இப்போதைய சோஷியல் மீடியாவின் ரியல் ஹீரோ சூர்யா சில வருடங்கள் முன்பு நீட் தேர்வை ஆதரித்து நுழைவுத் தேர்விற்கான புத்தகம் ஒன்றை வெளியிட்டார் என்றும், ஆனால் தற்போது அதே நீட் தேர்விற்கு எதிராகப் பேசி வருவதாவும் ஒரு சாரார் குற்றம் சுமத்தி பதிவிடுகின்றனர்.
முன்னாள் நீதிபதி சந்துரு, தற்போதைய விசிக எம்பி ரவிக்குமார், சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்ட நீட் புத்தக வெளியீட்டின் போட்டோ ஒன்று தற்போது பரப்பப்பட்டு வருகிறது.
அகரம் அறக்கட்டளை சார்பாக நடிகர் சூர்யா வெளியிட்ட புத்தகத்தின் தலைப்பே ” நீட் தேர்வு சவால்களும் பயிற்று மொழி சிக்கல்களும் ” என்பதாகும்.
நூலில், ” ஏன் இந்த வெளியீடு ” எனும் தலைப்பில் அகரம் அறக்கட்டளையில் மாணவர் தேர்வு குழுவை வழிநடத்தும் பேராசிரியர் கல்யாணி, நீட் தேர்வு தொடர்பாக பல்வேறு அறிஞர்கள் ஊடகங்களில் வெளியிட்டிருந்த கட்டுரைகளைத் தொகுத்து இந்த நூலை உருவாக்கியுள்ளார் என்கிறார்.
அத்துடன் ” நீட் தேர்வை முன்வைத்து, கல்விசூழலில் நாம் சந்திக்கின்ற சவால்களையும், பயிற்று மொழியில் உள்ள சிக்கல்களையும் புரிந்துகொள்ள இது உதவும் ” என்று சூர்யாவும் கூறியுள்ளார்.
ஆக., நீட் தேர்வின் சவால்களும், பயிற்று மொழியில் உள்ள சிக்கல்கள் குறித்து பல அறிஞர்கள் வெளியிட்ட கட்டுரை தொகுப்பு புத்தகத்தின் மூலம் நீட் தொடர்பான உரையாடல்களும், புரிதலும் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.
ஆனால், அந்த புத்தகம் நீட் ஆதரவு புத்தகம் எனவும், நீட் நுழைவுத் தேர்விற்கான புத்தகம் எனவும் தவறாக பரப்பி வருகிறார்கள் சூர்யா வுக்கும் பெரும்பாலான பொதுமக்களின் கருத்துக்கும் எதிரானவர்கள்.