வித்தகன் ரா.பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் ‘ஒத்த செருப்பு’ படம் வரும் செப்டம்பர் 20-ல் வெளியாகிறது.
இதில் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருப்பது சிறப்பான விஷயம். உலகில் இப்படி ஒருவர் மட்டுமே நடித்திருக்கும் படங்கள் வெளியாகியிருந்தாலும் கதை, வசனம் எழுதி இயக்கியவரே நடித்திருப்பது இதுதான் உலகிலேயே முதல் முறையாகக் கருதப்படுகிறது.
ஒருவர் மட்டுமே அதுவும் ஒற்றை லொகேஷனிலேயே நடித்திருப்பதால் ரசிகர்களை படத்தில் ஒன்றச்செய்ய பின்னணி இசை மற்றும் ஒலி நுட்பங்களால் நிறைய புதுமைகளைச் செய்திருக்கிறாராம் ஆர்.பார்த்திபன். படம் பார்க்கும்போது அந்த சிறப்பு ஒலி நுட்பங்களும் ஒரு கேரக்டராக இருப்பதாகச் சொல்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.
படத்துக்கு ஒலி அமைத்திருப்பவர் பிரபல ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி. இதுவரை இல்லாத அளவுக்கு ரசூல் பூக்குட்டி தன் திறமைகளைக் கொட்டி இதில் பணியாற்றியிருப்பதாலும், இன்னும் பல சிறப்புகளாலும் இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப ரா.பார்த்திபன் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
ராம்ஜியின் ஒளிப்பதிவும் பெரும் சவாலாக அமைந்திருக்க, என்ன பிரிவின் கீழ் ஒரு தமிழ்ப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப முடியும் என்று தெரியவில்லை. ‘பிற மொழிப்படங்கள்’ என்ற பிரிவில் அனுப்புகிறாரா அல்லது ஆங்கிலத்தில் ஒரு வெர்ஷன் பார்த்திபன் பதிவு செய்து வைத்திருக்கிறாரா என்பதும் தெரியவில்லை.
எப்படி இருந்தாலும் இது நல்ல விஷயமே. இன்னொரு ஆஸ்கரை ‘ஒத்த செருப்பு’ தட்டி வந்தால் இதைவிட ஒரு தமிழருக்குப் பெருமையேது..?
அதிலும் உலகிலேயே முதல் ஆஸ்கர் பெற்ற தமிழ்ப்படம் என்றாகிவிடும் இந்த ஒ.செ..!