April 19, 2024
  • April 19, 2024
Breaking News
January 29, 2021

கபடதாரி திரைப்பட விமர்சனம்

By 0 643 Views

வேற்று மொழியில் வெற்றி பெற்ற படங்களுக்கு இன்னொரு மொழியில் வரவேற்பு அதிகமாக இருக்கும். அப்படி கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ‘கபடதாரி’யாக இங்கே வந்திருக்கிறது. எப்போதோ நடந்து விட்ட கொலைகளும் அவை தொடர்பான மர்மங்களுமாக ஒரு மர்டர் மிஸ்டரியாக வெளியாகி இருக்கும் படம் இது.

படத்தின் புரமோஷன்களும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்க, படம் எப்படி என்று பார்க்கலாம்.

வழக்கமான காக்கிச்சட்டைப் போலீஸ் படங்களையே பார்த்து சலித்து விட்டதாலோ என்னவோ ஒரு வித்தியாசத்துக்காக இதில் போக்குவரத்து போலீஸாக வருகிறார் நாயகன் சிபிராஜ்.

அவர் பணி எல்லைக்குட்பட்ட பகுதியில் மெட்ரோ பாலத்துக்கு குழி தோண்டுகிறார்கள். அப்போது மண்ணுக்கடியில் கொலை செய்யப்பட்ட மூவரின் மண்டை ஓடுகளும், எலும்புகளும் கண்டெடுக்கப்படுகின்றன. அவை புதைக்கப்பட்டு நாற்பது ஆண்டுகள் ஆனது தெரிகிறது. இது சம்பந்தமாக ஆய்வு செய்யும் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டரிடம் ஆர்வ மிகுதியால் தன்னையும் இந்த வழக்கை விசாரிக்கும் குழுவில் சேர்த்துக்கொள்ள கேட்கிறார் சிபி. அதற்கு அவர் மறுக்க, தன் சொந்த ரிஸ்க்கில் கொலை பற்றிய தகவல்களைச் சேகரிக்கிறார், 

காலம் கடந்த கேஸ் என்பதால் கிரைம் போலீஸும் அதைக் கைவிட்டுவிட சிபிராஜ் மட்டும் இரவில் துப்பு வேலைகளைத் தொடர, அடுத்தடுத்து திடுக்கிடும் திருப்பங்கள் நிகழ்கின்றன. இறுதியில் உண்மையை சிபிராஜ் கண்டுபிடித்தாரா என்பதுதான் லைன்.

சிபிராஜின் ஓங்குதாங்கான உயரத்துக்கு கம்பீரமான காவல்துறை அதிகாரியாக அவர் கச்சிதமாகப் பொருந்துகிறார். வலுவுள்ள கதைக்களம் என்பதால் அவர் இதில் தன் கரியரை நிலைநிறுத்திக்கொள்ள முழு ஈடுபாட்டுடன் உழைத்திருப்பது தெரிகிறது. ஆனாலும் இந்த உயரத்துக்கு ஏற்ற உடல் மொழியையும் அவர் கற்றுக்கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
 
படத்தின் பலமாக வருகிறார் விருப்ப ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரான நாசர். இவர்தான் மேற்படி வழக்கைக் கையாண்டவர் என்பதால் அவர் நம்பிக்கையைப் பெற்று கொலையின் உண்மைகளைக் கண்டறிய சிபி முயல்வது சிறப்பு. நாசரும் தன் அனுபவ நடிப்பால் பாத்திரத்துக்கு வலு சேர்க்கிறார். ஆனால், சதா சர்வ காலமும் குடித்துக் கொண்டிருப்பதாகவே அவரைக் காட்டுகிறார்கள். ஒரு ஏக்கர் பரப்புள்ள வீட்டில் அவர் அப்படி தனிமையில் வாழ்வதில் எந்த நம்பகத் தன்மையும் இல்லை.
 
இன்னொரு முக்கியமான பாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ் வருகிறார். இதுவரை ஏற்றிராத வகையில் அவர் கொச்சைத் தமிழில் பேசிக்கொண்டு வருவது வித்தியாசமாக இருக்கிறது. ஆனால், அவர் யார் என்ற உண்மை தெரிய வரும்போது அவரது பிளாஷ்பேக் பாத்திரம் இப்படி கொச்சையாக பேசிக்கொண்டு வரவில்லை. வளர வளர அவர் பேச்சு வழக்கு மட்டும் எப்படி மாறியதென்று தெரியவில்லை.
 
வழக்கமாக நாயகன் ஏற்கும் பாத்திரப்பெயரே படத்தின் டைட்டிலாக இருப்பதை மாற்றி வில்லனுக்கு முக்கியத்துவம் தரும் படத்தின் டைட்டிலும், தீம் பாடலும் அந்த வில்லன் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. ஆனால், அவ்வளவு பில்ட் அப் கொடுத்து அறிமுகமாகும் வில்லன் வேடத்துக்கு அதில் நடித்திருக்கும் சம்பத் மைத்ரேயா ஈடு கொடுக்கவில்லை.
 
ஆனால், பிளாஷ்பேக்கில் வரும் அவரது நடிப்பு அற்புதமாக இருக்கிறது. ஒரு மாநில முதல்வராகும் அளவுக்கு தகுதி படைத்த அவர் சாய்தீனா என்ற ஒரே ஒரு அல்லக்கையை வைத்துக்கொண்டு லோக்கல் ரவுடி போல செயல்பட்டுக் கொண்டிருப்பதும் ஒட்டாமல் இருக்கிறது.
 
படத்தின் நாயகி என்று சொல்லத்தக்க வேடத்தில் நந்திதா. காதலும் இல்லை, பாடலும் இல்லை என்ற நிலையில் அவரும் தனித்து நிற்கிறார்.
 
நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகை ரம்யா என்ற கேரக்டரில் சுமன் ரங்கநாதன் வருகிறார், ஜே.எஸ்.கே.சதீஷ்குமாருக்கு படத்தின் முக்கியமான வேடம் என்றாலும் அவர் ஒரு கெஸ்ட் ரோல் அளவுக்கே வருகிறார். சேனல் அதிகாரியாக வரும் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் மிகச் சரியாக அதில் பொருந்துகிறார்.
 
ராசாமதியின் ஒளிப்பதிவு இயல்பாக இருக்கிறது. படத்தின் மிகப்பெரும் பலம் சைமன் கே.கிங்கின் இசை. இரண்டு பாடல்களும் மனத்தில் ரீங்காரம் செய்கின்றன. பின்னணி இசையில் இரண்டே இரண்டு ‘கீ’களை மட்டும் பயன்படுத்தி படத்தின் தன்மையை நமக்கு கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
 
கொல்லப்பட்ட மூவரும் எரிக்கப் பட்டார்களா, எரிந்தபின் புதைக்கப்பட்டார்களா என்பது போன்ற குழப்பங்கள் படத்தில் அங்கங்கே எழுவதைத் தவிர்த்திருக்கலாம். நாற்பது வருடங்களுக்கு எலும்புகள் மக்காமல் இருப்பதும் ஆச்சரியம்.
 
சிபிராஜ் நடித்த படங்களில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட படமாக இது அமைகிறது.
 
லாஜிக்கில் சில குறைகள் இருந்தாலும் கதையும், அதன் தொய்வில்லாத நகர்வும், கடைசியில் ஒவ்வொரு பாத்திரங்களுக்கும் இருக்கும் கதைத் தொடர்பும் சுவாரஸ்யம் சேர்த்து மர்மநாவல் படித்த ஒரு நிறைவைத் தருகிறது.
 
கபடதாரி – கதை படித்த மா(தி)ரி..!