August 18, 2026
  • August 18, 2026
Breaking News
July 13, 2026

இதயம் முரளி திரைப்பட விமர்சனம்

By 0 106 Views

முரளி என்ற சொல்லைக் கேட்டாலே காதலை சொல்ல முடியாதவர் என்றுதான் நமக்கு  தோன்றும். அதிலும் இதயம் முரளி என்றால் கண்டிப்பாக அதே விஷயத்தைதான் சொல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 

ஆனால் இங்கே நடக்கிற கூத்து வேறு. முரளி வாரிசான அதர்வா, ஒரே ஒரு காதலை அல்ல பல காதல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதில் எதிலும் வெற்றி பெறாமல் போனதால் வேறு வழியின்றி தன் மாமா பார்த்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்.

பிற காதல்கள் கை கூடாமல் போனாலும் கல்யாணம் செய்து கொண்டவளையாவது காதலிக்கலாம் என்ற முடிவுக்கு வரும் அவர் அதிலாவது வெற்றி பெற்றாரா என்பதுதான் கதை.

நடை, உடைகளில் நிறைய மாற்றம் தெரிகிறது அதர்வாவிடம். ஆனால் நடிப்பை பொறுத்தவரை அதே அவர்தான். காதல் காட்சிகளில் எல்லாம் அப்பா முரளி பொறாமைப்படும் அளவிற்கு புகுந்து விளையாடி இருக்கிறார்.

ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் என்று இரு அழகிகளை ஒரே படத்தில் பார்க்க நேரும் வாய்ப்பை இயக்குனர் நமக்கு தந்திருப்பதால் அவர்களிடம் நடிப்பை எல்லாம் எதிர்பார்க்க வேண்டியது இல்லாமல் நாம் எதிர்பார்ப்பதெல்லாம் கிடைத்து விடுகிறது.

அதர்வாவின் மாமா வேடத்தில் நடித்திருக்கிறார் நட்டி நட்ராஜ். ஹீரோவாக நடிக்கும் பிடிவாதம் எல்லாம் இல்லாமல் கதாபாத்திரத்தை உணர்ந்தது நடித்திருப்பது நன்று.

இவர்களுடன் தமன் எஸ், நிஹாரிகா, ரக்‌ஷன், டிராவிட், ஏஞ்சலினா, அஞ்சு குரியன், சுதாகர், யாஷாஸ்ரீ, ஜோனிதா ஆகியோர் காமெடி, குணச்சித்திரம் என்று எல்லா  ஏரியாக்களையும் பூர்த்தி செய்கிறார்கள்.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு படத்துக்கு காட்சிகளால் ஒரு திரைக்கதை எழுதி இருக்கிறது. ஒவ்வொரு பிரேமையும் ஓவியம் என்பதா, காவியம் என்பதா என்று தெரியவில்லை.

இசையமைப்பாளர் தமன்.எஸ் டிரெண்டுக்கு ஏற்றபடி பின்னி எடுத்திருக்கிறார்.

இந்த இயல்பான காதல் படத்துக்கு ரமணகிரிவாசன் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன், டிராவிட் செல்வம் என்று இத்தனை பேர் எதற்காக வரிந்து கட்டி வசனங்களை எழுதினார்கள் என்று தெரியவில்லை. 

பல காதல் தோல்விகளையும், அதன் பின்னணியில் இருக்கும் ரசனையான சம்பவங்களையும் தனது பாணியில் வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன், அதை காட்சி மொழியில் அழகாகச் சொல்லி வெற்றி பெற்றிருக்கிறார்.

இதயம் முரளி – பல இதயங்கள்… ஒரு முரளி..!

– வேணுஜி