January 28, 2022
  • January 28, 2022
Breaking News
June 1, 2019

என்ஜிகே திரைப்பட விமர்சனம்

By 0 426 Views

‘மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்’ என்ற பெயரை நாம் எப்படி ‘எம்ஜிஆர்’ என்று அறிந்துகொண்டு கொண்டாடுகிறோமோ அப்படி இருக்க வேண்டுமென்று ‘நந்த கோபாலன் குமரன்’ என்ற பெயரை ‘என்ஜிகே’ ஆக மாற்றி அதில் சூர்யாவையும் பொருத்திப் பார்த்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.

ஆனால், எம்ஜிஆர் கதைக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று ஆராயக் கூடாது. எம்ஜிஆர் போலவே என்ஜிகேவும் அரசியலுக்கு வந்து சிஎம் ஆகிறார். ஆனால், முன்னவர் பட்டபாடுகளும் உழைப்பும் அதிகம். இதில் சூர்யாவின் வழியை வேறு வழியாக்கிக் காட்டியிருக்கிறார் செல்வராகவன்.

இயற்கை விவசாயம் செய்து நியாயமாக தானும் பிழைத்து தன்னைப்போன்ற இளைஞர்களையும் அப்படி ஆரோக்கியமாகப் பிழைக்க வைப்பதால் உள்ளூர் தண்டல்காரர்கள், கந்துவட்டிக்காரார்கள் மக்களை வஞ்சித்து வாழமுடியாமல் போக, அவர்கள் செய்யும் அட்ராசிட்டிகளைத் தனியாகத் தட்டிக்கேட்க வழியில்லாத சூர்யா, எம் எல் ஏவின் உதவியை நாடி, பிரச்சினையைத் தீர்த்து அதன் விளைவாக அரசியல் கட்சிக்குள் விரும்பாமல் இணைகிறார்.

உள்ளேவந்து கரை வேட்டிகளின் செல்வாக்கைப் பார்த்து மக்களுக்கு நல்லது செய்ய அரசியல் சிறந்த வழிதான் என்று புரிந்து கொண்டு அரசியலை விரும்பி ஏற்று எப்படி நினைத்ததை சாதித்தார் என்பது கதை.

சூர்யாவின் நரம்பு தெறிக்கும் நடிப்பை சிங்கம் டிரைலஜியில் பார்த்து சிலிர்த்திருக்கிறோம். அதைத் தாண்டி இதில் அப்படி ஒரு அற்புத நடிப்பு சூர்யாவுடையது. அதில் மயங்கிப் போய் செல்வராகவனும் அங்கங்கே ‘கட்’ சொல்ல முடியாமல் தடுமாறியிருக்கிறார்.

சூர்யாவின் ஃபேவரிட் ‘ஒன்றரை டன்’ அடியும் அப்படித்தான். ஒரு காட்சியில் கழிவறைக்குள் அவர் சிக்கிக் கொள்ள, கதவை உடைத்து அவரைத் தாக்கும் இருபதுக்கு மேற்பட்டோரை அவர் அடித்துத் துவைக்கும் வேகம் சூர்யா ரசிகர்களை ஒன்ஸ்மோர் கேட்க அல்லது பார்க்க வைக்கும்.

ஆனால், சிறந்த நடிகையாக நாம் அறிந்து வைத்திருக்கும் சாய் பல்லவியைத்தான் ஒரே கேப்ஸ்யூலுக்குள் அடைத்து அவரை ரசிக்க விடாமல் செய்திருக்கிறார் இயக்குநர். சூர்யாவின் மனைவியாக வரும் அவர், கணவனை சதா சந்தேகப்பட்டுக்கொண்டே இருக்கிறார். அதைத் தவிர அவருக்கு எந்த வேலையும் இல்லை.

அரசியல் கட்சிகளை ஆளவைக்கவும், அதில் ஆகாதவர்களை மண்ணைக் கவ்வ வைக்கவும் செய்யும் அரசியல் சதுரங்க பிஆர் பாத்திரம் ரக்குல் ப்ரீத் சிங்குக்கு. பிஆர் வேலைக்கு இடையே சூர்யாவைப் பார்த்து வியந்து அவரை ‘பியார்’ வேலையும் செய்வது சினிமா ஃபார்முலா.

முதல்வராக வரும் தேவராஜ், எதிர்கட்சித் தலலைவராக வரும் பொன்வண்ணன், எம்எல்ஏ இளவரசு, சூர்யாவுக்கு உதவி செய்யும் அரசியல்வாதி பாலாசிங் என்று அனைவருமே அந்தந்தப் பாத்திரங்களில் பொருந்தியிருக்கிறார்கள்.

அதில் அதிகம் கவர்வது பாலாசிங்தான். வெகு காலம் கழித்து என்ன ஒரு அதகள நடிப்பு..? கரை வேட்டியின் அருமை பெருமையை உணர்த்த அவர் செய்யும் அலப்பறை அட்டகாசம். அந்த ஒரு நிகழ்வுதான் சூர்யாவையே அரசியலுக்குள் கொண்டுவருகிறது.

ஆனால், அற்புத நடிகர்களான தலைவாசல் விஜய், வேல ராமமூர்த்தியை அங்கங்கே வசனம் கூட இல்லாமல் நிற்க வைத்திருப்பது ஏமாற்றமாக இருக்கிறது.

கடைசியில் சூர்யாவைக் கொல்ல சதிகாரர்கள் முடிவெடுத்தது சரி… ஆனால், அவரைத் தீர்த்துக் கட்ட முடியாவிட்டால் அவரது அம்மாவையும், அப்பாவையும் கொன்று பழிதீர்த்துக் கொள்வது ஒரு அனுபவ அரசியல்வாதி செய்யும் காரியமாகத் தெரியவில்லை. அப்படிச் செய்தால் சூர்யாவின் செல்வாக்கு பன்மடங்கு உயரும் என்பது ஒரு பழுத்த அரசியல்வாதிக்குத் தெரியாதா என்ன..? அதன்படியே அவர் முதல்வர் ஆகிறார்.

தான் கொல்லப்படப் போகிறோம் என்று தெரிந்துகொள்ளும் சூர்யாவும் மனைவியுடன் ஏன் தனியாக வந்து மாட்டிக்கொள்ள வேண்டும்..? செல்வாக்கு படைத்த அரசியல்வாதியாக மாறி அவருக்கு கட் அவுட் எல்லாம் வைத்தும் அவரை போலீஸுக்கு அடையாளம் தெரியவில்லை என்பதும் லாஜிக் சறுக்கல்.

யுவனின் இசை படத்துக்கு பலம். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவும் ஆஸம். திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யப்படுத்தியிருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாகக் கடந்திருக்கும்.

என்ஜிகே – சூர்யாவின் அரசியல் என்ட்ரி..!