March 19, 2024
  • March 19, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்
September 25, 2020

கொரோனா பாதிப்புக்கு நிதி திரட்ட போய் கொரோனாவுக்கே பலியான எஸ்பிபியின் சோகம்

By 0 987 Views

பாடும் நிலா என்று இசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எஸ் பி பாலசுப்பிரமணியம் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் உயர்தர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை ஆரம்பித்த இரண்டு வாரங்களில் அவருடைய உடல்நிலை பின்னடைவு பெற்றது. அதைத்தொடர்ந்து உலகம் முழுக்க அவரது உயிருக்காக கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. அதன் விளைவாக ஆச்சரியப்படத்தக்க வகையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது.

ஆனால் நேற்று அவரது உடல்நிலை பின்னடைவைச் சந்தித்து மோசமானதை தொடர்ந்து திரையுலகின் முக்கிய பிரபலங்கள் அவரை சென்று பார்த்து வந்து கொண்டிருந்தனர்.

கமல் நேற்று சென்று அவரை பார்த்து வந்தார். இன்று பாரதிராஜா, இளையராஜா உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று அவரை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் இன்று பிற்பகல் 1.04 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக அவரது மகன் எஸ்பிபி சரண் அறிவித்தார்.

51 நாட்களாக நடைபெற்று வந்த அவரது உயிர்ப்போராட்டம் இன்றைக்கு மிகப்பெரிய சோகத்தில் முடிந்தது. அவருக்கு வயது 74.

இந்திய திரையுலகமே அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது. நாமும் நமது கண்ணீரால் அஞ்சலி செலுத்துவோம்.

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகிலும் அவரது பெயர் இசையால் பொறிக்கப்பட்டிருக்கும் காற்று உள்ளவரை அவரது கானங்கள் போற்றப்படும் – அவரும் தான்..!

இதில் சோகமான விஷயம் என்னவென்றால்  கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நிதி திரட்ட ஆரம்பித்தார். அதற்காக ரசிகர்கள் கேட்கும் பாடல்களை கட்டணம் பெற்று அவர் பாடி வந்தார். இந்நிலையில் ஒரு இசைக்குழுவினர் பாடல்களைப் பாடி அவருக்கு நிதி அளித்தனர்.

அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு அவரும் அவர்கள் நடத்திய ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்று வந்தார். அங்குதான் அவருக்கு தொற்று ஏற்பட்டதாக பின்னர் தெரியவந்தது.

கொரோனா ஒழிப்புக்கு பாடுபட்டு அந்த கொரோனாவாலேயே உயிரிழந்தது எஸ்பிபியின் உச்சகட்ட சோகம்.

என்றைக்கு கொரோனா பற்றி பாடினாரோ அன்றைக்கே கொரோனாவுக்கு அவரை பிடித்து விட்டது – அவரை பீடித்தும் விட்டது.

இன்னும் இரண்டு நாட்களில் மருத்துவமனையில் இருந்து திரும்பி விடுவேன் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கடைசியாக அவர் சொல்லிச் சென்ற வீடியோவை இப்போது பார்த்தால் கண் கலங்குகிறது. எத்தனை நம்பிக்கையுடன் அதில் பேசியிருப்பார்? நீங்களும் பாருங்களேன்….