உலகெங்கும் போர் நடைபெறும் இடங்களில் எல்லாம் மக்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள். ஆனால் துயரம் அத்துடன் முடிவதில்லை. இறந்தவர்களுடைய சோகம் கொடுமையானது என்றால் அதைவிட கொடுமையானது பெற்றோரை இழந்து விட்டு உயிரோடு அனாதையாகும் குழந்தைகளின் நிலை.
இந்த வலி மிகுந்த வாழ்க்கையை இந்தப் படத்தில் நெகிழ்ச்சியுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அபிலாஷ் ஜி. தேவன்.
கதைப்படி இலங்கையில் யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது அங்கிருந்து தப்பிப்பிழைத்தவர்கள் தமிழகம் நோக்கி வந்த கதை எல்லோருக்கும் தெரியும். அப்படி அங்கு போரில் தனது மனைவியை இழந்ததுடன் தன்னுடைய ஒரே மகளை எப்படியும் உயிருடன் வாழ வைத்து விட வேண்டும் என்கிற வேகத்தில் கடல் தாண்டி தமிழகம் வருகிறார் படத்தின் நாயகன் அமர் ராமச்சந்திரன்.
அவருடைய நோக்கம் தமிழகத்தில் உள்ள தன் மனைவியின் உறவினர்களிடம் தன் மகளை ஒப்படைத்து விட்டு இலங்கைக்கு திரும்பிச் செல்வது. உயிருடன் அங்கு இருந்தால் மீண்டும் மகளை வந்து பார்க்கலாம் அல்லது மகளாவது இங்கே மகிழ்ச்சியுடன் இருக்கட்டும் என்கிற நினைப்பில் தமிழகம் வந்தவருக்கு என்ன நடந்தது..? என்பதுதான் கதை.
கதையின் நாயகனாக வரும் அமர் ராமச்சந்திரநினின் உருவமும் அவர் பார்வையையுமே சொல்லிவிடுகின்றன இலங்கையில் அவர் பட்ட துன்பத்தை. அகதிகள் முகாமில் சேர்ந்து கொள்ளச் சொல்லி அதிகாரிகள் சொல்லும்போது அவர் தனது நிலையை சொல்லி வேண்டாம் என்று மறுப்பது எந்தக் கல் உள்ளத்தையும் கரைய வைத்து விடும்.
அமர் ராமச்சந்திரனின் மகளாக நடித்திருக்கும் நேஹா அமர், அவரது நிஜ மகளாகவே இருப்பது படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. தந்தையும் மகளும் சேர்ந்து படும் துன்பங்கள் உருக வைப்பவை.
குறிப்பாக யாரோ விட்டுச் சென்ற பணத்தை பிரியாணியின் மேல் ஆசை வைத்து மகள் எடுத்து வைத்துக் கொள்ள, அது தெரிந்து அமர் அவளை தண்டிப்பதும் அந்த தவறு உணர்ந்து எடுத்த இடத்தில் பணத்தை மகள் வைப்பதுமாக வறுமையிலும் செம்மையாக இருவரும் வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்.
அந்த மகளுக்கு ஏதும் துன்பம் நேர்ந்து விடக்கூடாது என்று அவர் தந்தையை விட நாம்தான் அதிகமாக கவலை படுகிறோம்.
அவர்களுக்கு தமிழகத்தில் இருக்கும் ஒரே ஆதரவான பாலா சிங், மனிதருள் மாணிக்கமாக தெரிகிறார். வில்லன் வேடம் ஏற்றால் அவர் கண்கள் பேசும் மொழிகளே வேறு. ஆனால் இதில் நல்ல மனிதன் கண்கள் எதை பேச வேண்டுமோ அதை பேசி இருக்கிறார்.
இப்படி ஒரு அற்புதமான நடிகரை நாம் இழந்தது தமிழ் பட உலகுக்கு மிகப்பெரிய இழப்பு.
இலங்கையிலிருந்து வரும் தமிழர்களுக்கு எப்போதும் இங்கே ஆதரவுக் கரம் உண்டு என்பதை தொடக்கத்தில் சந்திக்கும் அதிகாரியில் இருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து அமரிடம் காய்கறி வாங்கும் மனிதர்கள் வரை எல்லோரும் ஏதோ ஓரிடத்தில் அவர்களுக்கு ஆதரவாகவே இருக்கின்றனர்.
ஆர்ப்பாட்டம் இன்றி பயணித்து படத்தின் உணர்வுகளை அப்பட்டமாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசாந்த் பிரணவத். மொத்த படமும் நாம் நேரில் பார்ப்பது போலவே ஒரு அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தப் படத்துக்கு எந்த அளவுக்கு இசை தேவை என்பதை துல்லியமாக கணக்கெடுத்து அதற்கான இசையை வழங்கி இருக்கிறார் அவுசேப்பச்சன். அவர் இசைத்திருக்கும் வயலின் பேசும் மொழியே தனி.
படத்தை எழுதி இயக்கி இருக்கும் அபிலாஷ் ஜி.தேவன், தான் சொல்ல வந்ததை இயல்பாகவே சொல்ல முடிவெடுத்திருப்பது பாராட்டுக்குரியது. வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்பதை இந்தப் படம் மூலம் காட்சி மொழியாகக் கொடுத்திருப்பதும் அவரது நேர்மறை எண்ணத்துக்குச் சான்று.
தாய்நிலம் – கடல் தாண்டும் கண்ணீர்..!
– வேணுஜி