October 10, 2026
  • October 10, 2026
Breaking News
October 10, 2026

E1 திரைப்பட விமர்சனம்

By 0 13 Views

நாம் அறிந்த சினிமாவில் இதுவரை கணவனும் மனைவியும் நடிகர் – நடிகையராக இருந்திருக்கிறார்கள். அதேபோல் கணவனும் மனைவியும் சேர்ந்து படம் இயக்கி இருக்கிறார்கள் – தயாரித்தும் இருக்கிறார்கள். 

ஆனால் கணவன் மனைவி சேர்ந்து தயாரித்து அந்தப் படத்தை அவர்களே இயக்கி அதில் அவர்களே நடித்த ஆச்சரியம் இதுவரை சினிமாவில் நடந்ததாக தெரியவில்லை. 

அந்த ஜோடி சதா நாடார் – மோனிகா செலீனா.

இவர்கள் இருவரும் இணைந்து தயாரித்து, இயக்கி, நடித்தது இந்தப் படத்தை மட்டுமல்ல. இதற்கு முன் 2024 இல் வெளியான ‘ல்தகா சைஆ’ படத்திலேயே அந்த புதுமையை செய்துவிட்டார்கள். 

இப்போது அதே டீமுடன் களம் இறங்கி இருக்கும் படம்தான் இந்த E1.

கணவன் வெளியூர் சென்றிருக்கும் நேரத்தில் நாயகி மோனிகா செலீனா தனது குழந்தை ‘ஷிவ் ‘வுடன் வசித்து வர, அந்த பிளாட்டுக்குள் அசந்தர்ப்பமாக ஒரு டெட்பாடியுடன் வந்து சேருகிறார் நாயகன் சதா நாடார். 

அந்த டெட்பாடியும் அவர் கொலை செய்தது தான் என்று இருக்க, கைக்குழந்தையுடன் அந்த பிளாட்டில் அவரிடம் தனியாக மாட்டிக் கொள்ளும் மோனிகா அந்த இரவு முழுவதையும் அந்தக் கொலைகாரனுடன் தான் கழிக்க வேண்டும் என்கிற சூழலில் மாட்டிக் கொள்கிறார்.  

வெளியில் யாருக்கும் தெரியக் கூடாது என்று கொலைகாரர் சதா நாடார், அந்த பிளாட்டின் மின்சாரத்தையும் துண்டித்து அவருடைய ஆளுமையில் வைத்திருக்க எதேச்சையாக வீட்டுக்கு வருபவர்களை கூட மோனிகா சமாளித்து அனுப்ப வேண்டி இருக்கிறது.

கொலைகாரர் சதாநாடாரின் நோக்கம் என்ன..? கைக்குழந்தையுடன் அவரிடம் மாட்டிக் கொண்ட மோனிகா அவரிடம் இருந்து தப்பினாரா போன்ற கேள்விகளுக்கு பின் பாதிப் படம் பதில் சொல்கிறது.

கொலைகார நாயகனாக நடித்திருக்கும் சதா நாடார், இயல்பான நடுத்தர குடும்பத்தலைவன் பாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கிறார். ஆரம்பத்தில் அவரைக் கண்டு மோனிகாவைப் போலவே நாமும் பயந்ததுதான் போகிறோம். ஆனால், அவரே நாயகனாக இருக்க கண்டிப்பாக மோனிகாவை எதுவும் செய்து விட மாட்டார் என்பதும் நமக்கு புரிகிறது. 

தனி பிளாட்டில் கொல்லப்பட்ட ஒரு பிணத்துடன் அவனைக் கொன்ற கொலைகாரனுடன் மின்சாரமும் இல்லாமல் தன் குழந்தையுடன் மாட்டிக் கொண்ட பதற்றத்தை நன்றாகவே மோனிகா செலீனா வெளிப்படுத்தி இருக்கிறார்.

வீட்டுக்குள் கொலைகாரணையும் பிணத்தையும் வைத்துக்கொண்டு வாசலில் கதவைத் தட்டும் பக்கத்து வீட்டுக்கார பெண்மணியையும், கொலையுண்டு கிடப்பவரின் மகனையும் சமாளித்து அனுப்பும் மோனிகாவின் நடிப்பு நன்று.

கொலையுண்டு கிடக்கும் சுந்தரத்தைப் பிணமாகப் பார்க்கும் போது பரிதாபமாக இருந்தாலும் அவர் செய்த வேலையைப் பற்றி நினைக்கும் போது நமக்கே அவரைக் கொல்ல வேண்டும் போல்தான் தோன்றுகிறது.

சதா நாடாருக்கு வெளியில் இருந்து உதவும் நண்பரான பாண்டியும் தன் தேவை புரிந்து நடித்திருக்கிறார். 

சின்னஞ்சிறு பிளாட்… இரவு நேரம்… அதிலும் மின்சாரமும் இல்லை என்கிற இக்கட்டான சூழலில் இந்தப் படத்தை எடுத்து முடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.மனோ குமார். அவரது திறமையை பாராட்டியே ஆக வேண்டும். அவுட்டோரில் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாகி இருக்கின்றன.

இசை என்ற ஒன்று இருந்ததா என்று யோசிக்கும் அளவுக்கு இயல்புடன் கதைக்கு தேவையான இசையை வழங்கி இருக்கும் இ. ஜே.ஜான்சனும் குறிப்பிடத் தகுந்தவர்தான். 

நடிப்பில் தங்களுடைய தேவையை நிறைவு செய்துவிட்ட சதாநாடாரும், மோனிகா செலீனாவும் இயக்கத்தில் மட்டும் இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுக்க வேண்டும். 

ஒரு கொலையை செய்துவிட்டு அந்த டெட் பாடியை மைதானத்தில் போட்டு எரித்துவிட்டால் பிரச்சனை தீர்ந்து விடுமா என்ன? 

அத்துடன் சதா நாடாரும் பாண்டியும் சேர்ந்து இதே போன்று சமூகவிரோதிகளை அழிக்க கிளம்புவதும் குழந்தைத்தனமாக இருக்கிறது.

அதேபோல் இதுவரை பெண் குழந்தைகளை கயவர்களிடம் இருந்து பாதுகாக்க ‘குட் டச் பேட் டச்..!’ சொல்லித் தருவது நடைமுறையில் உள்ள நிலையில் அதை மாற்றி “டோன்ட் டச்..!” என்று சொல்லிக் கொடுங்கள் என்பது எந்த விதத்திலும் பொருத்தமானது அல்ல. 

விவரம் புரியாத குழந்தைகள் வலிய மனிதர்களிடம் மாட்டிக் கொள்ளும் போது அப்படி நடந்து கொள்ளவும் முடியாது. 

அது சரி… தலைப்புக்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறீர்களா..?

இந்த சம்பவங்கள் எல்லாம் நடக்கும் பிளாட்டின் நம்பர்தான் அது..!

E1 – கயவனின் கல்லறை..!

– வேணுஜி