வானம் பார்த்து ஏங்கி நிற்கும் மக்கள் வாழும் வறண்ட பூமி. குடிநீருக்காக பல கிலோமீட்டர் வண்டி கட்டிக்கொண்டு போய் நீர் எடுத்து வரும் நிலைமையில் இருந்தாலும் லந்துக்கும், ரவுசுக்கும் குறை இல்லாத மக்கள் வாழும் ராமநாதபுரம் பகுதி கிராமம்.
அங்கே கோயில் பூசாரியாக இருக்கிறார் சிற்பி யோகி பாபு. மழைக்காக ஒரு பூஜை நடத்திப் பார்த்தும் எந்த பலனும் இல்லாத நிலையில் யோகி பாபுவின் வீடு இருக்கும் பகுதியின் அடியில் நீர் வளம் இருப்பதை அந்த ஊர் விஞ்ஞானி கண்டுபிடிக்கிறார்.
இருக்கிற துண்டு நிலத்தையும் ஊருக்கு கொடுத்துவிட்டு நடுத்தெருவில் நிற்க வேண்டுமா என்று யோகி பாபு மன்றாடிப் பார்த்தோம் பலன் இல்லாமல் கடைசியில் கிணறு எடுக்க ஒத்துக் கொள்கிறார்.
ஊரே சேர்ந்து கிணற்றைத் தோண்ட பாதி கிணறு ஆன நிலையில் டைனோசரின் எலும்புக்கூடு ஒன்று உள்ளே கிடைக்கிறது. அதைக் கேள்விப்பட்ட அரசாங்கம் அந்த இடத்தை ஆக்கிரமிக்க அதற்குப்பின் கிணறு எடுத்தார்களா அவர்களது தண்ணீர் பிரச்சனை தீர்ந்ததா என்பதெல்லாம் மீதிக் கதை.
கோவில் பூசாரியாக நடித்திருக்கும் யோகி பாபு எதற்காக சிற்பியாக இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. கோயில் பூசாரியாக இருந்தும் அவரது நடவடிக்கைகள் பகுத்தறிவுடன் இருப்பது பாராட்டத்தக்கது.
ஊரில் பஞ்சம் தலை விரித்தாட அவ்வப்போது கோயில் உண்டியலை திறந்து மக்களுக்கு உதவுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அவர். அந்த வறண்ட ஊரில் யார் உண்டியலில் காசு போடுவார்கள் என்கிற லாஜிக்கை தவிர்த்து விட்டுப் பார்த்தால் இது நல்ல விஷயம்தான்.
அவரைத் தவிர மற்ற பாத்திரங்கள் எல்லோரும் நகைச்சுவை மிளிர பேசிக்கொண்டிருக்க அவர்களை விட சிறிது குறைவாகவே சிரிக்க வைக்கிறார் யோகி பாபு.
படத்தின் பாத்திரத்தில் ஒட்டாமலேயே அவர் அங்கங்கே நின்று கொண்டு வசனம் பேசிக் கொண்டிருப்பதை தவிர்த்து இன்னும் அர்ப்பணிப்புடன் நடித்திருக்கலாம்.
நாயகியாக நடித்திருக்கும் லவ்லின் சந்திரசேகர், படத்துக்குள் அந்தப் பாத்திரம் தேவை என்பதற்காக மட்டுமே சேர்க்கப்பட்டது போல் தெரிகிறார். அந்த பஞ்ச கிராமத்துக்குள் அப்படி ஒரு பளிச்சென்று பெண் இருப்பது ஆச்சரியம்தான்.
சமீபகாலமாக ரெய்ச்சல் ரபெக்காவை அடுத்தடுத்து படங்களில்… அதுவும் நல்ல பாத்திரங்களில் பார்க்க முடிவது ஆரோக்கியமான விஷயம். தொல்லியல் துறை அதிகாரியாக வரும் அவர் நடிப்பு நன்றாக இருக்கிறது.
ஆனால் பாத்திரப்படைப்பு அவர் நல்லவரா கெட்டவரா என்கிற சந்தேகத்திலேயே கழிகிறது. அவரது உதவியாளராக நடித்திருக்கும் ராமகிருஷ்ணனுக்கும் சிறிய பாத்திரம்தான்.
ஒட்டுமொத்த படத்தில் அதிகமாக கவர்வது ஹலோ கந்தசாமிதான். அவர் வரும் காட்சிகள் எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்கிறார். கடைசியில் போலீசாரிடம் நையப்புடைக்கப்பட்டு அடி வாங்கும் போது கூட டைமிங் வசனத்தால் நம்மை சிரிக்கவே வைக்கிறார்.
இவரையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் போனது தமிழ் சினிமாவின் குறை.
மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியன் கூட அந்த கிராமத்துக்கு ஏதும் நல்லது செய்பவராக தெரியவில்லை.
யோகி பாபுவின் தியாகி தாத்தாவாக நடித்திருக்கும் கவிஞர் விக்கிரமாதித்யன் நல்ல தேர்வு. ஆனால் அவரது பத்திரமும் பட்டென்று முடிந்து போகிறது.
ஊர் தலைவராக நடித்திருக்கும் நடிகர் உள்பட அந்த கிராமத்து மனிதர்களாக நடித்திருக்கும் அத்தனை பேருமே அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தியாகராஜன், வறட்சியையும் மழையையும் கிராமத்து மண்ணில் கலந்து அழகாக காட்டியிருக்கிறார்.
நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசை வழக்கம்போல் உணர்வுபூர்வமாக ஒலித்து இருக்கிறது.
இந்த படம் வெளிவரும் இந்த சமயத்தில் இத்தனை சுவைபட இயக்கி இருக்கும் இயக்குநர் சுரேஷ் சங்கையா, இப்போது இவ்வுலகில் இல்லை என்பது ஆழமான வருத்தம்தான்.
இருந்திருந்தால் இதைப் போன்று சமூக சிந்தனையுடன் கூடிய நிறைய படங்களை அவரிடம் நாம் பெற்றிருக்க முடியும். படத்தின் இயல்பான திரைக்கதையில் கலந்து அவர் படம் முழுவதும் நிறைந்திருக்கிறார்.
கெணத்த காணோம் – சிரிக்க… சிந்திக்க..!
– வேணுஜி