April 25, 2024
  • April 25, 2024
Breaking News
October 13, 2019

பெட்ரோமாக்ஸ் திரைப்பட விமர்சனம்

By 0 1025 Views

கே.ஆர்.விஜயாவை சினிமாவின் அம்மனாக ஆக்கியது போல, தமன்னாவை சினிமாவின் பேயாக ஆக்கி விடுவார்கள் போலிருக்கிறது.

ஏற்கனவே ‘தேவி’ படத்தின் இரண்டு பாகங்களில் பேயான இவரை இந்தப்படத்திலும் பேயாக்கி பயமுறுத்தப் பார்த்திருக்கிறார் இயக்குநர் ரோகின் வெங்கடேசன். அதனால், இனி தொடர்ந்து அவரைப் பல படங்களில் பேயாகப் பார்த்துவிடுவோமோ என்று ‘பயமாக’ இருக்கிறது.

தங்கள் பூர்விக வீட்டை விற்றுவிட்டு மலேசியாவில் குடியேற நினைக்கும் பிரேம் அதற்கான வேலைகளில் இறங்க, அந்த வீட்டில் பேய்கள் இருப்பதாக நம்பி யாரும் அதை வாங்க முன்வராமல் போக, அங்கே பேய் இல்லையென்று உறுதி செய்துவிட்டால் அதை எளிதாக விற்றுவிடலாம் என்று நால்வரை அந்த வீட்டில் தங்க வைக்க முடிவு செய்கிறார் பிரேம்.

‘முனீஸ்காந்த்’ ராம்தாஸ், காளி வெங்கட், சத்யன், ‘டிஎஸ்கே’ தான் அந்த நால்வர். ஒவ்வொருவருக்கும் குடும்பத்தில் பணப்பிரச்சினை இருக்க, அதற்காக அந்த அசைன்மென்ட்டை ஒத்துக்கொள்கிறார்கள். இப்படி சீரியஸாக ஒரு முன்பாதிக்கதை.

பின்பாதியில் இந்த சீரியஸ், பிரச்சினைகளையெல்லாம் தூக்கிப் போடுமளவுக்கு படம் காமெடிக்கு பாதை மாறுகிறது. அதனால், படமும் தப்பித்து விடுகிறது.

மேற்படி நால்வருக்கும் ஆளாளுக்கு ஒரு குறை இருக்க, அந்தக் குறைகளை வைத்தே அவர்கள் பேய்களுக்கு ‘டேக்கா’ கொடுப்பதை விழுந்து விழுந்து சிரித்து ரசிக்கலாம். 

நால்வருமே நன்றாக நடித்திருந்தாலும் நடிப்பாசை மிக்கவராக வரும் ‘டிஎஸ்கே’தான் அதகளம் செய்கிறார். அதிலும் அவர் அந்நியன் விக்ரமாக, சரவணா ஸ்டோர்ஸ் சூர்யாவாக, சூர்யவம்சம் விஜய்காந்தாக, பாகுபலி காளகேயனாக வரும் காட்சிகள் தியேட்டரின் செங்கற்களை ஆட்டிப் பார்த்து விடுகிறது. அவ்வளவு ரெஸ்பான்ஸ். ‘டிஎஸ்கே’வுக்கு நகைச்சுவையில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.

ராம்தாஸின் காதல் பிளாஷ்பேக் ரசிக்க வைப்பது போலவே, அதன் தொடர்ச்சிக் கதையில் யோகிபாபுவும் வந்து இன்னும் கலகலப்பைக் கூட்டுகிறார். ராம்தாஸின் காதலியாக வரும் ‘மைனா நந்தினி’யின் நகைச்சுவை நடிப்பும் அமர்க்களம். 

நாலு பேய்களுக்கும் வருகிற கிளையன்ட்டுகளை பயமுறுத்துவது நோக்கமாக இருக்க, அதில் ஒரு பேயாக வரும் கேஎஸ்ஜி வெங்கடேஷுக்கு மட்டும் அழுகாச்சியான வேடம் கொடுத்துவிட்டார்கள். அவரைப் பார்த்தால் அழுகையும் வரவில்லை, சிரிப்பும் வரவில்லை. அந்தக் காட்சிகள் எல்லாம் டிவி சீரியல் போல் அழுது வடிகின்றன.

டேனி ரேமண்ட்டின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் படத்தின் தேவையை தொல்லை தராமல் நிறைவு செய்திருக்கின்றன. 

வழக்கமான ஹாரர் காமெடிப் படங்களின் டெம்ப்ளேட்தான் என்றாலும் யாரெல்லாம் பேய்கள் என்று நமக்கு அறிமுகப்படுத்தும் படத்தின் ஆரம்பக் காட்சிகள் புதுமையாக இருக்கின்றன. லாஜிக்கெல்லாம் தேவைப்படாத பின்பாதி விறுவிறுப்பாகக் கடந்துவிடுகிறது.

பெட்ரோமாக்ஸ் – இந்தத் தலைப்பு எதுக்குன்னு கடைசிவரை யாரும் சொல்லவே இல்லை..!