June 13, 2025
  • June 13, 2025
Breaking News
May 15, 2025

லெவன் திரைப்பட விமர்சனம்

By 0 63 Views

சமீப காலமாகவே தொடர் கொலைகள் நடப்பதும், அதைச் செய்வது யார் என்று போலீஸ் துப்பறிவதுமான கதைகள் நிறையவே வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் வந்திருக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆன இந்தப் படத்தில் என்ன புதுமை என்பதைப் பார்க்கலாம்.

வங்கிக் கொள்ளை ஒன்றில் திறமையாக துப்பறிந்த இணை கமிஷனருக்கு அடுத்தடுத்து நடக்கும் தொடர் கொலை கேஸை துப்பறிய உத்தரவிடுகிறார் போலீஸ் கமிஷனர் ஆடுகளம் நரேன். 

ஒரே மாதிரியாக ஒருவரைக் கொன்று அடையாளம் தெரியாமல் ஏரிக்கும் அந்தக் கேஸ் போலீசுக்கு சவாலாக இருப்பதுடன் அடுத்தடுத்து இதேபோன்று எரிந்த நிலையில் சடலங்கள் கண்டெடுக்கப்படுவதில் ஒரு துப்பும் கிடைக்காமல் போகிறது. 

அத்துடன் இந்தக் கேசை துப்பறிந்து கொண்டிருக்கும் துணை கமிஷனர் ஒரு விபத்தில் கோமா நிலமைக்குப் போய்விட, அந்தக் கேஸ் இப்போது நாயகன் நவீன் சந்திராவிடம் ஒப்படைக்கப்படுகிறது. 

ஒரு கட்டத்தில் எரிக்கப்பட்டவர்கள் எல்லோரும் இரட்டைப் பிறவிகள் என்ற உண்மை தெரியவர, கொலையாளியின் பெயரைக் கூட நவீன் சந்திரா கண்டுபிடித்துவிட, யார் அந்த கொலையாளி என்பதில்தான் ஏகப்பட்ட சஸ்பென்ஸ் வைத்து திரில்லுக்கு உள்ளாகுகிறார் இயக்குனர் லோகேஷ் அஜில்ஸ்.

நவீன் சந்திராவின் உயரத்துக்கும் மிடுக்குக்கும் ஏற்ற துணை கமிஷனர் வேடம் அவரது உடையைப் போலவே பக்காவாக பொருந்துகிறது. முகத்தில் சிரிப்பு வராமல் எப்போதும் விரைப்பாக இருக்கும் அவரையும் ஒரு பெண் காதலித்து வர, அந்தப் பெண்ணையும் புத்திமதி சொல்லி அனுப்பி விடுகிறார். 

இப்படிப்பட்ட ஒரு தேர்ந்த காவல் அதிகாரி தான் இந்த சிக்கலான கேசைத் தீர்க்க முடியும் என்பதை அதிலேயே நாம் உறுதி செய்து விட முடிகிறது. 

இவருடன் களத்தில் உதவி செய்யும் சப்-இன்ஸ்பெக்டர் திலீபனும் தன் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். ஒரு சில படங்களில் வில்லனாக நடித்திருக்கும் அவர், இந்த கதையிலும் வில்லனாகக் கூடும் என்று நாம் அனுமானிப்பது ஒரு கட்டத்தில் உறுதியாகிறது.

அந்த இரட்டையர்கள் பயிலும் பள்ளியை எப்படிக் கற்பனை செய்தாரோ இயக்குனர் என்பது தெரியவில்லை. ஆனால் அதற்காகவே இரட்டைக் குழந்தைகளை வயது வாரியாகக் கூட்டி வந்து நடிக்க வைத்திருப்பது ஆகப்பெரிய முயற்சி. 

அதுவே இந்தப் படத்தை பிற சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் இருந்து வித்தியாசப்படுத்தி விடுகிறது.

அப்படி இரட்டையர்கள் படிக்கும் பள்ளியின் முத்ல்வராக நடித்திருக்கும் அபிராமி சொல்லும் கதையும் கொஞ்சம் உருக்கமானது.

இவர்களுடன் ரித்விகா, ரேயா ஹரி, அர்ஜை உள்ளிட்டு பிற வேடங்களில் நடித்திருப்பவர்களும் கதாபாத்திரங்களோடு பொருந்தி இருக்கிறார்கள். 

படத்தொடக்கத்தில் வரும் வங்கி கொள்ளை எடுத்துக் கொண்ட கதைக்கு சம்பந்தம் இல்லாமல் இருப்பதாக ஒரு கட்டத்தில் தோன்றினாலும், கடைசியில் அதிலிருந்து ஒரு இழை, கொலைகளுக்கான விடை காண உதவி இருப்பது நல்ல உத்தி.

இந்தப் படத்துக்கு இசையமைத்திருப்பவர் டி.இமான் என்பதை நம்ப முடியாத அளவில் அவரும் இந்த க்ரைம் திரில்லர் படத்துக்கு வித்தியாசமான இசையைத் தந்திருக்கிறார்.

கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவும் நேர்த்தியாக இருப்பதுடன் படத்தின் உணர்வுகளைச் சரியாகக் கடத்த உதவுகிறது.

ஆனால், இந்த இரட்டையர் கதையே புதுமையாக இருப்பதால், மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருப்பது ஒரு குறை. குறிப்பாக கடைசியில் கொலையாளி யார் என்பதை நமக்கு சஸ்பென்ஸ் ஆக சொல்ல வேண்டும் என்று திருப்பங்களுக்கு மேல் திருப்பங்களாக அடுக்கிக் கொண்டு போகும் இயக்குனர் அதில் லாஜிக்காக சில விஷயங்களைக் கோட்டை விட்டுவிட்டார்.

சஸ்பென்ஸ் கதைகளில் எப்படிப்பட்ட கேள்விகள் எழுந்தாலும் மறுமுறை சிந்திக்கும்போது அவற்றுக்குள்ளேயே அதில் பதில்கள் இருக்கும் ஆனால் அப்படியும் இந்த படத்தில் சில கேள்விகளுக்கு பதில்கள் இல்லை. அதை இயக்குனரிடம்தான் நேரில் கேட்க வேண்டும் போலிருக்கிறது. 

அதேபோல் இறந்தவர்களுடைய இதயத்தை இதயமாற்று சிகிச்சைக்கு பயன்படுத்த முடியாது என்கிற மருத்துவ உண்மையையும் இயக்குனர் தெரிந்து கொள்ள வேண்டும். 

“பாதிக்கப்பட்டவனை மறந்து விடச் சொல்வதும் பாதிப்புக்கு காரணமானவர்களை மன்னித்து விடச் சொல்வதும் உலகின் தீர்ப்பாக இருக்கிறது. ஆனால் என்னால் மறக்கவும் முடியவில்லை… மன்னிக்கவும் முடியவில்லை..!” என்று கொலையாளி பேசும் வசனம் படு ‘ ஷார்ப் ..!’

மற்றபடி ஒரு கிரைம் சஸ்பென்ஸ் திரில்லரை வித்தியாசமான களத்தில் தந்திருப்பதில்…

லெவன் – கொலையாளியின் ஹெவன்..!

– வேணுஜி