தன் அடுத்தடுத்த படங்களில் வளர்ந்து கொண்டே இருக்கும் மாரி செல்வராஜ், தன் அடுத்த உயரத்தைத் தொட்டிருக்கிறார்..!
அந்த உயரத்தில் சிகரமான விஷயம், சாதிய விஷயங்களை சமன் செய்து சீர்தூக்கி பார்த்திருப்பது.
யாரும் யாருக்கும் உயர்ந்தவர் இல்லை, தாழ்ந்தவர்களும் இல்லை என்பதை அவரவர்களுக்கே உரிய அறத்துடனும், அழுத்தத்துடனும் சொல்லி இருக்கும் நேர்மை சிறப்பு.
நசுக்கப் பட்டவர்கள் தன் திறமையால் உயரும்போது எந்த இடத்திலும் நிதானத்தை இழந்து விடாமல் இலக்கை அடைவதுதான் தங்கள் சந்ததிக்கு செய்யும் மகத்தான செயல் என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் அவர்.
அதற்கு அவர் தேர்ந்தெடுத்திருப்பது 90 களின் மத்தியில் இடம்பெற்ற கபடி விளையாட்டு மற்றும் சாதிய அரசியல் களம். பல படங்களில் கபடி இடம்பெற்றிருந்தாலும் இதில் ஆசிய கோப்பைக் கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறார் மாரி.
அதற்கு உடல், மொழி, ஆவி என அனைத்தையும் தந்து உழைத்திருக்கிறார் நாயகனாக இருக்கும் துருவ் விக்ரம்.
துருவ்வின் வேகம், உடல்மொழி உணர்ச்சி வெளிப் பாடுகள், உயிரைக் தரும் உழைப்பு எல்லாமும் அவரது அப்பா சீயானுக்கு கொஞ்சமும் சளைத்தவை அல்ல. எந்த முன்னணி ஹீரோவின் வாரிசும் இப்படி ஜீவனைக் கொட்டி அற்புதமாக இதுவரை தமிழில் நடித்ததில்லை.
ஜாடையிலும் உச்சரிப்பு குரல் வளத்திலும் சீயானின் பிரதியாக இருக்கும் துருவ்.படத்தில் அர்ஜுனா விருது.பெறுவதைப் போலவே சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
பாத்திரமாகவே மாறிவிடுவது பசுபதிக்கு ஒன்றும் புதிதல்ல.
நிஜத்தில் நாம் பார்த்த இரு சாதிய தலைவர்களின் வரும் அமீரும், லாலும் ஒருவருக்கொருவர் நடிப்பில் மிஞ்சியிருக்கிறார்கள்.
அனுபமா பரமேஸ்வரனின் காதல் அக்னிக்கு ஒப்பானது என்றால் ரெஜிஷா விஜயனின் தமக்கைப் பாசம் பனிக்கட்டியாக உருகக் கூடியது.
எந்த சாதி எதிராக நிற்கிறதோ அதே சாதியே உந்து சக்தியாக இருப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கும் மாறி செல்வராஜ் உயர்ந்து நிற்கிறார்.
பழைய பாடல்களை நினைவூட்டி ரசிக்க வைத்திருக்கிறார் நிவாஸ் கே.பிரசன்னா. பின்னணி இசை பிரமாதம்..!
சாணிக் காகிதத்தில் எழுதிய கவிதையானாலும் கண்களில் தைக்கிறது ஒளிப்பதிவாளர் எழிலின் ஜாலம்.
இதில் இடம்பெற்ற ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
பைசன் காளைமாடன் – மோதி மிதித்து விடு..!
– வேணுஜி