பழங்கால மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் நடக்கும் ஹாரர் கதை. ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கும் அந்த ஹாஸ்டலில் பல இடங்களில் இருந்தும் வந்து மாணவர்கள் தங்கி படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அங்கிருக்கும் எல்லா அறைகளிலும் மாணவர்கள் தங்கி இருக்க 418 ஆம் அறை மட்டும் பூட்டி கிடக்கிறது. அதனுள் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அதைத் திறக்கவும் யாருக்கும் அனுமதி இல்லை.
அதைத் திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து விட வேண்டும் என்று சில மாணவர்கள் விருப்பப்பட அந்த நினைப்பின் விளைவுகளே பயங்கரமான சம்பவங்களை ஏற்படுத்துகின்றன.
அந்த அமானுஷ்ய சம்பவங்கள் குறித்து மனோதத்துவ மருத்துவர் ரமேஷ் இந்திராவிடம் மாணவர்கள் உரையாடல் நிகழ்த்தும்போது அந்தக் கட்டடம் அதற்கு முன்பு மன நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சைலமாக இருந்து வந்தது தெரிய வருகிறது.
குறிப்பிட்ட அந்த அறையில் தங்கி இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளியான சைத்ரா ஆச்சார் அந்த அறைக்குள் வைத்து ஒரு பெண்ணைக் கொலை செய்ய, அதன் பின்னால் மாணவி ஒருவரும் இறந்து போன கதை தெரிய வருகிறது.
அந்தக் கதையின் படி ஆறு பேரை கொலை செய்தாக வேண்டும் என்கிற நிர்பந்தத்தில் இருக்கும் சைத்ரா ஆச்சார் அதுவரை ஐந்து பேரைக் கொன்றிருக்க ஆறாவது மரணம் நிகழ்ந்து விடக்கூடாது என்று அந்த கதவை சாத்தி வைத்திருக்கும் விஷயம் தெரிய வருகிறது.
மாணவர்கள் அந்தக் கதவைத் திறந்தார்களா அதன் விளைவு என்ன என்பதுதான் மீதிக் கதை.
எந்தப் பாத்திரமாக இருந்தாலும் அதற்குள் தன்னைப் பொருத்திக் கொள்ளும் வல்லமை பெற்ற சைத்ரா ஆச்சார் இதில் கூத்து கட்டும் வேடம் ஏற்கிறார். குழந்தை இல்லாத ஏக்கத்தை முகத்தில் காட்டுவதாகட்டும், அதுவே ஒரு மனநோய் அளவுக்கு அவரைக் கொண்டு போய் ஒரு குழந்தையைப் பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்ல முடியும் என்ற எண்ணி தான் ஏற்ற யக்ஷகானம் பாத்திரமாகவே மாறி கொடூரமாக நடந்து கொள்வதில் நன்றாகவே நம்மை பயமுறுத்தி இருக்கிறார்.
மாணவர்களாக நடித்திருக்கும் சூரியராஜ் வீரபத்னி ப்ரீத்தி பகடாலா, சஷாந்த் பாட்டில், ஸ்ரீ வைஷ்ணவ் உள்ளிட்டோர் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாத்திரப்படைப்பை வைத்து நம்மை புரிந்து கொள்ள வைத்திருப்பது இயக்குனரின் திறமை மட்டுமே.
முழுக்க முழுக்க இருட்டுக்குள்ளேயே படமாகி இருக்கும் படம். நிறையக் காட்சிகளில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை.
இசையமைத்திருக்கும் வெங்கி ஜிஜி நம்மை நன்றாகவே பயமுறுத்தி இருக்கிறார்.
பிரபல இயக்குனர் பிரசாந்த் நீல் வெளியிடுவதாலேயே முக்கியத்துவம் பெற்ற இந்தப் படம் அதை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை என்றே தோன்றுகிறது.
ஒரு விந்தையான வினோதமான அனுபவத்துக்குள் நம்மை கூட்டிச் செல்லும் கீர்த்தன் நடகவுடாவின் இயக்கத்தில் எந்த குறையும் இல்லை.
ஆனால் குழந்தை பெற வேண்டும் என்கிற ஒரு ஆசைக்காக தன்னைச் சார்ந்த குடும்பத்தினரையே ஒரு பெண் கொல்வதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அந்த வகையில் முழுக்க முழுக்க மூட நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதை அதிகம் படிப்பறிவில்லாத கொஞ்சம் மூட நம்பிக்கை உள்ள குழந்தை இல்லாத தம்பதிகளை இப்படி எல்லாம் வித்தியாசமாக சிந்திக்க வைக்கும் வாய்ப்பு இருக்கிறது.
செய் நேர்த்தியில் அற்புதமான படமாக இருந்தாலும் சொல்லி இருக்கும் கருத்தில் பின்னால் போய்விடுகிறது இந்த படம்.
418 – பேயாளும் சாத்திரம்..!
– வேணுஜி