காதலில் விழுந்த கலையரசனும் தீபா பாலுவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் இதற்கு தீபா பாலு வீட்டில் மிகப்பெரிய எதிர்ப்பு வருகிறது.
அதற்காக வெளியூர் சென்று வாழ்க்கை நடத்தும் இருவரும் தீபா பாலு கர்ப்பமான பின் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார்கள்.
காட்டுக்குள் இருக்கும் அவர்களது குலதெய்வமான நிறைசூலி அம்மனுக்கு பலி கொடுத்து பூஜை நடத்தினால் அது கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது என்கிற நம்பிக்கையில் கலையரசன் குடும்பமே அந்த கோயிலுக்கு பயணப்படுகிறார்கள்.
இந்நிலையில் தீபா பாலுவின் அப்பாவாக வரும் கஜராஜ் அவரது சிறுவனான மகனையும் அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் எங்கோ வேலையாக கிளம்புகிறார்.
இன்னொரு பக்கம் கொடூரமான அடியாள்கள் சில பேரும் அந்த காட்டுக்குள் மது அருந்தி சீட்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இவை எல்லாமே ஒரு மையப்புள்ளியில் சேரும்போது என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
கதைநாயகனாக நடித்திருந்தாலும் கலையரசன் கதாநாயகனுக்கு உரிய இமேஜ் எல்லாம் பார்க்காமல் இந்த கதைக்கு என்ன தேவையோ அதை புரிந்து கொண்டு ஒத்துழைத்து நடித்திருப்பது பாராட்டுக்குரியது. வேறு எந்த ஹீரோவும் இப்படி ஒரு கிளைமாக்ஸுக்கு ஒத்துக்கொள்வார்களா தெரியாது.
அறிமுக நாயகி தீபா பாலுவுக்கு பாந்தமான முகம். கலையரசனை காதலிக்கும்போது துள்ளலும் துடிப்புமாக இருக்கும் அவர், திருமணம் ஆகி கர்ப்பமான பின் இயல்பான குடும்பத்து பெண்ணுக்குரிய தளர்வுடன் நடித்திருப்பது ஆகச்சிறப்பு.
ஒவ்வொரு கட்டத்திலும் அவருக்கு ஏதோ நேரப் போகிறது என்பது போன்ற ஒரு பயங்கரத்தை படம் முழுவதும் நிறுவி இருக்கிறார் இயக்குனர்.
சமீப காலங்களில் வெறும் நகைச்சுவை நடிகராக இல்லாமல் குணச்சித்திர வேடங்களையும் ஏற்கும் பால சரவணன், இந்தப் படத்திலும் நகைச்சுவை தடவிய சீரியஸ் வேடம் ஏற்றிருக்கிறார்.
ஒரு பெண்ணைப் பெற்ற அப்பாவாக, மகள் வீட்டை விட்டு போனாலும் அமைதியாக வண்டியை எடுத்துக்கொண்டு ஏதோ வேலையாகச் செல்லும் அப்பாவியாக தெரியும் கஜராஜ், என்ன வேலைக்கு செல்கிறார் என்பதில் தெரியும் சஸ்பென்ஸ் பயமுறுத்துகிறது.
இவர்களுடன் விஜய் சத்யா, ஆதவ் சந்திரன், அகரன் வெங்கட், விஜலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை உள்ளிட்டோர் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் செய்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா நிறைசூலி குடியிருக்கும் காட்டை அத்தனை பயங்கரமாக படமாக்கி இருக்கிறார்.
அந்த பயமுறுத்தலில் இசையமைப்பாளர் சாந்தனின் பின்னணி இசைக்கு பெரும் பங்கு உண்டு. படம் தொடங்கியதிலிருந்து அந்த காட்டை காட்டும் போதெல்லாம் அவர் இசையின் ஊடாக ஏற்படுத்தும் ஒலி, கிலியை ஏற்படுத்துகிறது.
ஒரு சஸ்பென்ஸ் திரில்லரை எடுத்துக்கொண்டு அதனூடே நம்மை பதற்றத்துடன் படம் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் வி.ஆர்.துதிவாணன்.
ஆனால் அந்த பதட்டத்தை நம்முள் ஏற்படுத்துவதற்காக இதை ஒரு அமானுஷ்ய கதை போல் ஆரம்பித்து பிறகு பக்தி மயமான படமாக மாற்றி கடைசியில் சமூக கதையாக முடித்து இருக்கிறார்.
இப்படித்தான் இந்த கதையின் முடிவு இருக்க வேண்டுமானால் அதற்கு சக்தி வாய்ந்த தெய்வத்தை முன்வைத்து அதற்கான வரலாறு எல்லாம் சொல்லி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றுகிறது.
பிறைசூலி கோயில் அந்த காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறைச் சொல்லி அதன் சக்தியை பன்மடங்கு உயர்த்தி சொல்லியும் கடைசியில் அந்த தெய்வத்துக்கு உண்மையிலேயே சக்தி இருக்கிறதா என்று கேள்விதான் எழுகிறது.
கொலை சேவல் – பலியும், கிலியும்..!
– வேணுஜி