காடுகளைக் காப்பதற்கு குரல் கொடுத்து பல படங்கள் வந்தாயிற்று. முதல் முதலாகக் கடல் வளங்களைப் பாதுகாக்கச் சொல்லி வந்திருக்கும் படம் இது.
அத்துடன் நாம் கேள்விப்பட்டிருக்கும் அண்டர்கிரவுண்ட் மாபியா, மெடிக்கல் மாபியாவைத் தாண்டி ஆயில் மாபியா என்ற நாம் அறியாத உலகத்தைக் காட்டி இருக்கிறார் இயக்குனர் சண்முகம் முத்துசாமி.
அப்படி கடற்கரையில் எண்ணெய்க் குழாய்களைப் பதிக்கும் அரசின் ஒரு திட்டத்தால் வாழ்வாதாரங்களை இழந்த மீனவர்களில் ஒருசிலர் அந்த எண்ணையையே திருடி கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்ய ஆரம்பிக்கிறார்கள்.
அப்படி குரூட் ஆயில் கள்ள விற்பனையில் தனக்கென்று சாம்ராஜ்யத்தை தான் தந்தை சாய்குமார் வழியாக உருவாக்கிக் கொள்ளும் நாயகன் ஹரிஷ் கல்யாண் எந்தவிதமான எதிர்ப்புகளை சந்தித்தார், அதை அவரால் முறியடிக்க முடிந்ததா என்பதுதான் கதை.
எஸ்கே என்பது போல் எச்கே என்று போட்டுக் கொள்ளும் ஹரிஷ் கல்யாண் முழுக்க ஆக்சன் ஹீரோவாக இதில் முயன்றிருக்கிறார். ஆக்சன், ஆட்டம் எல்லாமே அவருக்கு எளிதாக கை, கால் வரப்பெற்றிருக்கிறது.
நாயகியாகி இருக்கும் அதுல்யா ரவிக்கு ஹீரோவுக்கு உதவுவதைத் தவிர வேறு பெரிய வேலை இல்லை.
போலீஸ் உடையைப் போலவே வில்லன் வேடமும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது வினய்ராய்க்கு.
கார்ப்பரேட் வில்லன் சச்சின் கடேகரின் செயல்பாடுகளும் திட்டங்களும் தற்போதைய தொழிலதிபர்களை நினைவுபடுத்துகிறது.
கடந்த காலத்தில் நடந்த கதையாக இருந்தாலும் நிகழ்கால அரசியலை நினைவுபடுத்துவதில் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
ஏற்கனவே ஹிட் அடித்து விட்ட பாடல் மற்றும் மிரட்டும் பின்னணி இசையில் திபு நினன் தாமஸ் அடையாளம் தெரிகிறார்.
உண்மைச் சம்பவங்களை கமர்சியலாக கொடுத்த அளவில் தீபாவளிப் படமாகி இருக்கிறது டீசல்.
– வேணுஜி