September 23, 2026
  • September 23, 2026
Breaking News
  • Home
  • Uncategorized
  • நூறு சாமி திரைப்பட விமர்சனம்
June 19, 2026

நூறு சாமி திரைப்பட விமர்சனம்

By 0 130 Views

தாயைப் புனிதமானவளாக மட்டுமே போற்றி வந்த சினிமாவில் முதல் முறையாக தாயை ஒரு மனுஷியாகப் பார்த்த முதல் படம் இது….

அதையும் மகன்களே முன் நின்று தாயின் உண்மையான தேவையை நிறைவேற்றிய முதல் சினிமாக் கதையும் கூட…

கள்ளக்குறிச்சியில் கணவன் இன்றி வாழும் சுவாசிகாவுக்கு இரண்டு மகன்கள். அவர்கள் பதின் பருவம் கொண்ட வேளையில் தனக்கு ஒரு துணை வேண்டும் என்பது ஆசைப்படுகிறார் சுவாசிகா.

ஆனால் உலக அனுபவம் பெறாத மகன்களால் அதை ஜீரணிக்க முடியாமல் போகவே அதை விட்டுவிடுகிறார். ஆனால் பதின் பருவம் கடந்து முதிர்ச்சி நிலையை அடையும் போது தாயின் பரிதவிப்பு மகன்களுக்குப் புரிய… அவர்கள் எடுத்த முடிவு என்ன… அதன் விளைவுகள் என்ன என்பதுதான் கதை.

இயக்குனர் சசியின் படம் என்றாலே அதில் வாழ்க்கை அனுபவங்கள் ஏராளமாக விரவிக் கிடக்கும். அதிலும் இது உண்மை சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட கதை ஆனதால் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. 

கதையின் நாயகியாக வரும் சுவாசிகாதான் படம் முழுவதும் நிறைந்திருக்கிறார். எத்தனை விதமான உணர்ச்சிகளும் உணர்வுகளும் அவரது முகத்தில் வந்து போகின்றன என்பதை கணக்கில் எடுக்கவே முடியாது. 

அணுக்கள் எல்லாம் நடிப்பாக இருப்பவர்களால் மட்டுமே இப்படி சுவாசிகா போல் நடித்திருக்க முடியும். அந்த நடிப்பு அவரது செய்கையை நியாயப்படுத்தவும் செய்கிறது.

படம் முழுக்க சசியின் எதார்த்தமான யோசிக்க வைக்கும் வசனங்களும் சுவாசிகாவின் இணையற்ற நடிப்பும்தான் அரசாட்சி புரிகின்றன..!

படத்தின் பின்பகுதியில்தான் வருகிறார் விஜய் ஆண்டனி. ஆனால் அவரது  அறிமுகத்துக்குப் பின் படத்தின் திரைக்கதையில் பரபரப்பு பற்றிக்கொள்கிறது. 

விஜய் ஆண்டனியின் நடிப்பும் இதுவரை நாம் பார்த்திராத வேற லெவல்..!

சுவாசிகாவின் மகன்களாக நடித்திருக்கும் அஜய் திஷானும், சக்தியும் நிஜ அண்ணன் தம்பிகள் போலவே வாழ்ந்திருக்கின்றனர். 

இருவரது ஜோடிகளாக வரும் காவியா அனிலும், பாடினி குமாரும் தங்கள் பாத்திரங்களில் சிறக்கிறார்கள்.

சுவாசிகாவின் அன்பான அண்ணன் கருணாஸின் அதிரடி மாற்றம் நம்மை வெல வெலக்க வைக்கிறது.

இவர்களுடன் பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், லிஜோ மோல், பக்ஸ், வினோதினி உள்ளிட்டோர் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் செய்கிறார்கள்.

கதை நடக்கும் கிராமத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.பி. தர்ஷன் கிஷோர். 

தாயின் புகழ் சொல்லும் பாடல்களில் பாலாஜி ஸ்ரீராம் இசைத்திருக்கும் ‘அம்மா அம்மாதான்..’ பாடலும் காலம் கடந்து நிற்கும்.

தந்தை இல்லாத பிள்ளைகள் தாயை இதை விடப் பெருமைப்படுத்த முடியாது..!

நூறு சாமி – நூற்றுக்கு எழுபது சாமி..!

– வேணுஜி