November 1, 2026
  • November 1, 2026
Breaking News
November 1, 2026

சிங்காரம் திரைப்பட விமர்சனம்

By 0 17 Views

சமுதாயத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு சமூகம் மேம்பாடு அடைவது எப்படி..? பணத்தால் மட்டும் அதை அடைந்து விட முடியாது. கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரம் உள்ளிட்டவற்றில் பங்கெடுத்தால் ஒழிய அது சாத்தியமே இல்லை என்பதை சமூக பொறுப்புணர்வுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் கே.வி.கதிர்வேலு.

அப்படி அது சாத்தியப்பட்ட 90களின் உண்மை நிகழ்வை வைத்து இந்த படத்தின் கதையை அமைத்திருக்கிறார்.

அதன்படி கதை நாயகன் யோகி பாபு சமுதாயத்தால் புறக்கணிக்கப்படும் குறவர் சமூகத்தை சார்ந்து வாழ்கிறார். அந்த சமூகத்தின் வழக்கப்படியே கூட்டுக் குடும்பமாக நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வரும் அவர் தங்கள் சமூகம் செல்லும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதை எண்ணி மனம் வருந்துகிறார்.

அந்த புறக்கணிப்பு தரும் மன உளைச்சல் மற்றும் ஆதிக்க சக்தியின் அடக்கு முறையை எதிர்க்க இயலாத அவரது தந்தை எம் எஸ் பாஸ்கர் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்.

லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கமுடைய எம் எஸ் பாஸ்கர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு அவர் இறந்த நிலையில் பரிசு விழ அதை வைத்திருக்கும் யோகி பாபு திடீர் கோடீஸ்வரராகி விடுகிறார். அதன் மூலம் அவருக்கு சமூக அந்தஸ்து கிடைக்கிறது. ஆனால் தான் சார்ந்த சமூகத்திற்கு எந்த உயர்வும் கிடைக்கவில்லை என்பது குறித்து தொடர்ந்து மனம் வருந்தும் அவருக்கு தங்கள் சமூகத்தை மேம்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. கிடைத்த வாய்ப்பை அவர் எப்படி பயன்படுத்தினார்..? என்பதுதான் இந்த படத்தின் கதை.

சமூகப் பொறுப்பு கொண்ட கதையில் நடித்தது போலவே இந்த கதையின் பொறுப்பு குறித்தும் சிந்தித்து யோகி பாபு அடக்கியே வாசித்திருக்கிறார். அசால்டாக அங்கங்கே நகைச்சுவையில் நம்மை சிரிக்க வைப்பது போல் சீரியஸான விஷயங்களிலும் அதே அளவுடன் நடித்து பாராட்டு பெறுகிறார்.

அவருடன் படத்தில் பெரிய பட்டாளமே இருக்கிறது. அவர்களில் அவரது அப்பாவாக வரும் எம் எஸ் பாஸ்கர், அவ்வப்போது உதவிகள் செய்த அவரை உயர்த்தி விடும் வேல ராமமூர்த்தி கவனத்தைக் கவர்கிறார்கள்.

இவர்களுடன் மரியா வின்செண்ட், ஆர்த்தி கணேஷ், மனோபாலா, கல்கி, மாரிமுத்து, படவா கோபி, செண்ட்ராயன், டி.எஸ்.ஆர், தீபா சங்கர், சபிதா ராய், ஜாவா சுந்தரேசன் உள்ளிட்டோர் தங்களது அனுபவ நடிப்பால் அடையாளம் தெரிகிறார்கள்.

சமூக பொறுப்புணர்வு சொல்லும் படம் என்பதால் இதில் அழகியலை விட உணர்வுகளின் பிரதிபலிப்புதான் முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டு பணியாற்றி  இருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமார்.

சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கூட அப்படியே. கதையை உணர்த்தும் பாடல்களும் அதிரடியாக இல்லாமல் உணர்வு பூர்வமாக இசைக்கப்பட்ட பின்னணி இசையும் படத்துக்கு பொருத்தமாக அமைந்திருக்கிறது.

சமூகப் பொறுப்புணர்வுடன் இயக்குனர்கள் படம் எடுப்பது அருகி வரும் இந்த காலகட்டத்தில் இந்தப் பட இயக்குனர் கே.வி. கதிர்வேலு பாராட்டுக்குரியவராகிறார்.

உண்மையை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால் 90களில் நடந்த உண்மை சம்பவங்களையும் உள்ளே வைத்து குறவர் சமூகத்தினர் எந்தவிதமான மேம்பாடு பெற்றிருக்கிறார்கள் என்பதையும் சொல்லி இருப்பது பாராட்டத்தக்கது.

சிங்காரம் – பெற்ற சமூக அங்கீகாரம்..!

– வேணுஜி