June 13, 2025
  • June 13, 2025
Breaking News
May 16, 2025

ஜோரா கைய தட்டுங்க திரைப்பட விமர்சனம்

By 0 46 Views

வழக்கமாக காமெடி படங்களிலேயே சீரியஸாக நடித்து வரும் யோகி பாபு உண்மையிலேயே சீரியஸாக நடித்திருக்கும் படம் இது. 

காலம் சென்ற அப்பா பிரபல மேஜிக் கலைஞராக இருக்க அவரைப் போலவே புகழப்பட வேண்டும் என்கிற நோக்கில் தானும் மேஜிக் கலைஞராக வர ஆசைப்படுகிறார் யோகி பாபு. 

ஆனால் அவர் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் ஒரு தவறு ஏற்பட்ட விட அதன் காரணமாக மக்களாலும் போலீசாலும் அடித்து விரட்டப்படுகிறார். போதாக்குறைக்கு அவர் வனப்பகுதியில் தங்கி இருக்கும் ஆளரவமற்ற இடத்தில் பக்கத்தில் தங்கி இருக்கும் சில சமூக விரோத இளைஞர்கள் அவருக்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள். 

அதில் ஏற்படும் மோதலில் ‘மேஜிக் செய்ய கை இருந்தால்தானே முடியும்..?’ என்கிற குரோதத்தில் அவர் கை நரம்புகளை லோக்கல் ரவுடியை வைத்து வெட்டுகிறார்கள். 

அசைவற்ற கையை வைத்து  தன்னால் இனி மேஜிக் நிகழ்ச்சிகள் நடத்த முடியாது என்ற நிலையில் யோகிபாபு காணாமல் போகிறார். அதைத்தொடர்ந்து அந்த சமூக விரோதிகளில் ஒவ்வொருவராகக் கொல்லப்பட… அதன் காரணங்களே மீதிக் கதை.

நிற்கிறார்… நடக்கிறார்… போகிறார்… வருகிறார் யோகி பாபு. அவர் செய்யும் மேஜிக் காட்சிகளுக்குதான் கைத்தட்ட முடியவில்லை என்ற நிலையில் காமெடி செய்தாவது சிரிக்க வைத்திருக்கலாம். அவரால் முடிந்தால் செய்ய மாட்டாரா பாவம்..! இயக்குனருக்கே அதில் அக்கறை இல்லை என்கிற நிலையில் அவரும் அது பற்றி அலட்டிக் கொள்ளவே இல்லை.

அவரது தோழி வேடத்தில் (காதலி..?) வரும் சாந்தி ராவுக்கும்ம் யோகி பாபுவை துரத்துவதைத் தவிர வேறு வேலை இல்லை.

போலீஸ் அதிகாரியாக வரும் ஹரிஷ் பெராடி சிறந்த நடிகர் அவரைக் கூட நடிகை விடாமல் செய்திருப்பது இயக்குனரின் திறமை. 

இவர்களுடன் யோகி பாபுவின் உதவியாளராக வரும் கல்கி, மூன்று இளைஞர்களில் ஒருவராக வரும் அருவிபாலா ஆகியோர்  அடையாளம் தெரிகின்றனர்.

புகழ்பெற்ற சீனியர் ஒளிப்பதிவாளர் மது அம்பாட் ஒளிப்பதிவு செய்த படம் என்று டைட்டில் போடுகிறார்கள்.  நம்புவதற்குதான் கடினமாக இருக்கிறது.

துண்டு துண்டாக எடுக்கப்பட்ட காட்சிகளை ஒட்ட வைத்து ஒரு படமாக உருவாக்கி இருக்கிறார்கள் படத்தை இயக்கி இருக்கும் வினிஷ் மில்லினியம் மற்றும் பிரகாஷ் கே.

சினிமாவே ஒரு மேஜிக்தான் என்றிருக்க, அந்த மேஜிக்கை சினிமாவுக்குள் வைத்தும், லாஜிக்கே இல்லாத திரைக்கதையால் எல்லாம் மாயமாகி விடுகிறது.

ஜோரா கைய தட்டுங்க – தட்னாம் பாரு..!

– வேணுஜி