April 19, 2024
  • April 19, 2024
Breaking News
March 17, 2023

குடிமகான் திரைப்பட விமர்சனம்

By 0 367 Views

இயல்பான கதைக் களத்தையும், புதிய நடிகர்களையும் வைத்துக் கொண்டு நிறைவான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ்.என்

அவரது திறமையை நம்பி சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் எஸ்.சிவகுமார் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

படத்தில் சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன் என்று நமக்கு அறிமுகமானவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள்தான். மற்றபடி நாயகனாக நடித்திருக்கும் விஜய் சிவன் உள்பட சேது ராமன், , ஜி.ஆர் கதிரவன், கேபிஒய் ஹானஸ்ட் ராஜ், லவ்லி ஆனந்த், விஜய் ஆனந்த், யுகன், டெனிஸ், மாஸ்டர் அஜய் கிருஷ்ணா, இவியா தரணி, அர்விந்த் ஜானகிராமன், பரத் நெல்லையப்பன், மணி சந்திரா, பார்த்தசாரதி, மனோகர் என்று அத்தனைப் பேரும் நாம் அறியாத முகங்களே.

ஆனால், அதை நினைக்க விடாமல் படத்தை இயக்கி இருக்கிறார் பிரகாஷ்.

மனைவி சாந்தினி, பள்ளி செல்லும் மகன் மற்றும் குடிகாரத் தந்தை சுரேஷ் சக்ரவர்த்தியுடன் வாழ்ந்து வரும் நடுத்தர வர்க்க நாயகன் விஜய் சிவன் ஏடிஎம் மிஷினில் பணம் ஏற்றும் வேலையில் இருக்கிறார்.

நொறுக்குத் தீனி பழக்கமுள்ள அவருக்கு அதனால் அடிக்கடி வயிற்று உபாதை வருகிறது. இன்னொரு பக்கம் குடிக்காமலேயே குடித்ததைப் போன்ற போதைக்கு ஆளாகி, அதன் காரணமாக நன்மதிப்பை இழக்கிறார். அத்துடன் அப்படியான ஒரு போதை வேளையில் ஏடிஎம்மில் நூறு ரூபாய் வைக்கும் இடத்தில் 500 ரூபாய்களை வைத்து விட அதில் பணம் எடுப்பவர்களுக்கு ஐந்து மடங்கு பணம் கிடைக்க… அவர் வேலை போகிறது.

அவருக்கு ஏன் அப்படி போதை வருகிறது..? இழந்த பணத்தையும், நன்மதிப்பையும் விஜய் சிவன் மீட்டாரா என்பது மீதிக் கதை.

முன்பே சொன்னது போல் அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக நடித்திருக்கிறார் விஜய் சிவன். தான் நிரபராதி என்று சொல்வதை ஊர் நம்பாவிட்டாலும் , உடனிருக்கும் மனைவியே நம்பாமல் போகும்போது அற்புதமாக உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அவர் மனைவியாக வரும் சாந்தினியும் ஒரு நடுத்தரக் குடும்பத் தலைவி வேடத்துக்கு கச்சிதமாக இருக்கிறார். ஆனால் மாமனார் குடிப்பதை பொறுத்துக் கொள்பவர் கணவன் குடிக்கிறான் எனும்போது மட்டும் சீறுகிறார்.

சின்ன லைன்தான் கதை என்பதால் முதல் பாதி பாத்திரங்களை விவரிப்பதிலேயே போய்விடுகிறது. அத்துடன் இது நகைச்சுவை படம் என்று நம்மை தயார்படுத்துவதற்கும் அவ்வளவு நேரம் தேவைப்படுகிறது.

இரண்டாவது பாதியில் குடிகார சங்கத் தலைவர் நமோ நாராயணன் கதைக்குள் வந்ததும் சூடு பிடிக்கும் கதையும் நகைச்சுவையும் படம் முடியும்போது இது ஒரு நல்ல படம் தான் என்று எண்ண வைக்கிறது.

தனுஜ் மேனனின் இசையும், மெய்யேந்திரனின் ஒளிப்பதிவும் படத்தின் இயல்பு தன்மைக்கு பொருத்தமாக இருக்கின்றன.

முன்பாதியை கவனத்துடன் திரைக்கதை எழுதிக் கடந்திருக்க வேண்டும் என்பதுடன் வேறு ஒரு நல்ல தலைப்பு வைத்திருந்தால் இந்த படத்தின் மீதான மதிப்பு இன்னும் கூடியிருக்கும்.

தலைப்பைப் பார்த்துவிட்டு பல பேர் உள்ளே வரத் தயங்குவார்கள், இது ஏதோ குடிகாரனுடைய கதை போலிருக்கிறது என்று.

குடிமகான் – புதிய திறமைக்கு வந்தனம்..!