இயக்குநர் சேரன் மீண்டும் நடிப்பு, இயக்கம் என தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். ஒரு பக்கம் ‘திருமணம்’ படத்தை இயக்கி நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் ‘ராஜாவுக்கு செக்’ படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.
இந்தப் படத்தை இயக்கியுள்ளார் சாய் ராஜ்குமார். பெயர் புதிது போல் தோன்றினாலும், ஏற்கனவே ’ஜெயம்’ ரவியை வைத்து தமிழில் ’மழை’ என்கிற படத்தை இயக்கிய அதே ராஜ்குமார் தான் இவர். இந்தப் படம் குறித்த சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் அவர்
“ராஜாவுக்கு செக்’ படத்தின் கதையை உருவாக்கி முடித்ததுமே இதில் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்கிற கேள்வி எழுந்தபோது முதல் ஆளாக என் மனதில் தோன்றியவர் சேரன் தான்..
காரணம் சில விஷயங்களை சிலர் சொன்னால்தான் அது சேரவேண்டிய இடத்திற்கு சரியாக சென்று சேரும். இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு முக்கிய பிரச்சனையை மத்திம வயதில் உள்ள அதேசமயம் மக்களுக்கு நன்கு அறிமுகமான சேரன் போன்ற ஒரு நடிகர் சொன்னால் மட்டுமே அது பொதுமக்களிடம் சரியான விதத்தில் சென்று சேரும் என உறுதியாக நம்பினோம்.
‘எமோஷனல் த்ரில்லரா’க உருவாகியுள்ள ‘ராஜாவுக்கு செக்’ , இதுவரை தமிழ் சினிமாவில் வந்திராத ஒரு ஜானரை சேர்ந்த படம் என தைரியமாகச் சொல்வேன்..
இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில்தான் சேரன் தனது ’திருமணம்’ படத்தையும் ஒரே மூச்சில் உருவாக்கிக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் ‘ராஜாவுக்கு செக்’ படத்தில் சேரனுக்கு ஒரு கெட்டப் மாற்ற வேண்டியிருந்தது. அதைக் கணக்கிட்டு, அவர் திருமணம் படத்தில் நடித்து முடித்துவிட்டு வந்ததும், அவரது கெட்டப்பினை மாற்றி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம்..!” என்கிறார் சாய் ராஜ்குமார்
‘ராஜாவுக்கு செக்’ வைக்கும் ராணிகளாக மலையாள திரையுலகைச் சேர்ந்த ‘சரயூ மோகன்’, ‘நந்தனா வர்மா’ மற்றும் ஒரு முக்கியவேடத்தில் ‘சிருஷ்டி டாங்கே’ நடித்துள்ளனர்.
ராஜாவுக்கு மேற்படி கேரள ராணிகள் எப்படி செக் வைக்கிறாங்க பார்ப்போம்..!