து இதில் மாறுபட்டிருக்கும் ஒரு விஷயம்… ஒவ்வொரு முறை அவர்கள் சாவதும் வேறு வேறு வடிவில் இருப்பதுதான். இந்த விஷயம் அவர்களுக்கே புரிந்து அதன் விதியை மாற்ற எல்லா ரூபின் தன்னையே பலி கொடுக்க முயல்வது நெகிழ்ச்சி. 

அதேபோல் மரணம் வருவதில் எது கனவு எது நிஜம் என்று அவர்கள் அறியாத வண்ணம் சித்தரிக்கப்பட்டிருப்பதும் திகிலைக் கூட்டுகிறது.

பூமிக்கு அடியில் இருக்கும் நிலவறையில் ஜன்னலும், கதவுகளும் எப்படி வந்தன என்று ஒரு கட்டத்தில் குழம்பி அதன் பிறகு அந்த வீடுகள் ஒரு நிலச்சரிவின்போது புதையுண்டன என்று புரிந்து கொள்வதையும் ரசிக்கலாம்.

மேக்ஸிம் அலெக்சாண்டரின் (Maxime Alexandre) ஒளிப்பதிவு படத்தின் திகிலைக் கூட்டி இருக்கிறது. மிச்சல் ஆலரின் (Michel Aller) படத்தொகுப்பும், பெஞ்சமின் வால்பிஷ் இன் (Benjamin Wallfisch) இசையும் அதற்கு உறுதுணை புரிந்திருக்கிறது.

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியாவெங்கும் வெளியிட்டு இருக்கும் இந்த படத்தை திகில் பிரியர்கள் தில்லாகப் பார்க்கலாம்..!

– வேணுஜி