September 23, 2026
  • September 23, 2026
Breaking News

பீப் (BEEP) திரைப்பட விமர்சனம்

By on September 23, 2026 0 3 Views

படத்தின் தலைப்பை பார்த்து உங்களுக்கு சிம்பு ஞாபகம் வந்தால் நீங்கள் ரசிகப் புலி. ஆனால், படம் அதைப் பற்றியதல்ல.

ஒரு புகைப்படத்தைப் பார்த்தாலே அதை வைத்து அங்கே நடந்ததைக் கண்டுபிடித்து விடும் ஆற்றல் முதுநிலை டிகிரி படிக்கும் நாயகன் ராகவுக்கு இருக்கிறது. எனவே, அதைக் கொண்டு அவர் ஒரு உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதானே நியதி..?

அத்துடன் பிரபல நடிகை ஒருவரின் பரம ரசிகராக இருக்கும் அவர் அந்த நடிகையையைச் சந்திக்கும் முயற்சியில்  யாமினி லக்ஷ்மணன் நட்பு கிடைக்கிறது.

யாமினி ஒரு பாலியல் தொழிலாளியாக இருந்தாலும், ராகவுடன் மனம்விட்டுப் பழகி வருகிறார். இந்நிலையில் எதிர்பாராமல் யாமினி ஒரு அடுக்குமாடியிலிருந்து கீழே விழுந்து இறந்து போகிறார்.

அதை போலீஸ் ஒருபக்கம் துப்பறிய, தன் மூளையை வைத்து இன்னொரு பக்கம் ராகவ் துப்பறிய, அவரது முயற்சி தோல்வியில் முடிகிறது.

கடைசியில் நடந்த உண்மை என்ன, அதை ராகவ் கண்டுபிடித்தாரா என்பதெல்லாம் சஸ்பென்ஸ் கலந்த மர்டர் மிஸ்டரியின் மறுபக்கம்.

பல காலமாகவே கல்லூரி மாணவர் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கும் கதையின் நாயகன் ராகவ், இந்தப் படத்துக்கும் பக்காவாகப் பொருந்தியிருக்கிறார். ஆனால், இளைஞரான அவர் ஏன் அறுபதுகளில் வைக்கும் நூல் மீசையுடன் திரிகிறார் என்பது புரியவில்லை.

அவரைவிட ஓங்குதங்காக இருக்கும்  யாமினி லக்‌ஷ்மணன், கவர்ச்சி காட்டி, தன் பாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கிறார். சதா போதையில் இருக்கும் அவரிடம் அதுபற்றி ராகவ் கேட்கும்போது, “ஒருநாளில் எத்தனை ஆண்களுடன் நெருங்கிப் பழக வேண்டும் தெரியுமா..?” என்று கேட்கும்போது பாலியல் தொழிலில் இருக்கும் அவரது நிலையைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.

மனைவியால் வெறுக்கப்படும் பேராசிரியர் சிதம்பரம் பாத்திரத்தில் நடித்திருக்கும் எல்.சண்முக சுந்தரம், இயல்பாக நடித்தே கவனம் கவர்கிறார். போலீசிடம் அசராமல் அவர் விசாரணையை எதிர்கொள்வது அபாரம்.

நயன் என்ற நடிகை வேடத்தில் வரும் ஐடி ஆச்சார்யா மற்றும் நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் பிரேர்னா கண்ணா, அருண் மோகன், ஷ்ரவண் ராமகிருஷ்ணன், ஜுஹி சர்மா உள்ளிட்டோர் புதிய முகங்களாக இருப்பதே படத்தின் இயல்புத் தன்மைக்கு உதவுகிறது.

ஒளிப்பதிவாளர் பிரதீப் பத்ம குமாரும், இசையமைப்பாளர் பிரசாந்த் விஹாரியும் ஒரு கிரைம் திரில்லரை முடிந்த அளவுக்கு மெருகேற்றி இருக்கிறார்கள்.

ஒரு கிரைம் திரில்லரை அறிவியல் கலந்து கொடுத்திருந்தாலும் அதிலும் புதுமுகங்கள் நடித்திருப்பதால் நாம் தொய்வடையாமல் இருக்கவும் கிளாமர் கலந்து படத்தைக் கொடுத்திருக்கும் இயக்குநர் எல்.சண்முக சுந்தரத்தின் புத்திசாலித்தனத்தை பாராட்டலாம்.

பீப் – காசுக்கேற்ற தோசை..!

– வேணுஜி