‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் கலக்கிய ஆதி,‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். அந்த வெற்றி பெற்ற படத்தை ‘அவ்னி மூவிஸ்’ சார்பில் சுந்தர்.சி தயாரித்திருந்தார்.
இப்போது ஆதி கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தையும் சுந்தர்.சி-யே தயாரிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். இப்படத்திற்கு ‘நட்பே துணை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இப்படத்தில் ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த டி.பார்த்திபன் தேசிங்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படம் ஹாக்கி விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்பதால் பல ஊர்களுக்கும் சென்று படமாக்கியுள்ளார்கள். இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டது. நமது தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதால் ஹாக்கிக்கான பிரதான மைதானத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
ஹாக்கி விளையாட்டு தவிர இப்படத்தில் நட்பு, காதல், குடும்பம் என அனைத்து சிறப்பம்சங்களோடு, குடும்பத்தில் 6 வயது முதல் 60 வயது வரை அனைவரையும் திருப்திபடுத்தும் படமாகவும் இருக்கும். காரைக்கால், தரங்கம்பாடி, பாண்டிச்சேரி மற்றும் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்த நிலையில், அடுத்த வருட ஆரம்பத்தில் திரைக்கு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்படத்தின் முதல்கட்டமாக படத்தின் தலைப்பு இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ளது. ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இசையில் 8 பாடல்கள் உருவாகியுள்ளது. அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவரும் வண்ணம் அமையும். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘டிமாண்டி காலணி’ போன்ற படங்களில் ஒளிப்பதிவு செய்து அசத்திய அரவிந்த் சிங், இப்படத்தையும் ஒளிப்பதிவு செய்கிறார்.
‘நட்பே துணை’ இந்த படம் நல்ல கதையம்சம் கொண்ட படம் என்பதால் இயக்குநர் சுந்தர்.சி மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் மிகப் பெரிய நடிகர் பட்டாளங்களும் நடிக்கின்றனர்.
இதில் கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் விக்னேஷ்காந்த்,பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ்,சுட்டி அரவிந்த்,வினோத்,குகன், ‘புட் சட்னி’ ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி ஆகியோர் நடிக்கிறார்கள். இதன் முதல்பார்வை வீடியோ கீழே…