தமிழ்நாட்டில் நடந்த ஒரு ஆணவக் கொலைக்கு சந்தர்ப்ப வசத்தால் உதவிய ஒரு மருத்துவரின் மனசாட்சியை பாரிஸ் நகரில் உள்ள ஒரு காபி ஷாப் உலுக்கியது என்றால் நம்ப முடிகிறதா?
அதை நம்ப வைக்கும் முகமாக ஒரு திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குநர் சரஜ் சீலன்.
இளம் ஜோடிகளான விஜய் விஷ்வாவும் அர்ச்சனாவும் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாக தயாராகிறார்கள்.
இந்த நேரத்தில் இந்தியாவில் இருக்கும் அர்ச்சனாவின் அப்பா குரு சோமசுந்தரமும், அம்மா அனுமோலும் பிரிந்து வாழும் தகவல் கிடைக்கிறது.
காதல் திருமணம் செய்து கொண்டு உலகின் மிகச்சிறந்த ஜோடியாக வாழ்ந்து வந்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்ன பிரச்சனை என்பதைத் தெரிந்து அவர்களை ஒன்று சேர்த்து விட்டுதான் நமது கல்யாணம் என்று முடிவு செய்து இந்தியாவுக்கு வருகிறார் அர்ச்சனா. அவர் சொல்வதே வேதம் என்று அவருடன் கிளம்பி வருகிறார் விஜய் விஷ்வாவும்.
இங்கு வந்து பெற்றோரை சந்திக்கும் போதுதான் தெரிகிறது, ஒரு ஆணவக் கொலைக்கு அவரையும் அறியாமல் அப்பா உதவியாக இருந்தததால் அம்மா அதன் காரணமாக அவரை விட்டு பிரிந்து சென்றார் என்பது.
ஏன் அப்படி குரு சோமசுந்தரம் நடந்து கொண்டார்..? அதற்கும் பாரிஸில் இருக்கும் காபி ஷாப்புக்கும் என்ன சம்பந்தம்..? பெண்ணியவாதியும் பிடிவாதக்காரருமான அனு மோலை சமாதானப்படுத்தி அப்பாவுடன் சேர்த்து வைக்க அர்ச்சனாவால் முடிந்ததா..?
போன்ற கேள்விகளுக்கெல்லாம் படத்தின் பின் பாதி பதில் சொல்கிறது.
அனு மோலின் பாத்திரம் அறிமுகமாவதிலிருந்து அவர் எப்படிப்பட்ட பெண்ணியவாதி என்பது புரிந்து போகிறது. வீட்டு பீரோ கதவுகளில் கூட அம்பேத்கரையும் பெரியாரையும் ஒட்டி வைத்திருக்கும் அவர், அந்த பாத்திரத்திறகு தன் நடிப்பின் மூலம் உயிர் கொடுத்து இருக்கிறார்.
கணவனே ஆனாலும் நீதி தவறினால் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் என்கிற அவரது பிடிவாதம் அந்தப் பாத்திரத்தைத் தூக்கிப் பிடிக்கிறது.
அதேபோல் குடும்பத்து உறுப்பினர்களின் நலனுக்காக அப்படி ஒரு செயலுக்கு உடந்தையான மருத்துவர் குரு சோமசுந்தரம் அந்த காரணத்தினாலயே அரசு வேலையை விட்டுவிட்டு தனியார் மருத்துவமனையில் பணிபுரிவது அவரது பாத்திரத்தை உணர்த்துகிறது.
நேர்மையான அரசு மருத்துவராக அவர் நடந்து கொள்வதும், கடைசியில் நடந்த குற்றத்துக்காக தண்டனையை ஏற்றுக் கொள்ள முன்வருவதும் அந்த பாத்திரத்தின் மீது உள்ள மதிப்பை இரு மடங்காக்குகிறது.
அப்படி ஒரு நேர்மையான மருத்துவராகவே வாழ்ந்திருக்கிறார் குரு சோமசுந்தரம்.
ஆனால் என்ன காரணத்துக்காக அப்படி செயல்பட்டார் என்பதை அழுத்தமாக மனைவியிடமும் மற்றவர்களிடமும் அவர் ஏன் சொல்லவில்லை என்பது புரியவில்லை.
விஜய் விஷ்வா மற்றும் அர்ச்சனாவுக்கு ஒரு டூயட் பாடியது தவிர வேறு காதல் காட்சிகள் பெரும்பாலும் இல்லை.
படத்தின் உயிர்நாடியாக வரும் மற்றொரு ஜோடியான சாய் விக்கி மற்றும் நயனா சாய் பாத்திரங்களும் அவர்களுக்கு நேரும் கொடுமையும் மனதை பதை பதைக்க வைக்கிறது.
வெளிநாட்டு காட்சிகளையும் உள்நாட்டு காட்சிகளையும் சரியான விதத்தில் மேட்ச் செய்து கதையை நம்ப வைக்கிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ்.ஜி,
கே இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. பின்னணி இசையில் தேவையில்லாத சத்தங்களை தவிர்த்து நிசப்தத்தை அதிகமாக பயன்படுத்தியிருப்பது படத்தின் நேர்த்தியை கூட்டி இருக்கிறது.
தேனைத் தடவி மருந்தைக் கொடுப்பது போல் ஆணவக் கொலை என்கிற முக்கியமான பிரச்சினையை ஒரு இயல்பான குடும்பக் கதைக்குள் வைத்து நம்மை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் சரஜ் சீலன்.
பொறுப்புள்ள ஒரு மருத்துவரும், அவரது பொறியாளர் மனைவியும் சமூக பிரச்சனைக்காக பிரிந்து வாழ்கிறார்கள் என்பது புதிய கதைக் களம். அதில் பயணித்து இந்த கதையை சொல்லி இருப்பதால் நம்மால் அலுப்பு இன்றி படத்தில் லயித்து பயணிக்க முடிகிறது.
அருமையாக செல்லும் திரைக்கதை கடைசியில் பட்ஜெட் பற்றாக்குறையாலோ என்னவோ சட்டென்று முடிந்து விடுகிறது.
அத்துடன் முதல் பாதியில் அத்தனை சீரியஸாக சென்று கொண்டிருந்த கதை இரண்டாவது பாதியில் சற்று காமெடியாக மாறி முடிவதில் பலம் குறைந்து விடுகிறது.
இருந்தாலும் ஒரு சமூக பிரச்சனையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற எண்ணத்துக்காகவும், பொறுப்பான அதிகாரிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முன்னிறுத்தி இருப்பதால் இந்தப் படம் ஒரு பாடமாகவும் அமைகிறது.
பாரிஸ் கஃபே – பாராட்டு பொக்கே..!
– வேணுஜி