October 10, 2024
  • October 10, 2024
Breaking News
March 19, 2023

ஷூட் த குருவி திரைப்பட விமர்சனம்

By 0 298 Views

டார்க் காமெடி ஜானரில் ஹாலிவுட்டிலேயே இவ்வளவு படங்கள் வந்திருக்கிறதா என்று திகைக்கும் அளவுக்குத் தமிழில் நிறைய படங்கள் வந்து விட்டன. அப்படிப்பட்ட வரிசையில் தன் படத்தையும் இணைத்துக் கொண்டார் இந்தப் பட இயக்குனர் மதிவாணன். 

மிகவும் எளிதான கதைதான். ஆனால் அதை அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளோடு சுவாரஸ்யப்படுத்திக் கொடுத்திருக்கிறார் அவர்.

குருவியை சுடுவதில் என்ன இருக்கிறது என்று தலைப்பைப் பார்த்து முடிவு செய்து கொள்ள வேண்டாம். குருவி என்பது பிரபல ரவுடி குருவி ராஜன். அஞ்சா நெஞ்சன் ஆக சிறு வயதிலிருந்து வளர்ந்து தன்னை வளர்த்த தாதாவையே போட்டுத் தள்ளி தனி சாம்ராஜ்யம் அமைத்தவன். சக கேங்ஸ்டர்கள் யாராலும் நெருங்க முடியாத அவனை, உயிருக்குப் போராடும் சாமானியன் ஒருவன் அடித்துவிட அதன் பின் என்ன ஆனது என்ற சம்பவங்கள்தான் கதை.

எதிர்காலத்தில், அதாவது 2032ஆம் ஆண்டு துவங்குவதாக இக்கதை சொல்லப்படுவது புதுமைதான்.

பல படங்களில் வில்லனின் கையாளாகவே வந்த அர்ஜையைப் பார்க்கும்போதெல்லாம் இவர் ஏன் முன்னணிக்கு வர முடியவில்லை என்ற கேள்வி எழுந்தது நிஜம்.

அந்தக் கேள்விக்கு பதிலாக கேங்ஸ்டர் குருவி ராஜன் என்ற கதாபாத்திரத்தில் இதில் அர்ஜை வந்து எதிர்மறை நாயகனாக மிரட்டியிருக்கிறார். முழு வில்லன் வேடம் என்றாலும் இந்தப் படத்தைப் பொறுத்தவரை இதுதான் நாயகன் வேடம். அது கிடைத்துவிட்ட திருப்தியில் நடை, உடை, பார்வை என்று அத்தனை விஷயங்களுக்கும் நியாயம் செய்திருக்கிறார் அர்ஜை.

அதேபோல் இதுவரை நாயகர்களின் நண்பராக நடித்து வந்த ஆஷிக் ஹுசைன் கதையின் திருப்புமுனையான கதாபாத்திரத்தில் இதில் பாராட்டும்படி நடித்திருக்கிறார். இந்த சாமானியர்தான் எதிர்பாராத விதமாக அர்ஜையை அடித்து விடுவது. சீரியஸாக அறிமுகமாகமானாலும் பல இடங்களில் இவர் நகைச்சுவைக்கும் பயன்பட்டு இருக்கிறார்.

பேராசிரியர் மித்ரன் வேடத்தில் நடித்திருக்கும் ராஜ்குமார்.ஜி வயதான வேடத்தில், வித்தியாசமான மாடுலேஷன் கொண்டு தன் பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். ஆனால் மேக்கப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

புத்த பிட்சு போல் வரும் சுரேஷ் சக்ரவர்த்தியுடன் மணி வைத்தி, சாய் பிரசன்னா, ஜிப்ஸி நவீன் என அனைத்து நடிகர்களும் அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரண்டன் சுஷாந்த் ஒரு அறைக்குள் வைத்தே பெரும்பாலான படத்தை முடித்திருக்கிறார். எஞ்சிய காட்சிகளையும் வெவ்வேறு அறைகளில் படமாக்கி தன் சவாலை நிறைவேற்றி இருக்கிறார்.

இசையமைப்பாளர் மூன்ராக்ஸ் பின்னணி இசையில் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்களை விட ஒலி மிஞ்சி விடுகிறது

படத்தொகுப்பாளர் கமலக்கண்ணன் வேகமான கட்டிங், இன்டோரிலேயே நகரம் படுத்தால் ஏற்படும் சலிப்பை உணர்விடாமல் செய்கிறது.

ஆளுக்கு ஏற்ற ஆடை என்பது போல் தியேட்டர்களுக்கான சினிமா என்பதை மாற்றி ஓடிடிக்கான தேவையைப் புரிந்து கொண்டு 65 நிமிடங்கள் பார்த்தோமா ரசித்தோமா என்ற ஒரு படத்தை தந்திருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்..!

ஷூட் த குருவி – ஓடிடி ஸ்பெஷல்..