October 10, 2026
  • October 10, 2026
Breaking News
July 11, 2026

ஐ நோபடி (I Nobody) திரைப்பட விமர்சனம்

By 0 180 Views

இதுவரை வங்கி கொள்ளை சம்பந்தப்பட்ட படங்களையும், சீரிஸ்களையும் நிறைவே நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அவற்றையெல்லாம் கொள்ளையடித்தவர் யார் அவர்கள் பிடிபட்டார்களா இல்லையா என்பது பற்றிதான் கதை நகரும்.

ஆனால் இந்த படத்தில் கொள்ளையர்களுக்கும் சம்பந்தமில்லாமல் போலீசுக்கும் சம்பந்தம் இல்லாமல் இடையில் சிக்கிக் கொள்ளும் நாயகன் பிரித்விராஜ் சுகுமாரன் பற்றி கதை நகர்வது புத்தம் புதிய அம்சம். 

நாயகனான பிரித்விராஜ் சுகுமாரன், ஆரம்பக் காட்சியில் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைய, அவருக்கு சம்பந்தம் இல்லாத மூன்று பேர் அந்த வங்கியைக் கொள்ளையடிக்கிறார்கள்.

திரும்பிச் செல்கையில் பிரித்விராஜ் சுகுமாரனை பிணைக் கைதியாக தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள். ஒரு இடத்தில் அவரை இறக்கி விட்டு விட்டு விபத்தில் சிக்கி மூவரும் இறக்கிறார்கள்.

ஆனால் அவரை இறக்கி விடும்போது அவரையும் அறியாமல் ஒரு கொள்ளையனது ஆதாரம் அவரிடம் சிக்குகிறது.

அந்த ஆதாரத்தின் அடிப்படையில் திருடர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் போலீஸ், அவர்கள் இறந்துவிட்டதால், அவர்கள் கொள்ளையடித்த பணத்தை மீட்க முடியாமல் போகிறது.

அதே நேரத்தில் அந்த வங்கியில் கணக்கு எதுவும் இல்லாத பிரித்விராஜ் பங்கு சென்றது ஏன் என்ற கேள்வி எழ, அந்த கொள்ளையில் அவருக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது. 

மேற்படி சிக்கல்களில் இருந்து அவரும், அவரது குடும்பத்தாரும் எப்படி மீண்டார்கள் ? கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டதா? போன்ற கேள்விகளுக்கான பதில்களை சுவாரசியமாக சொல்வதே ‘ஐ நோபடி’ படத்தின் கதை.

நடிக்கத் தெரிந்த பிரித்விராஜுக்கு இப்படி ஒரு வேடம் கிடைத்தது அவருக்கு அல்வா சாப்பிடுவது போல் ஆகிவிட்டது, கமர்ஷியலுக்காக ஆக்‌ஷன் காட்சிகள். இருந்தாலும் அவரது நம்பகத்தன்மை மிக்க நடிப்பு கவனம் ஈர்க்கிறது.

பிரித்விராஜின் மனைவியாக நடித்திருக்கும் பார்வதி திருவோத்து, அவருக்கு இணையாக நடித்து சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார்.

கொள்ளை பணத்தை தேடும் போலீஸாக நடித்திருக்கும் ஹக்கிம் ஷாஜகானின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு அந்தக் கதாபாத்திரத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது.

இவர்களுடன் அசோகன், விஜயராகவன்,  சங்கர் ராமகிருஷ்ணன், மதுபால், ஜியா உள்ளிட்டோர் அனைவருமே தத்தம் கதா பாத்திரங்களில் பொருந்தி கவனம் ஈர்க்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் கேமரா, சண்டைக் காட்சிகளில் கதகளி ஆடியிருக்கிறது.

அந்த ஆட்டத்துக்கு படத்தொகுப்பாளர் ரமீஸ் எம்.பி-ஜதி பிடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்தின் வேகத்தைக் குறைக்காமல் பதற்றத்தை உணரவைக்கிறது.

சண்டைக் காட்சிகளை விறுவிறுப்பாக அமைத்திருக்கும் யானிக் பென், கலை கிங்சன் மற்றும் அமித் ஜாலி பாஸ்டின் ஆகியோருக்குப் பாராட்டுகள்.

எழுத்தாளர் சமீர் அப்துல், பட ஆரம்பத்தில் தொடங்கும் பதற்றம்  இறுதிவரை குறையாமல் அற்புதமாக ஸ்கிரிப்டை எழுதியிருக்கிறார்.

அந்த எழுத்துகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் இயக்குநர் நிசாம் பஷீர் படம் முழுதும் நம்மை பரபரப்பிலேயே வைத்திருக்கிறார்.

இத்தனை அருமையான கதையம்சம் கொண்ட ஸ்கிரிப்ட் டில் சண்டைக் காட்சிகள் சற்றே அதிகமாக இருப்பதை உணர முடிகிறது. ஆனால் அது ரசிகர்களுக்குப் பிடித்தவையாக இருக்கலாம்.

மலையாளப் படவுலகினரை மீண்டும் திரும்பப் பார்க்க வைத்திருக்கும் ஸ்கிரிப்ட் வேல்யூ கொண்ட படம்.

ஐ நோபடி – ஃபார் எவரிபடி..!

– வேணுஜி