போர்ப்ஸ் பத்திரிகை வருடம் தோறும் இந்திய அளவில் நட்சத்திரங்களை அவர்களது வருமானம் மற்றும் சமூக வலைதளங்களில் செல்வாக்கு என்ற ளவுகோலில் வைத்து அவர்களது தகுதி நிலைகளை வைத்து 100 பேரின் தர வரிசையை வெளியிடுகிறது.
அப்படி இந்த 2019-ம் வருடத்துக்கான தர வரிசையில் முதலிடத்தில் கிரிக்கெட் வீரர் வீராட் கோலி இருக்கிறார். கடந்த ஆண்டில் இவர் மூன்றாமிடத்தில் இருந்தார். முதலிடத்தில் கடந்த ஆண்டு இருந்த சல்மான் கானை மூன்றாவது இடத்துக்கு தள்ளி முதலிடத்தில் இவரும், இரண்டாமிடத்தில் அக்ஷய் குமாரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இந்த வரிசையில் 13-ம் இடத்தில் இருக்கும் நம் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தென்னக நட்சத்திரங்களில் முன்னிலையில் இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு 14ம் இடத்தில் இருந்து ஓரிடம் முன்னேறி இந்த இடத்தைப் பிடித்திருக்கிறார். இவருக்கு அடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 16-ம் இடத்தில் இருக்கிறார்.
இந்த தர வரிசையில் விஜய் 47-வது இடத்தையும், அஜித் 52-வது இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். இந்த தர வரிசைப் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ், எல்லோரது படங்களையும் உடன் வெளியிட்டிருக்கிறது. ஆனால், அஜித் படம் மட்டும் அதில் இடம்பெறவில்லை. அங்கே வெறும் வெற்றுத் ‘தல’ மட்டுமே இருக்கிறது.
55-வது இடத்தில் இயக்குநர் ஷங்கரும், 56-வது இடத்தில் கமலும், 64-வது இடத்தில் தனுஷும் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்கேதான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று விவாதமெல்லாம் வைக்கிறோம். ஆனால், அகில இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் முன்னிலை வகிக்கிறார்.