காவியத்தனமான தலைப்புக்குள் கலங்கடிக்கும் ஒரு திரில்லரை சொல்லி இருக்கிறார் இயக்குனர் செ.ரா.ராஜேஷ்.
ஒரு இரவில் நடக்கும் ஒரு சம்பவம் எப்படி நாயகன் வாழ்க்கையையும், அவரைச் சுற்றி இருப்பவர்களையும் உலுக்கி எடுக்கிறது என்பதுதான் படத்தின் லைன்.
காதலர்களான நாயகன் அருண் கார்த்திக்கும் நாயகி எனாக்ஷி கங்குலியும் தங்களுக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் ஒரு போட்டோ ஷூட்டுக்காக கொடைக்கானல் வந்து ஒரு கெஸ்ட் ஹவுஸில் தங்குகிறார்கள். அங்கு ஒரு இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட விபரம் நமக்குத் தெரிவதுடன் அந்த வீட்டுக்குள் அவர்களையும் அறியாமல் யாரோ இருப்பது போன்று உணர்வு ஏற்படுகிறது.
இந்த பதட்டமான சூழலில், ஒரு நாள் இரவு எனாக்ஷி கங்குலி திடீரென்று காணாமல் போகிறார். ஆனாலும் அவர் அந்த வீட்டுக்குள் தான் இருக்கிறார் என்பதை அவரது குரல் உறுதி செய்கிறது. எப்படி முயன்றும் அவரைக் காப்பாற்ற முடியாத சூழலில் காவல்துறையை நாடுகிறார் அருண் கார்த்திக்.
அதை விசாரணை செய்யும் அதிகாரியான சேரன் ராஜ் பல கோணங்களில் அந்த பிரச்சனையை அணுக மாயமான எனாக்ஷி கங்குலி கிடைத்தாரா ?, அருண் கார்த்திக்கை பழி தீர்ப்பதற்காக அப்படி நடந்ததா ? என்பதை திகில் கலந்து சொல்வதுதான் இந்த படத்தின் கதை.
சின்னத்திரையில் அறியப்பட்டிருந்தாலும் இந்த படத்தின் மூலம் தான் பெரிய திரைக்கு வருகிறார் அருண் கார்த்திக். தன்னைச் சுற்றி நடப்பது என்ன என்று புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் வேடத்தில் நடித்திருக்கும் அவர் ஒவ்வொருவரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் பார்வையில் அந்த வேடத்தை நியாயப்படுத்துகிறார்.
ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொருவரையும் சந்தேகப்பட்டு அருண் கார்த்திக் பார்த்தாலும் நாயகி எனாக்ஷி கங்குலி “எனக்கு என்ன ஆச்சு..!” என்கிற ரீதியிலேயே யாரையும் சந்தேகப்படாமல் இருப்பது ஆச்சரியப்படுத்துகிறது.
இந்த இருவர்தான் முக்கிய பாத்திரங்களாக இருக்க இவர்களுடன் துணைப் பாத்திரங்களாக வரும் சேரன்ராஜ், கருப்பு நம்பியார், சரவணசக்தி, இயக்குநர் செ.ரா.ராஜேஷ், கஜராஜ், சுருளி, உமர், வினோத் உள்ளிட்ட எல்லோருமே கதையை பதட்டத்துடன் நாம் பார்க்கும் விதத்தில் நடித்திருக்கிறார்கள்.
கொடைக்கானலின் அழகியலையும், கதைக்குள் இருக்கும் ஆபத்தையும் திறம்பட தாங்கி நமக்கு படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார் தங்கவேல்.
சதாமுருகன் இசையில் பாடல்கள் ஓகே. ஒரு திரில்லரின் தன்மை புரிந்து ஒலியை அதிகப்படுத்தி நம்மை பயமுறுத்தாமல் நிசப்தத்தை அதிகப்படுத்தி பின்னணி இசையில் நமக்கு திகிலை கூட்டி இருப்பது நல்ல உத்தி.
இவ்வளவுதான் நடிகர்கள் – இதுதான் பட்ஜெட் என்று ஒருவரிடம் கொடுத்து விட்டால் அதை வைத்து சரியான கதையை தேர்ந்தெடுத்து இயக்குபவர்தான் சரியான இயக்குனராக இருப்பார். அந்த வகையில் எளிமையான ஒரு கதை கருவை எடுத்துக்கொண்டு, அதை திகில் படமாக திறம்பட இயக்கி இருக்கும் செ. ரா. ராஜேஷ், திறமையான இயக்குனர் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
அதிலும் ஒரு அறைக்குள் எனாக்ஷி இழுத்துச் செல்லப்பட்டது அறிந்து பூட்டி இருக்கும் கதவைத் தட்டி அவரை அருண் கார்த்திக் மீட்க முயலும் இடைவேளை காட்சியில் மற்ற அறை கதவுகளுக்குள் இருந்தும் எனாக்ஷியின் குரல் ஒலிக்கும் போது நமக்கே பதட்டமாகிவிடுகிறது.
பனி விழும் இரவு – பதற வைக்கும் உறவு..!
– வேணுஜி