ஒரு அன்பான மனிதன் பணியாளாக இருந்தாலும் தன் குழந்தையை ஒரு ராஜாவின் வாரிசு போலத்தான் வளர்ப்பான். அந்தக் குழந்தைக்கும் தன் அப்பா ஒரு ராஜாதான்.
இந்தச் சின்ன இழையை வைத்து இரண்டு மணிநேரத் திரைக் கதையாக மாற்றிப் படமாகத் தந்திருக்கிறார் இயக்குனர் ஹென்றி.
ஆடுகளம் முருகதாஸ்தான் அந்த அன்புத் தந்தை. சொந்தமாக செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்து கீழ்த்தட்டு நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவரது மகள் (பிரிதிக்ஷா) மீதான அன்பில் என்ன கேட்டாலும் வாங்கித் தரும் குணத்துடன் இருக்கிறார்.
ஆனால் அவரது மனைவி வெலீனா இயல்பான சிந்தை கொண்டவர். மகளுக்கு எதார்த்த வாழ்க்கையைப் புரிய வைக்க வேண்டும் என்று முருகதாசிடம் வலியுறுத்தினாலும் அவர் கேட்பதாக இல்லை. மாறாக மனைவியை அடக்குகிறார்.
இந்நிலையில் பிரதிக்ஷாவுடன் பள்ளியில் ஒன்றாகப் பயிலும் மாணவன் வசதியான வீட்டுப் பிள்ளையாக இருக்க, அவன் பிறந்த நாளன்று அவன் வீட்டுக்குச் செல்லும் பிரதிக்ஷா அதே போன்று தனக்கும் ஒரு வீடு வாங்கித் தர, முருகதாஸிடம் கேட்க, மகள் ஆசைக்கு மறுப்பு சொல்ல முடியாமல் வீடு வாங்கித் தருவதாக உறுதி கூறுகிறார்.
வீட்டுப் பொருட்கள் வாங்கியதற்கே தவணை கட்ட முடியாத நிலையில் இருக்கும் முருகதாசால் மகள் விரும்பும் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்கி விட முடியுமா என்ற கேள்விக்கு விடைதான் மீதிப் படம்.
துணைப் பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த முருகதாஸுக்கு இந்த படத்தில் கதை நாயகன் வேடம். துணைப் பாத்திரங்களிலேயே சிறப்பாக செய்யும் முருகதாஸ் இந்த பாத்திரத்தில் முக்கிய வேடமே கிடைத்துவிட அதனுடன் ஒன்றி நடித்திருக்கிறார்.
மகளிடம் கொடுத்த வாக்குக்காக அவள் முகத்தில் விழிக்க முடியாமல் அவள் தூங்கியதும் வீட்டுக்கு வந்து, எழுவதற்கு முன் கடைக்குச் சென்று விடுவதும், பள்ளிக்கு வந்து மறைவில் நின்று அவள் முகத்தை பார்த்து அழுவதும் அற்புதம்.
ஒரு கட்டத்தில் வீடு வாங்க பணம் புரட்ட முடியாமல் போதை மருந்து கை மாற்றுபவரிடம் போய் வேலை கேட்கும்போது நமக்கு பக்கென்றிருக்கிறது.
அதேபோல் மகளுக்குப் பிடித்த ஒரு கோடி ரூபாய் வீட்டு உரிமையாளரிடம் போய் வீட்டை சில லட்சங்களுக்கு லீசுக்குக் கேட்க, அவர் அடிக்காத குறையாக இவரை விரட்டும்போது நமக்கு பரிதாபமாக இருக்கிறது.
ஆனாலும் நம் மனதைக் கொள்ளை கொள்வதென்னவோ சிறுமி பிரதிக்ஷா நடிப்புதான். பிடிவாதம் பிடிப்பது, சந்தோஷம் கொள்வது, நண்பனிடம் சவால் விடுவது என்று நடிப்பின் சாயலே தெரியாமல் இயல்பாக இருக்கிறது பிரதிக்ஷாவின் நடிப்பு.
அதேபோல் பள்ளியில் பிரதிக்ஷாவின் வீடு வாங்கும் ஆசைக்கு காரணமாக அவளை உசுப்பேற்றும் அந்த குண்டுப் பையனும் அற்புதமாக நடித்திருக்கிறான். பிரதிக்ஷாவின் அப்பா அவளிடம் பொய்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதை முதலில் கண்டுபிடிப்பவன் அவன்தான்.
பிரதிக்ஷாவின் அம்மாவாகவும், முருகதாஸின் மனைவியாகவும் நடித்திருக்கும் வெலீனாவின் நடிப்பும் கச்சிதமாக இருக்கிறது. அழுது வடியாமல் அதே சமயம் எதையும் இயல்பாக ஏற்றுக் கொள்ளும் பாங்குடன் நடந்து கொள்வதுடன் முருகதாஸின் பிள்ளைப் பாசம் புரிந்து ஒரு சிறிய வீடாவது வாங்கிவிடலாம் என்று அவருடன் கைகோர்த்து நிற்பது நன்று.
முருகதாஸின் நண்பராக வரும் பக்ஸ் பகவதி பெருமாளும் இயல்பை உணர்ந்து நடித்திருக்கிறார். பிரதிக்ஷாவிடம் அவர் சொல்லும் நியாயங்கள்தான் படத்தை முடிக்க உதவுகின்றன.
மகளிடம் வீடு வாங்கித் தருவதாக ஏமாற்றிக் கொண்டிருந்தாலும், பேத்தி சொன்னதை உண்மை என்று நம்பி முருகதாஸின் பெற்றோர் அவரை கடிந்து கொள்வது ரசனையான காட்சி.
ஏதோ ஒரு கட்டத்தில் தன்னால் முடியாது என்பதை அவர் மகளிடம் எடுத்துக் கூறி விடுவார் என்றுதான் நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் அது நடக்காமல் போவது எவ்வளவுதான் ஒரு தந்தையால் செய்து விட முடியும் என்று ஒருவித அலுப்பைத் தருகிறது.
நிக்கி கண்ணனின் ஒளிப்பதிவு படத்தின் காட்சிகளை நியாயமாகக் கொடுத்திருக்கிறது. சங்கர் ரங்கராஜனின் இசை கதையை ஆவணப்படமாக மாற்றி விடாமல் காப்பாற்றி இருக்கிறது.
ராஜாமகள் – சிறிய…ஆனால் நிறைவான முயற்சி..!