கடவுளை மட்டுமே போற்றும் படங்கள் வந்து கொண்டிருந்த காலம் போய் இப்போது சாத்தானை முன்னிலைப் படுத்தும் படங்களும் வந்து கொண்டிருப்பது காலத்தின் கட்டாயம். அப்படி ஒரு படம்தான் இது.
தங்கை மற்றும் மனைவியுடன் மிகப்பெரிய கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் நாயகன் ஆதர்ஷ் மதிகாந்தனுக்கு அவருடைய சொந்த ஊரில் ஒரு தாத்தா இருப்பதாகவும், அவருக்கு பெரிய அளவில் சொத்துகள் இருப்பதால் அதை உயில் எழுதி அவருக்குக் கொடுக்க விரும்புவதாகவும் ஒரு தகவல் கிடைக்கப் பெறுகிறது.
அம்மா இறந்த நிலையில் தங்கையுடன் வாழ்ந்து வந்த அவருக்கு வேறு சொந்தங்கள் இல்லை என்பதே நினைவில் இருக்க, இந்த தாத்தா உறவு ஆச்சரியம் அளிக்கிறது.
எனவே அவரைச் சந்திக்க மனைவி மற்றும் தங்கையுடன் சொந்த ஊருக்கு வருகிறார். தாத்தா வசிக்கும் பூர்வீக வீடு பராமரிப்பில்லாமல் கிடக்க, அங்கே தாத்தா உயிரை மட்டும் பிடித்துக்கொண்டு படுக்கையில் கிடக்கிறார்.
ஆனால், அங்கு அவர்கள் தங்கிய ஒருசில தினங்களிலேயே அங்கு ஏதோ அமானுஷ்யம் இருப்பதை ஒவ்வொருவராக புரிந்து கொண்டு அங்கிருந்து தப்பிக்க நினைக்கின்றனர்
அவர்கள் அப்படி தப்பிக்க முடிந்ததா, தாத்தா தன் சொத்துக்களை எழுதித் தந்தாரா, அங்கு நிகழும் அமானுஷ்யத்துக்கான காரணங்கள் என்ன என்பதெல்லாம் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஆதர்ஷ் மதிகாந்தன் ஏற்கனவே பழகிய முகம் போலத் தோன்றுகிறார். ஆரம்பத்தில் அப்பாவியாக இருக்கும் அவர், அமானுஷ்ய சக்தி ஆட்டிப்படைக்கும் வேளையில் ஆக்ரோஷமாகத் தெரிகிறார். அப்படி நண்பனையே கொல்லும் காட்சி கொடூரம்.
அவரது மனைவியாக வரும் பவித்ரா அன்பழகனுக்கு பாந்தமான முகம். நடிப்பும்.அவருக்கு நன்றாகவே வருகிறது. கணவனை நம்பி வந்து அவர் படும் துயர் பரிதாபம்.
தங்கையாக வரும் ஜோவிதா லிவிங்ஸ்டன் இந்தத் துயரமான கதையில் பாலைவனப் பசுஞ்சோலையாக இளமை சேர்க்கிறார்.
இவர்களே முதன்மையான பாத்திரங்கள்.ஏற்க, ஆதர்ஷின் அம்மாவாக ஃப்ளாஷ் பேக்கில் வரும் சோனியா அகர்வால் வாழ்க்கையும் துயர் மிகுந்ததாக வருகிறது.
அவரது கணவனாக.வரும் அருவி மதன், சிறிய பாத்திரம் ஏற்றாலும் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
ஆதர்ஷின் பிரச்சினையைத் தீர்க்க வந்த லிவிங்ஸ்டன், அவரது குருநாதர் கே.பாக்யராஜ் போன்றோர் பெரும்பாலும் புதுவகங்களே நடிக்கும் இந்தப் படத்துக்கு பெருமை சேர்த்து இருக்கின்றனர்.
இவர்களுடன் அமுதவாணன், மதன்குமார் தக்ஷிணாமூர்த்தி, ரபீக் பாட்ஷா உள்ளிட்டோர் அவரவர்களது பாத்திரங்களை நிறைவு செய்கிறார்கள்.
பெரும்பாலும் படத்தை காப்பாற்றியிருப்பவர்கள் இசையமைப்பாளர் விக்னேஷ்.ஆர் மற்றும் ஒளிப்பதிவாளர் சங்கீத் மணிகோபால். படத்தின் பதட்டத்தை பெருமளவு இருவரது திறமையும் கூட்டி இருக்கிறது.
படத்தை எழுதி இயக்கியிருக்கும் கே. எஸ்.கிஷன் முடிவற்ற ஒரு கதையைச் சொல்லி இருக்கிறார். அவர் நினைத்திருந்தால் இந்த பதட்டமான படத்தை பாசிட்டிவாக முடித்து இருக்கலாம்.
ஆனால் அடுத்த பகுதியைத் திரையாக்கும் எண்ணம் இருக்கிறதோ என்னவோ கதையை முடிக்காமல் விட்டிருக்கிறார்.
அதேபோன்று இதுபோல படங்களில் சாத்தான் சக்தியை பலவீனப்படுத்த தெய்வ சக்தி பயன்படுத்தப்பட்டு இருக்கும். ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் முழுக்க முழுக்க சாத்தான் பக்கமே படத்தின் திரைக்கதை சாய்ந்திருக்கிறது.
டார்க் ஜெயன்ட் – மை டியர் சாத்தான்..!
– வேணுஜி