இன்றைய இளம் இசையமைப்பாளரகளில் பிசியான ஒருவர் என்றால் அது சாம் சிஎஸ் தான்.
இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என்று பன்முக திறமைகள் கொண்ட சாம் சி. எஸ் ‘ஓர் இரவு’ படம் மூலம் திரைத்துறையில் நுழைந்து இந்த வாரம் வெளியாகியிருக்கும் ‘சர்தார் 2’ படத்துடன் 100 படங்களை முடித்து இருக்கிறார் என்பது புருவங்களை உயர்த்த வைக்கிறது.
அது பற்றி அவரே சொல்கிறார் இப்படி…
“இத்தனை படங்கள் இசையமைத்தாக வேண்டும் என்கிற கணக்கெல்லாம் என்னிடத்தில் இல்லை. என்னுடைய முதல் படம் நினைவில் இருக்கிறது. ஆனால் 25 வது படம் எது, ஐம்பதாவது படம் எது என்றெல்லாம் கேட்டால் என்னிடம் கணக்கு கிடையாது. அப்படியெல்லாம் கணக்கு வைத்துக்கொண்டு நான் இசையமைப்பது இல்லை.
அதற்குள் நூறு படம் முடித்து விட்டாரா என்று கேட்கிறார்கள். நான் இப்படிப்பட்ட படங்களில் தான் பணியாற்றுவேன் என்று எப்போதும் எந்த நிறுவனத்திடமும் சொன்னதில்லை. அதேபோல் பெரிய படங்களில் மட்டும்தான் பணியாற்றுவேன் என்றும் கண்டிப்பாக இருந்ததில்லை.
எனக்கு ஆலோசனை சொல்பவர்கள் கூட பெரிய படங்களை மட்டுமே ஒத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால், மிகச் சிறிய படங்களுக்கு கூட நாம் அந்த படத்தில் இருந்தால் அவர்களுக்கு அது ஒரு உபகாரமாக இருக்குமே என்று நினைத்துதான் அதற்கு ஒத்துக்கொள்கிறேன். சிறிய சம்பளம், சிறிய படம் என்றாலும் முழு அர்ப்பணிப்புடன்தான் உழைக்கிறேன்.
இவ்வளவு சீக்கிரம் 100 படங்கள் முடிக்க முடிந்ததற்கு காரணம் இப்படி நான் உழைத்துக் கொண்டிருப்பதுதான். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று எல்லா மொழிகளிலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். பல படங்களுக்கு பின்னணி இசை மட்டும் அமைத்துக் கொடுத்ததும் உண்டு. என் எல்லா நேரமும் இசையப்பற்றிதான் சிந்திக்கிறேன்.
என்னுடைய தூக்கம் மற்றும் சர்ச்சுக்கு செல்லும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் நான் இசை அமைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். வெளியில் இருக்கும் என் ஸ்டூடியோ தவிர வீட்டிலும் ஒரு ஸ்டுடியோ உண்டு. எனவே வீட்டில் இருக்கும் போதும் அந்த ஸ்டூடியோவில்தான் வேலை பார்த்துக் கொண்டிருப்பேன். என் மனைவி கூட “நீங்கள் வீட்டில் இருந்தாலும் இப்படி வேலை பார்த்துக் கொண்டே இருக்கிறீர்களே..!” என்று கேட்பது உண்டு.
ஆனால் சும்மா இருப்பதற்கு இப்படி வேலை செய்து கொண்டே இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இசையமைக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து எனக்கு கிடைப்பதை நான் ஒரு வரமாக நினைக்கிறேன்.
நூறு படங்கள் முடித்து விட்டாலும் கூட இன்னும் நான் வளரும் நிலையில்தான் இருக்கிறேன். இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். என் ஒவ்வொரு படத்திலும் முழு அர்ப்பணிப்புடன் தான் பணியாற்றுகிறேன்.
நிறைய புதுமுக இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் நானாகத்தான் இருப்பேன். என்னுடைய இசையை கேட்டு வருபவர்களுக்கு நான் இல்லை என்று எப்போதும் சொல்வதில்லை.
இனி வரும் காலங்கள் கூட இதே அளவு அர்ப்பணிப்புடன் உழைத்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்..!”
– வேணுஜி