ஏற்கனவே ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ‘, ‘ ஹரஹர மகாதேவி ‘ போன்ற ஆபாச படங்களை எடுத்த இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் அந்த படம் தந்த தைரியத்தில் இப்போது ‘இரண்டாம் குத்து ‘ என்று அதன் தொடர்ச்சியாக இன்னும் ஒரு ஆபாச குப்பையை இயக்கி முடித்திருக்கிறார்.
அதன் டீஸர் நேற்று வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இரண்டாம் குத்து பட டீம் 12 மணிநேரத்தில் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்து விட்டதாக இறுமாப்புக் கொண்டு ஒரு விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள்.
இது ஒரு புறமிருக்க இன்று காலை இயக்குனர் இமயம் பாரதிராஜா ஒரு அறிக்கை வெளியிட்டு அதில் இரண்டாம் குத்து படத்தை வன்மையாக கண்டித்து இருந்தார்.
அதைப் பார்த்த இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் எந்தவித அதிர்ச்சி அடையாமல் பதிலுக்கு பாரதிராஜாவை வம்புக்கு இழுக்கும் முகமாக அவரது டிக் டிக் டிக் படத்தின் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டு இதை பார்க்கும்போது கூசாத கண்கள் என் படத்தை பார்க்கும் போது மட்டும் கூசுவது எப்படி? என்று மல்லுக்கட்ட தயாராகி வருகிறார்.
ஆரம்பத்திலேயே இதுபோன்ற தரம்கட்ட இயக்குனர்களை வளர விட்ட காரணத்தினால் இது போன்ற எதிர்ப்புகளை பாரதிராஜா போன்றவர்கள் சந்தித்தே ஆகவேண்டும்.
இதே சந்தோஷ் பி ஜெயக்குமார் முன்பு எடுத்த ஆபாச குப்பையை எல்லாம் பத்திரிகையாளர்களும் கண்டித்து இருந்தார்கள். அது ஒரு மலிவான விளம்பர ஆகிவிடக்கூடாது என்பதற்காக பலர் அந்தப் படத்தைப் பார்க்கவும் இல்லை. அதனை பற்றிய விமர்சனங்களை வெளியிடவும் இல்லை. விளம்பரம் கிடைத்த போது கூட அதை மறுத்து விட்டார்கள்.
அப்போதெல்லாம் வாய் மூடி மௌனியாக கிடந்த பாரதிராஜா போன்றவர்கள் இப்போது திடீரென்று ஞானம் வந்து அதனை கண்டிக்க முன் வந்ததன் விளைவுதான் இந்த ஆபாசக் குப்பை இயக்குனர் அவரை எதிர்த்து போர்க்கொடி தூக்கி இருப்பதும்.
என்ன செய்யப்போகிறது சினிமா உலகம் என்று பார்ப்போம்.