August 26, 2026
  • August 26, 2026
Breaking News
July 12, 2026

ராவ் பகதூர் திரைப்பட விமர்சனம்

By 0 105 Views

கரம் மசாலாப் படங்களை அள்ளித்தரும் தெலுங்குப் பட உலகிலிருந்து வந்திருக்கும் புருவங்களை உயரத்த வைக்கும் பீரியட் படம் இது.

வாழ்வின் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் மன்னர் பரம்பரைரையைச் சேர்ந்த நாயகன் சத்ய தேவ் மனதுக்குள் இருக்கும் ஒரு பெரிய சந்தேகம் அவரது மனதை போட்டு உறுத்துகிறது.

அதை தீர்த்து வைத்துவிட்டால், நான் நிம்மதியாக கண்ணை மூடிவிடுவேன், என்று தனது நண்பரும், மருத்துவருமான விகாஸிடம் தெரிவிக்கிறார்.

அந்த சந்தேகம் என்ன ?, அதன் பின்னணியில் இருக்கும் அவரது கடந்த காலம் எப்படிப்பட்டது ? ஆகிய கேள்விகளுக்கான பதிலை சாதி வெறிக்கு எதிரான சாட்டை அடியாகச் சொல்வதே ‘ராவ் பகதூர்.

 ராம்ப்பா ராவ் பகதூர் என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் சத்ய தேவ், முழு படத்தையும் தன் நடிப்பின் மூலம் சுமந்திருக்கிறார். இளமை மற்றும் முதுமை என இரண்டு வெவ்வேறு தோற்றங்களை தனது உடை மற்றும் மேக்கப்பில் மட்டும் இன்றி, உடல் மொழி, சிறு சிறு அசைவுகள், வசன உச்சரிப்பு என அனைத்திலும் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். அவரது நடிப்புதான் மொத்தப் படமும்.

நாயகனின் மருத்துவ நண்பராக நடித்திருக்கும் விகாஸ் மப்புலா  திரைக்கதையில் இருக்கும் சைக்கலாஜிகல் திருப்பங்களை அளிக்க உதவியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் தீபா தாமஸ், இறுதிக் காட்சியில் எதிர்பார்க்காத ரகசியத்தை உடைத்து நம்மை ஆச்சரியதுக்கு உள்ளாக்குகிறார்.

இவர்களுடன் பாலா பரசர், ஆனந்த் பாரதி, பிரணய் வேகா, மாஸ்டர் கிரண் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக பயணித்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் பரமர், பீரியட் படத்திற்கான வண்ணங்கள் மற்றும் விளக்கு ஒளிகளை வித்தியாசமாகக் கையாண்டு, புதுமையான அனுபவத்திற்குள் பார்வையாளர்களை பயணப்பட வைத்திருக்கிறார். 

கதாபாத்திரங்கள் பேசாத இடங்களில் தனது பின்னணி இசை மூலமாக, அவர்கள் பேச நினைத்ததை பிரதிபலித்திருக்கிறார் ஸ்மரன் சாய்

கலை இயக்குநர் ரோஹன் சிங்கின் பணியைப் பாராட்டியாக வேண்டும். ஒரு புதிய அனுபவத்துக்குள் நம்மைப் பயணப்பட வைத்திருக்கிறார்.

கதை எழுதி இயக்கியிருப்பதோடு, படத்தொகுப்பும் செய்திருக்கும் வெங்கடேஷ் மஹா இந்த பீரியட் படத்துக்குள் சாதி வெறி, நிற வெறி மற்றும் ராஜ பரம்பரையின் ஆணவம் ஆகியவற்றை அடித்து நொறுக்கும் ஒரு கதைக்களத்தை உளவியல் திரில்லர் பாணியிலான படமாக கொடுத்து மிரட்டியிருக்கிறார்.

ராவ் பகதூர் – டோலிவுட் ஆச்சரியம்..!

– வேணுஜி