திறமைக்கும், வீண் பெருமைக்குமான போட்டி தான் கதைக்களம்.
இதற்கு படங்களில் நாம் அதிகம் அறிந்திடாத வட மஞ்சுவிரட்டு என்கிற ஜல்லிக்கட்டுக்கு மாற்றான ஒரு விளையாட்டை வடம் பிடித்திருக்கிறார் இயக்குனர் கேந்திரன். வி.
ஊர் பெரிய மனிதரான ஆடுகளம் நரேன் ரொம்ப நல்லவராக இருக்கிறார். மாடுகளம் நரேன் என்று புகழத் தக்க அளவில் மாடுகளின் மேல் அதீத பாசம் கொண்ட அவர் மாட்டுச் சாணத்தைக் கூட மனிதன் மிதிக்கக்கூடாது என்கிற கண்டிப்புள்ளவர்.
அந்த சாணம்தான் நாளை திருநீராக போகிறது என்கிற மரியாதைதான் காரணம். அந்த அளவுக்கு நல்லவராக இருக்கும் அவர் அடிமாட்டுக்கு செல்லும் காளைகளை மீட்டு அவற்றை வளர்த்து வருகிறார்.
அவரது மகன் நாயகன் விமல் அதில் சிறந்த காளைகளை தேர்ந்தெடுத்து வட மஞ்சுவிரட்டு விளையாட்டுக்கு தயார் செய்கிற வேலையை செய்வது மட்டுமல்லாமல் அப்படி தயார் செய்த ‘பாண்டி முனி’ என்கிற காளையை கொண்டு பல பரிசுகளை தட்டி வருகிறார்.
அதேபோன்று போட்டிக் காளைகள வளர்த்து வருபவர் நடராஜ் நட்டி. ஆனால் அவர் காளைகளை உருவாக்க மாட்டார் யாராவது உருவாக்கி விட்டால் அதை விலை பேசி தன்னுடைய தாக மாற்றிக் கொண்டு போட்டிகளில் வெல்வார்.
இந்நிலையில் பாண்டி முனியை அவர் தன் வசப்படுத்த நினைத்ததால் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
மாடுபிடி வீரர்களாக எத்தனையோ நாயகர்கள் நடித்திருந்தாலும் விமலுக்கு அதெல்லாம் செட் ஆகாது என்று நினைத்த இயக்குனர் மாடுகளை விளையாட தயார் செய்யும் பயிற்சியாளர் வேடத்தை கொடுத்திருக்கிறார்.
அதனாலேயே கொஞ்சம் முரட்டு மீசை வைத்து கொண்டிருக்கும் விமல் முகக்குறிகளில் மட்டும் அந்த முரட்டுத்தனத்தை காட்டியிருக்கிறார். கொலை கேசில் உள்ளே போய் ஜாமீனில் வெளியே வருகிறார் விமல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் – எவ்வளவு கனமான வேடம் அவருக்கு என்று.
எல்லா பக்கமும் எதிர்ப்போடு இருக்கும் விமலுக்கு நாயகி சனஷ்கா ஸ்ரீ காட்டும் காதல் ஆதரவளிக்கிறது.
நாயகிகள் அழகாக இருந்து விட்டால் போதும் நடிக்க தேவையில்லை என்கிற இலக்கணத்தின் படி சனஷ்கா ஸ்ரீ அழகாக இருக்கிறார் – கூடவே ஆபத்தானவராகவும் கூட..
நடிப்பில் முரட்டுத்தனம் காட்டும் நட்டி நட்ராஜுக்கு விமல் போல் காளைகளுக்குபயிற்சி கொடுக்கும் வேலையும் இல்லை என்பதால் அலுங்காமல் குலுங்காமல் மாடுகளின் வடம் பிடித்தபடி வலம் வருகிறார்.
ஒன்று அரசியல்வாதி இல்லாவிட்டால் போலீஸ் அதிகாரி என்று நாம் பார்த்து பழக்கப்பட்டு விட்ட ஆடுகளம் நரேனுக்கு இதில் வித்தியாசமாக ரொம்ப நல்லவர் பாத்திரம். நம்மை நல்லவராக யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தாரோ என்னவோ நல்லவராக நடிப்பதற்கு நிறைய மெனக்கெட்டு இருக்கிறார்.
சமீப காலமாக முனீஷ் காந்த் ராமதாசை தேடி நகைச்சுவை தடவிய குணச்சித்திர வேடங்கள் நிறைய வருகின்றன. அதில் ஒன்று இந்த படத்தில் கிடைத்திருப்பது.
இவர்களுடன் விமலின் அம்மாவாக நடித்திருக்கும் இந்துமதி, அத்தை தீபா சங்கர், பால சரவணன், மதுசூதனன் ராவ் உள்ளிட்டோர் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
வட மஞ்சுவிரட்டு, அவற்றுக்கான பயிற்சி நிலைகளில் எல்லாம் ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமார், அற்புதமாக படமாக்கி இருக்கிறார்.
தனது ட்ரேட் மார்க் ஆன நெகிழ்ச்சியான பாடல்களை தரும் டி.இமானிடம், இந்தப் பட இயக்குனர் அப்படி எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் போலிருக்கிறது.
ஆனால் எல்லாவற்றையும் சேர்த்து பின்னணி இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார் இமான். அத்தனை அழுத்தம் இசையில்.
எழுதி இயக்கியிருக்கும் கேந்திரன்.வி, எடுத்துக்கொண்ட கதையை நிறைவாக சொல்லி இருக்கிறார். அத்துடன் வழக்கமான ஜல்லிக்கட்டு விஷயத்தை உள்ளே வைக்காமல் வட மஞ்சு விரட்டு விளையாட்டை உள்ளே வைத்திருப்பதையும் பாராட்டலாம்.
ஆனால் அந்த விளையாட்டின் விதிகள் பற்றி பெரிதாக அவர் அலட்டிக் கொள்ளவில்லை. நமக்குத் தெரியப்படுத்தவும் இல்லை.
இருந்தாலும் மண்ணின் மணத்தோடு எல்லா தரப்பினரும் ரசிக்கும் ஒரு படத்தை தந்திருக்கும் அவரை பாராட்டலாம்.
வடம் – திடம்..!
– வேணுஜி