நல்ல விஷயங்களைத் தவிர்க்காமல் செய் என்பதுதான் ‘செய்’ என்பதற்கான ஒரு வார்த்தை விளக்கம். அப்படி நாயகன் நகுல் இதில் என்ன நல்லது செய்கிறாரென்று பார்ப்போம்…
நடிகனாகிறேன் பேர்வழி என்று எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் நகுலை வேலைக்குப் போகச்சொல்லி அவர் விரும்பும் நாயகி ‘ஆஞ்சல் முஞ்சால்’ (அட… நாயகி நிஜப்பேரே அதுதாங்க..!) கேட்க, அதற்காக வேலைக்குப் போக முடிவெடுக்கும் தருணத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டிக்கொண்டிருந்த அவரது அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வர, அந்த வேலைக்குப் போகிறார்.
போன முதல் வேலையிலேயே ஒரு பிணத்தை ஊருக்குக் கொண்டு போய்ச்சேர்க்கும் பொறுப்பு கிடைக்க, அந்தப் பிணத்தைச் சுற்றி ஒரு மர்மம் நிகழ, அதிலிருந்து தப்பித்து ஓடினாரா, இல்லை எதிர்த்து நின்று போராடி வென்றாரா நகுல் என்பதைச் சொல்லும் கதை.
வேலை வெட்டி, பொறுப்பு இல்லாமலிருக்கும் வெட்டி ஆபீசர் வேலைக்குப் பொருத்தமானவராகத்தான் இருக்கிறார் நகுல். வழக்கம்போல ஜாக்கி சான் சண்டை, ஜங்கு ஜங்கு நடனம் என்று அசத்தினாலும் நடிப்பில் மட்டும் இன்னும் ‘யுகேஜி’ லெவலிலேயே இருக்கிறார். சீரியஸான மற்றும் ஜாலியான காட்சிகளில் அவரது ‘மியாவ்’ முகபாவங்கள் இன்னும் மேம்பட வேண்டும்.
ஆஞ்சல் முஞ்சால் அழகாக இருக்கிறார். வழக்கமாக ஹீரோயின்களுக்கு காதல், மொதல், ஊடல் என்று நாயகனுடன் மூன்று பகுதிகள் வரும். ஆனால், இதில் அதற்கெல்லாம் வேலை வைக்காமல் நகுலை சந்திக்காமலேயே போனில் வளரும் காதலாக்கியிருக்கியிருக்கிறார்கள். ஆனால், நகுலின் சேட்டைகளை இவர் பார்த்துக்கொண்டும், கடைசியில் கிளைமாக்ஸில் நகுலுக்கு உதவிக்கொண்டும் இருக்கிறார்.
இவர்களைத் தவிர படத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்றிருக்கும் அஸ்கர் அலி, சந்திரிகா ரவி இருவருக்கும் சிறிய வேடங்களே ஆனாலும் கதையை நகர்த்துவது இவர்கள்தான்..
மேற்படி நடிக, நடிகையரால் இது சின்னப்படம் என்ற சந்தேகம் வராமலிருக்க, நாசரையும், பிரகாஷ்ராஜையும் சாமர்த்தியமாகக் கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ராஜ்பாபு. இத்தனைச் சிறிய கேரக்டர்களுக்கு அவர்கள் எப்படி ஒத்துக்கொண்டார்கள் என்பது முக்கியக் கேள்வி. ‘தலைவாசல் விஜய்’யும் ஓரிரு காட்சிகள் வந்து கொல்லப் படுகிறார்.
கிளைமாக்ஸில் வரும் இஸ்லாமிய தொழுகைப் பாடலும், அது நாயகனுக்கு உத்வேகம் தருவதும் ஏற்கனவே வேறொரு ஜெய் படத்தில் பார்த்த நினைவு. அதே கன்செப்ஷன்… அதே காட்சிகள்…
விஜய் உலகநாத் ஒளிப்பதிவு ஓகே. நிக்ஸ் லோபஸ் இசை குறிப்பிடும்படியாக இல்லை.
கடைசியில் ஒரு உருப்படியான செய்தி சொல்ல வேண்டுமென்று பிரகாஷ்ராஜ் வாய் மொழியாக உறுப்பு தானத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறார்கள். அப்படிச் செய்தால் மட்டுமே கள்ளச்சந்தையில் அப்பாவிகளின் உறுப்புகள் களவு போவதைத் தடுக்க முடியும் என்றும் சொல்வது பாராட்ட வேண்டிய ‘செய்’தி.
அதை இன்னும் கூட நன்றாகச் ‘செய்’திருக்கலாம்..!